அணிலோடு... விளையாடு...

அணிலோடு...  விளையாடு...

 படங்கள் : பொன்னேரி மில்டன்.

டந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் அணில்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் பொன்னேரி நித்தியவாணி முகுந்த்ராவ் தம்பதியினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரில் கும்மங்கலம் பகுதியில் உள்ளது அவர்களது வீடு. ஏரியாவில் அவர்களுக்கு ‘அணில் வளர்க்கும் வீட்டார்கள்’ என்கிற பெயரே நிலைத்துப் போனது. “எத்தனை அணில்கள்?” என்றோம் அவர்களிடம். “ஐந்து” என்றனர். நமக்கு மேலும் ஆர்வம் தோன்றியது. நித்தியவாணி என்பவரிடம் பேசினோம்.

முதன்முதலா அணில் உங்கள் வீட்டுக்கு எப்படி வந்தது?

ங்கள் வீட்டுக்கு அதுவா வரலைங்க. நாங்களா அதனை அழைச்சுட்டு வந்தோம். பிறந்த ஒரு நாள் ரெண்டு நாள் குஞ்சாக அது இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா. அதைப் பார்க்க போயிருந்தோம் குடும்பத்தோட. தீமிதி நடந்துட்டு இருக்கு. ஒரு மரக் கிளையில “கீச்சு... கீச்சு”னு எதோ அணில் சத்தம் கேட்டது. என்னோட கணவர் தான் முதலில் பார்த்தார். அவருக்கு மனது கேட்கவில்லை. என்னிடமும் காட்டினார். மரக் கிளையில் ஒரு சின்னோண்டு அணில் குஞ்சு மட்டும் கத்திட்டே இருந்தது. பக்கத்தில் எந்த அணிலுமே இல்லை. அதனோட தாய் அணிலையும் காணோம். என் கணவர் யாரோ ஒரு பையனை மரத்திலே ஏறச் சொல்லி அந்த அணில் குஞ்சை பத்திரமா தூக்கிட்டு வரச் சொன்னார். பையன் தூக்கி வந்து அதை என்னோட உள்ளங்கைகளில் வைத்தான். அந்த அணில் குஞ்சு அவ்வளவு மிருதுவா இருந்தது. கண்ணு கூட இன்னும் முழிக்காம இருந்தது. அப்பவே வீட்டுக்குக் கொண்டு வந்துட்டோம். அதுக்கு ’ராமு’னு பெயர் வைத்தோம். அன்னியிலேந்து எங்க வீட்டை விட்டு இன்னும் எங்கேயும் போகலை அந்த அணில். வருகிற ஜூன் மாதம் வந்தால் ராமுவுக்கு நான்கு ஆண்டுகள் முடியப் போகுது. 

பிறந்த அணில் குஞ்சினை வீட்டில் வைத்து எவ்விதம் வளர்த்தீர்கள்?

டியில் போட்டுக் கொண்டு இங்க் பில்லரில் பால் உறிஞ்சி வைத்து, அணில் குஞ்சுக்குப் புகட்டினேன். குடிக்கத் தொடங்கி விட்டது. வளர்ந்து மூன்று வயது முடிந்த போதிலும் இப்போதும் இங்க் பில்லரில் தான் பால் குடித்து வருகிறான் ராமு. அவனுக்கு என்று ஒரு கூண்டு, அதிலே அவன் படுத்துக் கொள்ள ஓரிடம் என்று அந்தக் கூண்டினை உருவாக்கினோம். அது தான் அவனது வீடு.

மற்ற அணில்கள் எல்லாம் எப்போது உங்கள் வீட்டுக்கு வந்தன?

ந்த அணிலும் தானா வந்தது இல்லை. இரண்டு ஆண்டுக்கு முன்பாக ஓரிடத்தில் தாய் அணில் இல்லாமல் இரண்டு குஞ்சு அணில்கள் தவித்துக் கொண்டிருந்தன. அவைகளை வீட்டுக்குக் கொண்டு வந்தோம். ராமுவை வளர்த்தது போலவே அவைகளையும் வளர்க்கத் தொடங்கினோம். ஒரு ஆண்டுக்கு முன்னாடி இரண்டு அணில் குஞ்சு ஒரு மரத்தடியில தவித்தபடி சுருண்டு படுத்திருந்தது. பின்னர் அவைகளையும் வீட்டுக்கு கொண்டு வந்தோம். இப்போது அணில் ராமுவைச் சேர்த்து மொத்தம் ஐந்து அணில்கள் எங்கள் வீட்டில் சுகமாக சொகுசாக வளர்ந்து வருகின்றன. இவைகளுக்கு எல்லாம் ஹீரோ ராமு தான். அவன்தான் மூத்தவன்.

