மழையே... மழையே... வா...வா...

மழையே... மழையே... வா...வா...

சுளீரென்று அடித்த வெய்யில் ஓய்ந்து முதல் துளி மழை பெய்ததும், நமக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்தப் புதிய மண்வாசனை, சொட்டு சொட்டாக ஜன்னல் விளிம்புகளில் விழும் துளிகள், இவை பெரியவர் களைக்கூட குழந்தைகளைப் போல் குதூகலமடைய வைக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, பெரியவர்கள் அலுவலகம் மற்றும் வெளியில் செல்வதில் ஏற்படும் தடங்கல், நம்மை ‘சனியன் பிடித்த மழை’ என்று அலுத்துக்கொள்ளவும் வைக்கிறது.

இப்படி அலுத்துக் கொள்ளாமல், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் பெய்யப் போகிறேன் என்று முன்னறிவிப்புடன் வரும் மழையை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது இல்லையா?

வேலைக்குச் செல்லும் பெண்கள், மழைக்காலம் என்பதால், அசட்டையாக உடை உடுத்திச் செல்ல முடியாது. நேர்த்தியாகவும் அதேசமயம் மழைக்கேற்றாற் போலவும் உடை உடுத்திச் செல்ல வேண்டும். பருத்தி மற்றும் பட்டுப் புடவைகளைக் கட்டுவதைத் தவிர்க்கவும். காரணம் மழையில் நனைந்துவிட்டால் இவை கசங்கி காணப்படும். முக்கியமான மீட்டிங் அல்லது கான்ஃபரன்ஸில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்றால், பளிச்சென்ற வண்ணங்களில் டிசைன்கள் போட்ட சைனா சில்க் புடவைகள் அணியலாம். புடவை அணிந்து செல்லும்போது நல்ல மழையில் உள்பாவாடையும் சேர்ந்து ஈரமாகி உலர்வதும் கஷ்டம். இதனால் நடக்கும்போது தடுக்கவும் செய்யும். மேலும் குடையைப் பிடித்துக்கொண்டு புடவையையும் சமாளிப்பது மிகவும் சிரமம்.

மிடி அல்லது சல்வார் கமீஸ் போன்ற உடைகள் மிகவும் ஏற்றதாக இருக்கும். அதுவும் வெள்ளை நிறத்தில் அணியாமல் இருப்பது நல்லது. காரணம் சேறு அடித்தால் மிகவும் பளிச்சென்று தெரிவதுடன் துவைத்தாலும் சீக்கிரத்தில் கறை விடாது. பளிச்சென்ற வண்ணத்தில் சின்தடிக் புடவைகளை இந்த சில மாதங்களுக்கு ஒதுக்கி வைப்பது நல்லது. எப்போதும் ஒரு செட் புடவை மற்றும் உள்ளாடைகளை அலுவலகத்தில் வைத்திருங்கள். முழுமையாக நனைந்து  குளிரில் பல ஆடவர்கள் நடுவில் பணி செய்வது கஷ்டமாக இருக்கும்.

காலணிகள் என்று வரும்போது, மழைக் காலங்களுக்காகவே விற்கப்படும் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். சிலருக்கு ரப்பர் அலர்ஜியாக இருக்கும். இவர்கள் ப்ளாஸ்டிக் செருப்பு அணியலாம். கருப்பு, பிரவுன் போன்ற நிறங்களில் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம்.

மழைக்காலங்களில் மெல்லிய மேக்கப்தான் உகந்தது. தண்ணீர் புகாத ஐ லைனர் மற்றும் பளபளப்பு இல்லாத உதட்டுச் சாயமும் உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளும் செயற்கை நகங்களும் தவிர்க்கவும். தலைமுடியை இறுக்கமாகக் கட்டவும் அல்லது பின்னல் போட்டுக் கொள்ளவும்.

அதிகமாக மழை பெய்யும்போது குடையைவிட மழைக் கோட்டுகள்தான் சிறந்தது. குழந்தைகளை பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு அனுப்புங்கள். குறித்த நேரத்திற்கு முன்னால் போய்ச் சேர்ந்தால் மழையில் விளையாடி, சளி பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. தனியாக பள்ளிக்குச் செல்பவர்களாக இருந்தால், தெருவில் விளக்குக் கம்பம் மற்றும் திறந்திருக்கும் மின்சாரக் கம்பிகளைத் தொடக்கூடாது என்று சொல்லி அனுப்புங்கள். மின்னல் மின்னும்போது மரத்தின் கீழே ஒதுங்க வேண்டாம் என்றும், தெருவில் வெள்ளமாக இருக்கும்போது நடைபாதை ஓரமாக நடக்கவும் சொல்லிக்கொடுங்கள்.

விடுமுறை நாட்களிலும், பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும் வீட்டிற்குள்ளேயே விளையாட விடுங்கள். அதிக நேரம் ஈரமான உடையுடன்  இருக்க விடாதீர்கள். லேசான ஜலதோஷம் ஆரம்பித்த உடனேயே அதற்கான மருந்து கொடுப்பதுடன், சூடான தண்ணீர், உணவு இவையே கொடுக்கவும். குளிர்ந்த பானம், ஐஸ்கிரீம், சில்லென்ற தண்ணீர், தயிர் ஆகியவை கொடுப்பதைத் தவிர்க்கவும்.

