
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தின் டெல்டா பகுதிகளில் சம்பா நெல் நடவுப் பணியானது வேகம் எடுத்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்த ஆண்டுக்கான தொகுப்பில் தமிழக அரசு அறிமுகப் படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐஆர் இருபது, ஆயிரத்து ஒன்பது, கோ நாற்பத்தி மூன்று, வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொட்டும் மழையிலும் விவசாயக் கூலித் தொழிலாளிகள் வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு நடவு நடும்போது வயலில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என்பதற்காகவும், தங்கள் உடல் சோர்வினைப் போக்கி, மனம் உற்சாகம் கொள்ளவும் அவர்கள் நாட்டுப்புற பாடல்களைப் பாடுவது வழக்கம். சமீப காலமாக கிராமத்து வயல்வெளிகளில் அந்தப் பழக்கம் அருகிப் போயிற்று. இன்றைய தலைமுறையினருக்கு இது பார்க்கவும் கேட்கவும் புதிதான அனுபவமாக இருக்கும்.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும் அதன் மூலமாக நல்ல விளைச்சலைத் தருவதையும் உறுதி செய்துள்ளனர். திருமானூர் அருகே வெங்கனூர் கிராமத்தில் வயலில் நடவு நடைபெற்றது. அப்போது பெண்கள் வயலில் நாற்று நடவு செய்து கொண்டே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
பார்ப்போம்... கேட்போம்... மகிழ்வோம்... விவசாயிகளைப் போற்றுவோம்!