ஒரு வெறி பிடித்த ரசிகையின் பதிவு!

ஒரு வெறி பிடித்த ரசிகையின் பதிவு!

HAPPY BIRTHDAY RAJINI…

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தலைவரின் பிறந்தநாள். ஆறிலிருந்து 60வரை அனைத்து தரப்பினராலும் ரசிக்கக்கூடிய ரஜினிகாந்த் என்னும் காந்த சக்திக்கு இன்று 72 வது பிறந்தநாள். கலைமகளின் தலைமகன், தமிழகத்தின் பெருமை, ரசிகர்களின் தலைவன், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று ஒய்யாரமாய் அமர்ந்துள்ள நாயகம், அன்றும், இன்றும், என்றும், தமிழக மக்களின் ஒரே சூப்பர் ஸ்டார். காலம் மாற மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள் .ஆனால் தலைவரை பொறுத்தவரை அது மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த கதா பாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் சாத்தியம் தலைவரிடம் மட்டுமே உண்டு. அவரை,' ராகவேந்திரர்' ஆகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. 'கபாலி' யாகவும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. 'பாட்ஷா'வாகவும் ரசிக்க முடிகிறது. 

கடந்த 47 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஆகிய முறையில் கிட்டத்தட்ட 170 க்கும் அதிகமான படங்களில் தலைவர் நடித்துள்ளார் எத்தனை ஸ்டார்களின் படங்கள் வந்தாலும் தலைவரின் படங்களுக்கு இன்றுவரை மவுசு குறையவில்லை. அப்படி ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத முத்திரை பதித்த ரசிகர்கள் கொண்டாடிய டாப் 12 படங்களை என் பார்வையில் பதிவு செய்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே இந்த பதிவு.

அபூர்வ ராகங்கள் (1975)

கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள் 'தான் தலைவர் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான முதல் படம் சிவாஜி ராவ் என்ற இவரது இயற்பெயர் ரஜினிகாந்த் என மாறியதும் இத்திரைப்படத்தில் இருந்துதான்.

 "பைரவி வீடு இதுதானா?" 

"நான் பைரவியின் புருஷன்' என்று தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசிய வசனமே தலைவர் திரைப்படத்தில் பேசிய முதல் வசனம்.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)

வ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் முறை பார்ப்பது போன்று புத்தம் புதிதாக இருக்கும் ஒரு திரைப்படம் தான் 'புவனா ஒரு கேள்விக்குறி'. தலைவர் தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை எழுதிய படங்களில் முக்கியமான படமிது. அப்பாவி காதலனாய்,

அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிதாகட்டும்... 

காதலியை இழந்து சிறகு ஒடிந்து நிற்கும் கையறு நிலையாகட்டும்...

உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்...

சுமித்ராவிடம் ஏக்கம் மிகுந்த குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்... இப்படி படம் முழுக்க தலைவரின் அட்டகாசம் தொடரும். தலைவரின் தனி ஆவர்த்தனம் வேற லெவல். 

அதிலும் குறிப்பாக அண்ணே," நாகராஜ் அண்ணே' என்ற வசனம் பின்னாளில் கொடிகட்டி பறந்த ரஜினி யிஸத்தின் துவக்கம் என்று சொல்லலாம். அந்த கை விரல்களை அப்படி இப்படி என்று தொடக்கி வசனம் பேசும் ரஜினி ஸ்டைல் வரலாற்றின் ஆரம்ப புள்ளி. 'புவனா ஒரு கேள்விக்குறி'தான் ஆனால் தலைவரின் ஆரம்ப கால படங்களில் மிகப்பெரிய ஆச்சரியக்குறியை உண்டாக்கிய படங்களில் இதுவும் ஒன்று.