சமையலறையில் மளிகை சாமான் வைத்துள்ள டப்பாக்களை இறுக்கமாக மூடி வைக்கவும். காரணம் மழைக்காலங்களில் ஈக்கள் மூலமாக பல வியாதிகள் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கீழே குடியிருப்பவர்கள் வாசல் கதவை அதிக நேரம் திறந்து வைத்தால் தவளை, பாம்பு போன்றவை உள்ளே வந்துவிடும். ஜன்னல் கதவுகளை சரியான முறையில் கொக்கி போட்டு வைப்பதனால் காற்றில் அவை அடித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஷுக்கள் நனைந்துவிட்டால் துடைப்பதற்கு பேப்பரை பயன்படுத்தலாம். துணியைவிட தினசரி இதழ்களுக்கு ஈரத்தை உறிஞ்சும் சக்தி அதிகம். அதனால் ஷுக்களின் உள்ளே சுருட்டி அடக்கி வைத்தால், ஒரளவு காயும். லேசாக சூடு காட்டிய துணியால் துடைத்து, கறைகள் உள்ள இடத்தை, துணியை டர்பன்டைனில் நனைத்து துடைக்கவும். ஒரு தூறலுக்கும் மற்றதுக்கும் இடைவெளியில் கொஞ்சம் வெய்யில் காயும்போது காயவைத்துக் கொள்ளவும்.

பருப்பு மற்றும் கொட்டை வகைகளை இறுக்கமாக பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும்.

வெங்காயத்தை காற்று புகும்படி பிளாஸ்டிக் கூடையில் போட்டு வைக்கலாம்.

மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கும் பெரியவர் களுக்கும் ஜலதோஷம், ஜுரம், மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீரை நன்கு காய்ச்சி குடிப்பதுடன் வெளியில் ஈ மொய்த்து மற்றும் ஆறின பண்டங்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மழைக் காலம் வருவதற்கு முன்பே வீட்டிலுள்ளவர்கள் டைபாய்டு, காலரா போன்ற வியாதிகளுக்க தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது நல்லது.

மழைக்காலங்களில் வெளியே செல்வது குறைவதால் உடலுக்குத் தேவையான பயிற்சி கிடைக்காததால் உடல் பருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வீட்டிற்குள்ளேயே செய்யும் உடற்பயிற்சி நிறைய செய்யலாம். குதிப்பது, ஜாகிங் செய்வது போன்ற உடற்பயிற்சிகளை நிறைய செய்யலாம்.

உங்கள் உடலில் அதிக கவனம் செலுத்தும் நேரம் இது. சருமத்தை நன்கு பாதுகாக்கத் தேவையான பயிற்சிகள் செய்யலாம். குழந்தைகளை மழையில் வெளியே நனைய விடாமல், வீட்டிற்குள்ளேயே சீட்டு, ஞாபக சக்தியை தூண்டும் விளையாட்டுக்கள், டிக் ஷனரியை வைத்துக்கொண்டு புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து அதற்கான அர்த்தத்தையும் தெரிந்து கொள்வது செஸ், காரம் போர்டு இப்படி விளையாடலாம்.

பெரிய கார்ப்பெட்டுகள் மழைக்காலங்களில் ஈரப்பசையினால் வீணாகிவிடும். அதனால் அவைகளில் பூச்சி மருந்து தெளித்து தினசரி இதழ்களில் வைத்து சுற்றி பாதுகாப்பாக வைத்துவிட வேண்டும். விலையுயர்ந்த சோபா செட்டுகளின் மேல் கருத்த வண்ணங்களில் ஷுட்டுகள் போட்டு மூடி வைத்தால், வெளியே போய் விட்டு வரும் குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ள நாய்க்குட்டிகள் கொண்டு வரும் சேறு சகதி போன்ற கறைகள் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம். படி ஏறியவுடன் இருக்கும் இடத்திலும் நுழைவாயில்களிலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் மிதியடிகள் போட்டு வைத்தால் கால்களிலுள்ள அழுக்கு வீட்டிற்குள்ளே ஆகாமல் இருக்கும். ரெயின்கோட்டு மற்றும் குடைகள் உபயோகித்தவுடன் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வரும்போது அவைகளிலுள்ள தண்ணீர் சொட்டுவதற்கான பக்கெட் அல்லது சிறிய தொட்டிகளை உரிய இடத்தில் வைக்கவும்.

மழை பெய்தால்தான் நமக்கு உணவுப் பண்டங்கள், காய்கறிகள் எல்லாமே நன்கு விளையும். குடி தண்ணீர் பஞ்சமில்லாமல் கிடைக்கும். அதனால் மழை கொட்டும்போது ‘சீ சனியன் பிடித்த மழை’ என்று அலுத்துக் கொள்ளாமல், அதை நேர்கொள்ள உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com