பொங்கலோ..!!!  பொங்கல்...!!!

பொங்கலோ..!!! பொங்கல்...!!!

தமிழர்களால் நிறைய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரும் குதூகலமாகத் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை, பொங்கல் திருநாளாகும். குறிப்பாக விவசாயிகள் குடும்பத்துடன் கூடி, தங்களுக்கு வாழ்வளிக்கும் சூரிய பகவானுக்கு படையலிட்டு, வணங்கி நன்றி கூறும் நாள் பொங்கல் பண்டிகையாகும்.

தை ஒன்றாம் நாள் மகர ராசியில் சூரியன் பிவேசிக்கிறார். இந்த தை மாதம் முதல் அடுத்த தைமாதம் வரை ஒரு ஆண்டுக்காலம், 'திருவள்ளுவராண்டு' என்றழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகையை வடமாநிலங்களில், 'மகர சங்கராந்தி' என்ற பெயரில், சூரியபகாவனை வணங்குகிறார்கள்.

பொங்கல்
பொங்கல்

இந்தப் பண்டிகை உலகெங்கும் வசிக்கும் தமிழர்களால் கொண்டாடப் படுகிறது. இது, 'உழவர் திருநாள்', மற்றும் 'அறுவடைத் திருநாள்' என்றும் கொண்டாடப்படுகிறது. ஆடிமாதம் பயிரிட ஆரம்பித்து, தை மாதத்தில் அறுவடை செய்து, அந்த புத்தரிசியால் பொங்கல் பொங்கி, சூரியனுக்கு படைப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இல்லங்களில் ஆனந்தம் தவழும்.

கிராமங்களில் வாசலில் சாணம் தெளித்து, வண்ண வண்ணக் கொலங்கள் இட்டு, கோலத்தின் நடுவே பூசணிப் பூ நட்டு வைப்பர். முன்னதாக வீடுகளைச் சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து வைத்திருப்பர்.மாவிலை தோரணங்கள் முன்பக்கம் அலங்கரிக்கும். குடும்பத்தினர் அனைவரும் காலையிலேயே புத்தாடைகள் அணிந்து, நடு வாசலை சுத்தம் செய்து, கோலமிட்டு அங்கே புது பொங்கல் பானையில், புத்தரிசி, வெல்லம், ஏலம், முந்திரி, சிறுபருப்பு மற்றும் பால் போன்றவைகளையிட்டு, புது மண் அடுப்பில் வைத்து சமைப்பார்கள். வெண் பொங்கலும் உண்டு. உலை பொங்கி வரும்போது, 'பொங்கலோ பொங்கலோ' என்று ஓங்கி குரல் விடுப்பார்கள். நகரங்களில், 'இயற்கை எரிவாயு' அடுப்பில் பொங்கலை பொங்கினாலும், பொங்கலோ பொங்கல் என்று குரல் கொடுக்கத் தவறுவதில்லை.

pongal festival
pongal festival

பின்னர் சமைத்த பொங்கலை, மஞ்சள் கிழங்கு கன்று, கரும்பு, போன்றவைகளோடு சூரியனுக்கு படைப்பார்கள். அன்றைய தினம் அறுசுவை விருந்தை, உறவுகளோடு, நட்புகளோடு உண்டு மகிழ்வர். அன்றைய உணவில், பூசணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பிடி கருணை, அவரை, கத்தரி, புடலை, வாழைக்காய் போன்ற காய்கள் அவசியம் இடம்பெறும்.

பொங்குதல் என்றால் மிகுதல், செழித்தல், கொதித்தல் என்று பொருள். சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சங்கக்காலந் தொட்டு வழி வழியே பொங்கல் தினம் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இந்த பொங்கல் விழாக்காலம் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். பொங்கலுக்கு முன்தினம், 'பொகிப்பண்டிகை' கொண்டாடப்படுகிறது. போகிக்கு ஆன்மீக வரலாறு இருந்தாலும், 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற தாத்பரியமே அன்றைய தினம் தொடர்கிறது.

பொங்கலுக்கு மறுதினம், 'மாட்டுப் பொங்கல்' என்ற பண்டிகையை உழவர் பெருமக்கள் கொண்டாடுவர்கள். தனக்கு உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதும், அவைகளை அலங்கரித்து, பலகாரங்களோடு படையலிட்டு வணங்குவதும் நடைபெறும். அன்று மாலை கிராமத்து வீதிகளில், 'ஜல் ஜல்' என சலங்கை ஒலி முழங்க, புழுதி மண் பறக்க, மாட்டு வண்டிகளில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வலம் வருவர்.

karumbu
karumbu

அன்று மறுதினம் கணுப் பொங்கல் அல்லது காணும் பொங்கலாகும். உற்றார், உறவினர்களை கண்டு வருதல், இப்போது ஒரு நாள் வெளியுலகை காணச் செல்லுதல் போன்றவை நடக்கும். உள்ளவர்கள், இல்லாதவர்களுக்கு, பொங்கல் இனாம் என்ற பெயரில், ரூபாய்களை அன்பளிப்பாக வழங்குவார்கள்.

அனைவரும் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு இந்த ஆண்டு, ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு வளர்ந்த கரும்பு போன்றவற்றை, ரேஷன் கடைகள் மூலம், உரியவர்களுக்கு வழங்கியுள்ளது.

இல்லம் செழிக்க, இன்பம் பிறக்க நாமும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com