இத்தனைப் பாசமாக வளர்க்கிறீர்கள் என்றால், வீட்டில் இவைகளைத் தனியாக விட்டு விட்டு எங்கும் போய் வர முடியாதே?

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இப்படித்தான் இருந்து வருகிறோம். வீட்டில் யாராவது ஒருவர் இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வோம். தப்பித்தவறி எல்லோரும் எங்காவது ஊருக்குப் போய் விட்டு இரண்டு நாட்கள் கழித்து வந்தால் போதும். வீட்டுக்குள்ளே வந்தவுடன் ராமு அணில் தான் ரொம்பவே கோபித்துக் கொள்வான். சகஜமாக வீட்டில் இருக்கும் போது ராமுன்னு கூப்பிட்டாலே, உடனே துள்ளிக் குதித்து ஓடி வருவான். வீட்டைப் பூட்டி விட்டு இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்து ராமுன்னு குரல் கொடுத்தால், கோபித்துக் கொண்டு அந்தக் கூண்டை விட்டு வெளியே வர மாட்டான். அதையும் மீறி நாங்க அவன் பக்கத்துல போனால், அவன் தலையைத் திருப்பிக் கொள்வான். எங்களுக்கு சிரிப்பு வந்துவிடும். இந்த ராமு அணில் மட்டும்தான் இப்படிச் செய்வான். மற்ற அணில்கள் அப்படிச் செய்வதில்லை.

இந்த அணில்களுக்கு சாப்பிட என்ன தருகிறீர்கள்?

வீட்டில் நாங்க சாப்பிடுற எல்லாமும் இந்த அணில்கள் சாப்பிடும். பழத் துண்டுகள் நறுக்கிப் போடுவோம். இதிலும் ராமு அணில் ரொம்பவே ஸ்பெசல். தோசை சுட்டு தட்டுல வெச்சுட்டாப் போதும். அந்த வாசத்துக்கு எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவான். ஆனால், இட்லி அவனுக்குப் பிடிக்காது.  அதுபோல ஐஸ்க்ரீம் சூப்பராகச் சாப்பிடுவான். வெளியாளுங்க என்ன தந்தாலும் இந்த ஐந்து அணில்களும் அவைகளை முகர்ந்து கூடப் பார்க்காது. நாங்கள் தந்தால் தான் வந்து சாப்பிடும்.

கூண்டுக்குள்ளே ராமு அணில் தூங்கிட்டு இருக்கும். நான் ராமுன்னு குரல் கொடுத்தால் உடனே அந்தக் கூண்டில் இருந்து ஸ்கிரீனை விலக்கிட்டு தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்ப்பான் ராமு. என்னோட தோள்களில் ஏறி விளையாடுவான். அப்போது என் கணவர் சும்மா விளையாட்டுக்காக ராமு அணிலை அடிக்கிற மாதிரி கை விரல்களைத் தூக்கிக் காட்டுவாரு. ராமு அணிலும் அதைப் போலவே தன்னோட முன்னங்கைகளைத் தூக்கிக் காட்டுவான். நான் கடைக்குப் போனால் என் பின்னாடியே ஓடி வருவான். ராமு வீட்டுக்குப் போடா உன்னைய நாய் பூனையெல்லாம் தூக்கிட்டுப் போய்டும்னு சொன்னால், உடனே திரும்பி வீட்டுக்குள்ளே ஓடிப் போய்டுவான். 

ராமுவுக்கு மட்டும் தனியா ஒரு கூண்டு வைத்திருக்கோம். மற்றதுகள் ரெண்டு ரெண்டுக்கும் ஒவ்வொரு கூண்டுனு இரண்டு கூண்டுகள். மொத்தம் மூன்று கூண்டுகள் தயாரித்து வைத்திருக்கிறோம். எங்கள் வீடும் அந்தக் கூடுகளும் நாங்களும் தான் அந்த ஐந்து அணில்களோட உலகம். எங்களுக்கும் அதுவே உலகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com