
முன்னோர்கள் ஆன்மிகம் வாயிலாக சில நியதிகளை வகுத்து, அதை நாம் பின்பற்றுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர். கார்த்திகை மாத விளக்கேற்றுதலும் அது போன்ற ஒரு ஐதீகமும் அறிவியலும் கலந்து உருவாகிய ஒரு நியதியே. கார்த்திகை மாதம் இருளை விரட்டவும், புழு பூச்சிகளை அண்ட விடாமல் செய்யவும், சிவன் மற்றும் முருகக் கடவுள்களின் புராணவரலாறு அடிப்படையில் நாம் இந்த மாதங்களில் விளக்குகளை ஏற்றுகிறோம். இது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், இங்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதுதான் மண்ணுக்கு நாம் தரும் மரியாதை. மண் பாண்டக் கலைஞர்கள் வெயில் காலத்தில் உருவாக்கிய மண் விளக்குகளை விற்பனை செய்யும் நோக்கமும் அதில் ஒன்று. விஞ்ஞான மாற்றத்தால் மண் விளக்குகளுடன் பித்தளை, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட விளக்குகளும் இன்று நாம் அழகுக்காகவும் அந்தஸ்துக்காகவும் உபயோகிக்கத் தொடங்கி விட்டோம்.
இன்றும் தெருவோரங்களில் குவிந்துக் கிடக்கும் அகல் விளக்குகளைக் காணும்போது அவற்றைச் செய்த அந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. மண் பானைகள் மற்றும் கலை நயமிக்க பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தோறும் களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட அழகழகான விளக்குகள் விதவிதமான உயரங்களில் கண்களைக் கவர்கின்றன. தட்டு விளக்கு, சரவிளக்கு, பஞ்சமுக விளக்கு போன்ற பழைமையான விளக்குகளுடன் புதுமையான வண்ணங்கள் பூசிய டெரகோட்டா விளக்குகளும் உள்ளன.
இந்த விளக்குகளை வருடம்தோறும் விற்பனை செய்யும் அகல்விளக்கு விற்பனையாளர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம். மூன்று தலைமுறைகளாக சேலம் வின்சென்ட் பகுதியில் விளக்குகள் விற்பனை செய்து வரும் பாலாஜியிடம் பேசினோம்...
“நீங்கள் நினைப்பது போல் இதில் லாபம் எல்லாம் பார்க்க முடியாது. விஞ்ஞான வளர்ச்சியில் பாதிக்கப்பட்ட தொழில்களில் மண்பாண்டத் தொழிலும் ஒன்று. இந்த தொழிலுக்கு ஏற்ற பருவநிலை, களிமண்ணின் விலை ஏற்றங்கள் எனப் பலவற்றை சமாளித்தே ஒவ்வொரு வருடமும் இந்த அகல் விளக்குகள் விற்பனைக்கு வருகிறது. இரண்டு ரூபாயிலிருந்து இருநூறு ரூபாய் வரைக்கும் உள்ள இவைகளை இந்த வருடமே விற்றால்தான் ஏதோ கொஞ்சம் செலவுகளைச் சமாளிக்கலாம். இல்லை என்றால் கஷ்டம்தான். நாங்கள் எங்கள் குலத் தொழிலை விடக்கூடாது என்றே இந்தத் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறோம். மக்கள் எல்லோரும் நம் பாரம்பர்யம் பண்பாட்டை மறக்காமல் இவற்றை வாங்கினால் மட்டுமே எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி.”
இதுதான் விஷயம்... என்ன கிளம்பிட்டீங்க... மண் விளக்குகளை வாங்கத்தானே? நாம் அனைவரும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்கி மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் இல்லங்களிலும் தீபம் ஒளிர வழி செய்வோம்! மண்ணின் மணத்துடன் இந்த தீபத்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!