"விழியிலே மலர்ந்தது"

" ராஜா என்பார் மந்திரி என்பார் "...இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகி பாடி இருப்பார் இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும் அதரிபுதிரி ஹிட். ஆரம்ப கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

பைரவி (1978)

லைவர் தமிழ் சினிமாவில் தனி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் . சூப்பர் ஸ்டார் என்று பெயர் சூட்டியவர் அப்போதைய முன்னணி விநியோகஸ்தான கலைப்புலி எஸ் தாணு (பிளாசா திரையரங்கில் ரஜினியின் 36 அடி உயர கட்அவுட் இந்த படத்திற்காக வைக்கப்பட்டது அப்போது பெரும் பேச்சாக இருந்தது).

முள்ளும் மலரும் (1978)

யக்குனர் மகேந்திரனின் அழியா காவியம். சின்ன சின்ன கோபதாபங் களையும், ஈகோவையும் மிக மிக நுட்பமாக காட்சியாக்கப்பட்டிருக்கும். படத்தில். ஒரு சுய கவுரவம் கொண்ட மனிதனின் வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் மிகுந்த நம்பகத் தன்மையுடன் சொன்னது. வின்ச் ஆப்ரேட்டர் பற்றி எடுக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.

எளிமையும் யதார்த்தமுமான படத்தில் ரஜினி கண் பார்வையிலேயே காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானவை.

காளி நல்லவன் ஆனால் சூழ்நிலை காளியை மோசமான மனிதனைப் போல் தோன்றச் செய்கிறது. தவறாக புரிந்து கொள்ளப்படுவதே படத்தின் மைய புள்ளி... அடக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாட்டை அவ்வப்போது மிக அழகாய் வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி 

காளி பாத்திரம் வெகு நுட்பமானது."கெட்ட பய சார் இந்தக் காளி" தலைமுறை கடந்தும் வசீகரிக்கும் அழகான வசனம். கோபம், பாசம் ,வெறுப்பு இயலாமை எதார்த்தமான நடிப்பில் சிகரத்தை தொட்டிருப்பார் ரஜினி.

'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை... பாடல் 44 வருடங்களை கடந்தும் சும்மா" கிழி" என்ற தன்மை உள்ள பாடல்.  (துரோகம், அவமானம், வலி ,வேதனை நம்மை சூழ்ந்திருக்கும் போது போடா ஜூஜூபி என்று நம்மை முன்னோக்கி உந்தி தள்ளும் பாடலிது) . தலைவர் அதை செதுக்கி நமக்கு கொடுத்தது இன்னும் சிறப்பு. இந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தலைவரின் வெறித்தனமான ஆட்டம் (மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையை தங்க தட்டில் வார்த்து கொடுத்திருப்பார் இசைஞானி). பயமோ தோல்வியோ எதைக் கண்டு அஞ்சினாலும் இந்த பாடலை ஒரு முறை கேட்டால் நம்மேல் நம்மை அறியாமல் ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும்.  ரஜினிக்கு முறையான நடனம் தெரியாவிட்டாலும் இந்தப் பாடலில் அவருடைய ஒவ்வொரு அசைவும் ரசிக்கும்படி இருக்கும்.

ஆறிலிருந்து அறுபது வரை (1979) 

ஜினி என்ற மாஸ் ஹீரோ மிகச்சிறந்த நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பெற்ற படங்களில் ஒன்றுதான் இது. சந்தானம் என்பவரின் வாழ்க்கை வரலாறு என்றே கூறலாம். ஆறு வயதில் குடும்ப பாரத்தை சுமக்க துவங்கி 60 வயதில் மரணத்தை சந்திக்கும் நபரின் வாழ்வில் நிகழும் சம்பவங்கள் இப்படத்தில் முத்து மணிகள் போல கோர்க்கப்பட்டு இருக்கும். இளம் வயதில் தந்தையை இழந்து தம்பி, தங்கைகளை வளர்க்க வேண்டிய கட்டாயம். தன் உழைப்பால் அவர்களை நல்ல நிலைமைக்கு உயர்த்துவார். மனைவி மக்களுடன் வறுமையில் வாடுவார். மனைவியை தீ விபத்தில் பறிகொடுத்து எதிர்காலத்தை நினைத்து வேதனை படும் நிலையில் சந்தானம் எழுத்தாளராக பரிணாமம் எடுப்பார். பணம், புகழ் சேரும். விலகிய உறவுகள் ஒன்றிணையும். தன் மனைவியை நினைவிலேயே உயிர் துறப்பார் சந்தானம். துயரத்தை தாங்கி நிற்கும் கதாபாத்திரத்தை ரஜினி தன் தோளில் தாங்கி இருப்பார். 

படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் தனி ரகம் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ" என்ற பாடல் இன்றளவும் நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல். "வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன காலத்தின் கோலம்புரிந்தது ஞானிதானே நானும்"... எந்த கமர்ஷியலும் செய்யாமல் எந்த ரஜினியிஸமும் திணிக்காமல் மிக மிக நேர்த்தியானதொரு படம் என்பதால்தான் இன்று வரை ரஜினி பட பட்டியலில் தனி இடம் பிடித்திருக்கிறது இந்த படம்.

தில்லு முல்லு (1981)

ஜினியை திரைப்படங்களில் கோபமாக பார்த்தி ருப்போம். அழுகையோடு கூட பார்த்திருப்போம் ஆனால் அவரால் சிரிக்க வைக்க முடியுமா என்று சந்தேகித் தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கும் இந்த திரைப்படம். அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன், இந்திரன் இந்த பெயரை கேட்டவுடன் சிரிப்பு தன்னால் வரும். பொய்களை அஸ்திவாரமாக அடுக்கி வேலைப்பெறும் சந்திரன் அந்த வேலையை தக்க வைக்க மேலும் மேலும் பல பொய்களை அடுக்குவான்‌. அந்த பொய்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம். அதில் வெளிப்படுவது உச்சகட்டஹாஸ்யம். ஒரு கட்டத்தில் சந்திரன் பொய்களின் வளையத்தில் சிக்கி தனக்கு ஒரு தம்பி இருக்குமாறு கூறுவான். அவன் பெயர் இந்திரன் என்பான். அந்தப் பொய்க்கு சந்திரன் கொடுத்த முதல் பெரிய விலை அவன் ஆசையாக வளர்த்த மீசை. 

மீசையை மழித்த பின் திரையில் கருப்பு உடையில் சட்டை பட்டன்கள் திறந்த நிலையில் கண்ணாடி அணிந்து கையில் சங்கிலியோடு ரஜினி கதவை காலால் நீட்டி திறந்து நடந்து வரும் அவரது ஸ்டைல்.... வேற லெவல்! இசை எம் எஸ் வி அவர்கள். ஆபேரி ராகத்தில் அமைந்த ராகங்கள் பதினாறு என்ற பாடல் 40 வருடங்களை கடந்த பிறகும் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கத் செய்யும்.

ஜானி (1982)

த்திரைப்படத்தில் ரஜினி, ஜானி என்ற நூதன திருடனாகவும், வித்தியாசாகர் என்னும் முடி திருத்து பவராகவும் இரட்டை வேடத்தில் கலக்கி இருப்பார். வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை (தீபா) விரும்பி அவளை வீட்டுக்காரியாக்க முடிவு எடுக்கும் சமயத்தில் அவளை ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் செல்வார். அங்கே பாமாவிற்கு தான் எடுக்கும் ஒவ்வொரு உடையையும் விட அங்கிருக்கும் மற்ற உடைகள் சிறப்பானதாக தோன்றும்.. அதை பார்க்கும் ஜானி,

"ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் ஒன்னை விட ஒண்ணு பெட்டராதான் இருக்கும். அதுக்கு ஒரு முடிவே இல்ல?!" அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போக கூடாதுன்னு" சூப்பரா ஒரு வசனம் பேசுவார். இதை எப்போதுமே மனதில் கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும். இத்திரைப்படத்தில் ரஜினிக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையிலான காதல் அத்தியாயங்கள் அழகியல் என்றால் இன்னொரு ரஜினிக்கும் தீபாவிற்கும் இடையில் இடம்பெறும் காதல் உளவியல் ரீதியானவை. இரண்டு விதமான கதாபாத்திரங்களை அவர் கையாண்டிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்தக் கூடியது.

