சேலம் புத்தகத் திருவிழா!

சேலம் புத்தகத் திருவிழா!

ழுத்தும் வாசிப்பும் நம் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள். நல்ல எழுத்துகளை விரும்பும் ரசிகர்கள் அந்தப் புத்தகம் எங்கு இருந்தாலும் தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பார்கள். அப்படிப்பட்ட புத்தகப் பிரியர்களுக்கு விரும்பிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் வெளியிட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே இடத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? மனம் ஆனந்தத்தில் மிதந்து ஆகாயத்தில் பறக்கும். அப்படித்தான் சேலத்தில் உள்ள புத்தகப் பிரியர்களின் நிலை தற்போது. காரணம், முதன்முறையாக அரசு சார்பில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள். லட்சக்கணக்கான புத்தகங்கள் என மாபெரும் கண்காட்சியான இது புதிய பேருந்து திடலில் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு. செ.கார்மேகம்,  மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
கே.என். நேரு,  கல்வி வளர்ச்சித் துறை அதிகாரிகள், மாவட்ட நூலக அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் கடந்த ஞாயிறன்று (20-11-22) கோலாகலமாகத் தொடங்கப்பட்டு 30-11-22 வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 15000 பேர் வந்து நூல்களைக் கண்டுகளித்து வாங்கிச் செல்கிறார்கள். மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் இங்கு வர அனுமதி தரப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

ஒருபக்கம் கலை நிகழ்ச்சிகளும் பள்ளி மாணவர் களுக்கான நிகழ்வுகளும் மேடையில் அரங்கேறி நம் கவனம் ஈர்க்க, மறு பக்கம் வயிற்றை நிறைக்க உணவு அரங்குகளும் நம்மை வரவேற்கின்றன. கண்களையும் மனதையும் வாசிப்பையும் வயிற்றையும் ஒருங்கே நிறைக்கும் சேலம் புத்தகக் கண்காட்சியில் நாம் சந்தித்த சிலரின் கருத்துக்கள் இதோ…

இல்லத்தரசி கவிதா

ண்காட்சி என்ற பெயரில் இவ்வளவு புத்தக அரங்குகளை அமைத்து  வாழ்க்கைக்குத் தேவையான புத்தகங்களை வாசிக்கத் தூண்டுவது மகிழ்ச்சியான விஷயம். அதிலும் இங்கு வரும் பள்ளிக் குழந்தைகளின் உற்சாகம் பார்க்கும்போது வாசிப்புப்பழக்கம் மூலம் வரும் தலைமுறையின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு இதுபோன்ற கண்காட்சிகள் நிச்சயம் உதவும் என்ற எண்ணம் வருகிறது. நானும் பி ஈ பயிலும் என் மகன் மொழியரசனை கண்காட்சிக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பார்த்து தேவையான புத்தகங்களை வாங்கச் சொல்லி இருக்கிறேன் .

கார்த்திகேயன் எழுத்தாளர், தனியார் கல்லூரிப்பேராசிரியர்

நான் இதுவரை ஐந்து சமூகநூல்களை எழுதியுள்ளேன். எல்லாமே சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் குடும்பத்துக்கும் உதவும் நல்ல கருத்துகள் கொண்டவை. ‘இல்லற தீபம்’ எனும் என் புத்தகத்தைப் படித்த இரு குடும்பங்கள் பிரிவில் இருந்து மீண்டும் இணை ந்துள்ளோம் என்று சொன்னபோது மனம் நிறைந்து நான் எழுதியதற்கு உண்டான பலனைக் கண்டேன். ஆனால், எத்தனைப் பேர் இப்படி நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கிப் படிப்பார்கள் எனும் கேள்வி என்னைப் போன்ற எல்லா எழுத்தாளர் களுக்கும் உண்டு. அந்தக் குறையை இந்தப் புத்தகக்கண்காட்சி போக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  கணினியில் மூழ்காமல் இது போன்ற கண்காட்சிகளுக்கு குடும்பத்துடன் வந்தால் நிச்சயம் ஒரு புது அனுபவம் கிடைக்கும்.

தமிழரசன், புத்தக முகவர்

கொரோனா வந்ததிலிருந்து புத்தகங்களின் விற்பனை சற்றுக் குறைவாகவே உள்ளது.  இங்கு வரும் பொது மக்களின் உற்சாகமான வரவேற்பைப் பார்க்கும்போது புத்தக விற்பனைக்கு எதிர்காலம் இருக்கு எனும் நம்பிக்கை மனதில் மீண்டும் வருகிறது. புத்ககங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.  அந்த அளவுக்கு வாங்கி வாசிப்பவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், இதுபோன்ற புத்தகக் கண்காட்சியானது வாசிப்பவர்களை அதிகரிக்கும். இதனால் எங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியே.

பெரும்பாலான அரங்குகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை வாங்கிய அந்தச் சிறுவனின் கண்களில் இருந்த ஆனந்தம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அதே நேரம் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கைகளில் பெற்றோர் தந்த  சொற்பத் தொகையில் பார்த்து பார்த்து தங்களுக்குத் தேவையான புத்தகத்தைத் தேர்வு செய்த காட்சி மனதை என்னவோ செய்தாலும், புத்தகங்களின் மீதான அவர்களின் ஆர்வத்தை வளர்க்க உதவிய புத்தகக் கண்காட்சிக்கு வழிவகுத்த அரசுக்கு நன்றிகள் சொல்லவே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com