"ஒரு படம் என்ன செய்யும்? என்ற கேள்விக்கு ஒரு படம் எல்லாம் செய்யும்!" என்பதே பதிலாகஅமையும். 

எங்கேயோ கேட்ட குரல் (1982)

த்திரைப்படத்தில் எந்தவிதமான சாகசங்களும் இல்லாமல் அமைதியும் நிதானமும் மிகுந்த கிராமத்து விவசாயியாக நடித்து நம் மனதில் ஃபெவிகால் போட்டு ஒட்டி இருப்பார் ரஜினி. குமரனாக மிகவும் சாதாரண வேடம் தன் புஜபலபராக்கிரமங்களை காட்ட எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒரு வேடம் . கதையின் நாயகனாக, இயக்குனரின் நடிகனாக ரஜினி இப்படத்தில் ஜொலித்திருப்பார்.

இளைஞன், நடுத்தர வயது, முதுமையை தொட்ட மனிதன் என பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை தன் இயல்பான நடிப்பால் வெளிக்கொண்டு வந்திருப்பார். குமரன் என்ற மனிதனின் வாழ்க்கையோடு நம்மை பயணிக்க வைத்திருப்பார். அம்பிகா மீது காதல் கொள்ளும் வாலிப ஏக்கம் ஒருபுறம் என்றால் தன் மீது மயக்கம் கொள்ளும் ராதாவிடம் காட்டும் மென்மையான ஆண்மை ஒருபக்கம் என ரஜினி நடிப்பு படு யதார்த்தமாக இருக்கும். தான் ஆசைப்பட்டவரிடம் காட்டும் காதலில் பாய்ச்சலும், தன்னை ஆசைப்பட்டவரிடம் காட்டும் காதலில் கனிவும் என ரஜினியின் நடிப்பு அட டடடடடா சூப்பர். 

இசையைப் பொறுத்தவரை, "பட்டு வண்ண சேலைக்காரி" பாடல் இன்றும் செவிக்குள் தேன் பாய்ச்சும் கீதம். காதலில் தோல்வி அடைந்த ஆணை கொண்டாடிய சமூகம் திருமண தோல்வி அடைந்த ஆணை கொஞ்சம் கேலிப்பார்வை தான் பார்த்தது. எள்ளி நகையாடியது. அப்படிப்பட்ட ஒரு வேடத்தை அதுவும் ஒரு வணிக சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி ஏற்றது பெரும் ஆச்சரியம்.

'எங்கேயோ கேட்ட குரல் '... நாம் இன்னமும்கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு குரல்.

தளபதி (1991) 

நீண்ட வசனம் பேசிவிட்டு," இது சூர்யா சார் நெருங்காதீங்க" என்ற ஒற்றை வார்த்தையை சொல்வதில் இருக்கும் மாஸ்... அதற்கு இசை ஞானி கொடுக்கும் இசை... மேஜிக். 

நட்பின் அச்சில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக மணிரத்தினம் எடுத்த படம் தளபதி. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிலும் "சின்னதாயவள்" பாடலில் வரும் வயலின் இசை கேட்டு கண் கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 'சுந்தரி… கண்ணால் ஒரு சேதி "ஒரு காவியத்தையே படைத்திருக்கும் இசையும் அதற்கு ஏற்ப காட்சி அமைப்பும் ஒரு காவியம் என்றே சொல்லலாம். இதில் தலைவர் தலைமுடியை கட்டி கொண்டை போல போட்டுக் கொண்டு வெற்று உடம்புடன் இருக்கும் காட்சி அசத்தலாகவும் புதுமையாகவும் இருக்கும். தலைவரை எப்போதும் ஒரே மாதிரியான ஒப்பனையிலேயே பார்த்த ரசிகர்களுக்கு இது மிக வித்தியாசமான ஒரு விருந்து. இன்றும் "தொட்ரா பார்க்கலாம்" என்று கிட்டியிடம் கூறும் வசனம்...பிரபலம். "இது சூர்யா சார் உரசாதீங்க" வசனம்... இந்த வசனம் தலைவரால் பிரபலமானதா? அல்லது மணிரத்தினம்சரியான நேரத்தில் சரியான நபருக்கு கொடுத்ததால் பிரபலமாகியதா என்ற குழப்பம் இன்றும் உள்ளது.

அண்ணாமலை (1992)

ண்பனுக்காக எதையும் செய்யும் 'அண்ணாமலை'என்ற கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் அந்த நண்பனுக்கே போட்டியாளனாகி வெற்றி அடையும் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த திரைப்படம் தான் அண்ணாமலை. ரசனையான காதல் காட்சிகள், நகைச்சுவை, நட்பு, சென்டிமென்ட் என சரிவிகிதத்தில் கலந்து கட்டிக் கொடுத்தது அண்ணாமலை. 

தேவாவின் பின்னணி இசை அசத்தலோ அசத்தல். ரஜினி ரசிகர்களிடம் உங்களுக்கு ரஜினியின் எந்த படம் மிகவும் பிடித்தது என்று கேட்டால் பெரும்பான்மையானவர்களின் பதில்' பாட்ஷா' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பாட்ஷாவிற்கே அடித்தளமிட்ட படம் என்றால் அது அண்ணாமலை தான். படத்தின் மிகப்பெரிய பலம் ரஜினியின் குடும்ப செண்டிமெண்ட். சரத்பாபுவின் நட்பு, குஷ்புவை முதன்முதலாக பார்க்கும்போது நடக்கும் காமெடி கலாட்டா, ராதாரவியின் வில்லத்தனம், ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சரியான விதத்தில் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில்.

பாட்ஷா(1995)

லைவரின் அதிரடி திரைப்படம். கதை ஒரு ஆட்டோ டிரைவர் மாணிக்கத்தின் வாழ்க்கையை சுற்றி வருகிறதாக அமைந்திருக்கும். பம்பாயின் முன்னாள் தாதா மற்றும் தமிழ்நாட்டில் அமைதியான அன்பான ஆட்டோ டிரைவர் என இரண்டு வேடங்களில் கலக்கியிருப்பார் தலைவர். பாடல்களும் காட்சிகளும் ஹீரோவின் உருவத்தை உயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பாட்ஷா... நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி... பஞ்ச், இந்தப் படத்தில் ரஜினி வரும்போதெல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை, எஸ் பி பி குரலில் ஒலித்த, 'பாட்ஷா பாரு" பாடல் எல்லாம் வேற லெவல் மாஸ். அதுபோலவே ஆட்டோக்காரன் பாடலும் ரஜினியை ஆட்டோக்காரர்கள் தங்களுக்குள் ஒருவராகவே பார்க்க செய்த பாடல் .இப்போதும் ஆயுத பூஜை தினங்களில் இப்பாடல் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே இல்லை என கூறலாம். மொத்தத்தில் ஆட்டோ டிரைவர்களின் தேசிய கீதம் இது. (இந்த பாடல்களுக்கு உயிர் தந்தவர்கள் தேவாவும், எஸ்பிபியும் என்றால் மிகையாகாது.)

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு கூடுதல் பலம் அதன் வசனங்கள். பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின்...

பாட்ஷாவா ஆண்டனியா... 

கொஞ்சம் அங்க பாரு கண்ணா..

உன் வாழ்க்கை உன் கையில்... மாதிரியான வசனங்கள் எல்லாம் எவர்கிரீன்.

படையப்பா (1999)

டையப்பா திரை உலக வரலாற்றில் ஒரு மைல் கல்.. படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் காம்பினேஷன் சூப்பராக இருக்கும். ஏ. ஆர். ரகுமானின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பரோ சூப்பர். 90கள் என்பது தமிழ் சினிமாவில் ரஜினியின் பொற்காலம். பணக்காரன் தொடங்கி படையப்பா வரை ரஜினியின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மைல்கல்லை தொட்டன. படத்துக்கு படம் புதுமையையும் வித்தியாசத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ரஜினி என்றே சொல்லலாம். தான் கல்கியின் பெரிய ரசிகன் என்பதை பல்வேறு மேடைகளில் ரஜினி வெளிப்படுத்தி உள்ளார் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினமே ரஜினிக்கு மிகவும் பிடித்த நூல் அதில் வரும் நந்தினி தேவி கதாபாத்திரம் ரஜினியை கவர்ந்திருக்கிறது. படையப்பாவின் தொடக்கம் நந்தினி தேவியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. (நந்தினி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என அதை இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் கூறினாராம்) வலுவான கமர்சியல் திரைப்படம் எப்படி உருவாக வேண்டும் என்பதற்கு படையப்பா திரைக் கதை ஒரு ஆகச் சிறந்த உதாரணம்..

'மேம்' என்ற நீலாம்பரியைக் கை தட்டி அழைப்பது, நீலாம்பரியை நோக்கி வித்தியாசமான ஸ்டைலில் நடப்பது, நீலாம்பரி கூலிங் கிளாஸை கழட்டும் நேரத்தில் கையிலிருக்கும் கூலிங் கிளாஸை ரஜினி அணிவது, வேறு யாரையாவது விரும்புகிறாயா? என நீலாம்பரி கேட்க, அதற்கு 'யா'என்பதை மிகவும் ஸ்டைலாக கூறி மௌத் ஆர்கனை வாசித்தபடி... என ரசிகர்களுக்கு விருந்து படையலே வைத்திருப்பார்.

படையப்பா படத்துக்கு மற்றொரு பெரிய பலம் வசனங்கள்." அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும் அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...'என் வழி தனி வழி" கூடவே பொறந்தது (ஸ்டைல்) என்னிக்கும் மாறாது. "போன்ற பஞ்ச் வசனங்கள்... ரஜினியின் நிஜ வாழ்க்கை யோடும், திரை வாழ்க்கையோடும் ஒத்துபோவதால் அந்த வசனங்கள் கூடுதல் தாக்கத்தை உண்டாக்கின. மொத்தத்தில் படையப்பா இன்றைக்கும் மறு வெளியீடு செய்தால் திரை அரங்குகள் நிச்சயம் நிரம்பி வழியும்.

ரஜினியின் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு காவியம்.

ரஜினி என்பது ஒரு பெயர் அல்ல. புரட்சி!

'இது எப்படி இருக்கு' அவர் கேட்க,

'சூப்பரா இருக்கு தலைவா' என அப்போது பதில் கூறி விசில் அடிக்க துவங்கிய  ரசிகர்களின் குரல்கள் இன்னும் ஓயவில்லை என்பதுதான் உண்மை.

கல்லூரி காலங்களில் ரசிகர் மன்ற தலைவியாக இருந்து இன்று குடும்பத் தலைவியாக இருக்கும் தலைவரின் வெறிபிடித்த ரசிகையான ஆதிரையின் அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா! (கல்லூரி காலங்களில், படிக்காதவன் மிஸ்டர் பாரத்...போன்ற படங்களையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்து டிக்கெட்டுகளை பறக்கவிட்டு விசில் அடித்து கல்லூரி நண்பர்களுடன் பார்த்த காலம் இன்னமும் அழகாய் நினைவில் வருகிறது இந்த பதிவை எழுதும்போது...

நூறாண்டு தாண்டி வாழி தலைவா!

மீண்டுமொருமுறை அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா!

 (பி.கு) என் வாழ்நாளில் உங்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு லட்சியம் ஆசை... நிறைவேறுமா?? 

நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்!...

உங்களை சந்திக்கும் நாளுக்காக பூங்கொத்தோடும், இனிப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்

தலைவரின் தீவிர வெறிபிடித்த ரசிகை,

ஆதிரை வேணுகோபால்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com