சேலம் இளைஞர்களின் முப்பெரும் விழா...

சேலம் இளைஞர்களின் முப்பெரும் விழா...

சேவையில் அசத்தும் இளைஞர்கள்!

ரங்களுக்கு பேசத் தெரிந்திருந்தால் வாய் விட்டு நன்றிகள் சொல்லியிருக்கும். முடியாததால், அவை, கிளைகளை அசைத்து காற்று வீசி தன்னை வேதனைப் படுத்திய ஆணிகளைப் பிடுங்கி எறிந்து காயத்துக்கு மஞ்சள் பூசிய அந்த இளைஞர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தியது பார்க்கவே நெகிழ்ச்சியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை என்றாலே அந்த வணிக வீதியில் வண்டியில் செல்ல பயந்தவர்கள் இன்று இந்த இளைஞர்களுக்கு நன்றி சொல்லிப் பெருமூச்சு வீட்டுச் செல்கின்றனர். காரணம், அந்த இளைஞர்கள் நடுரோட்டில் உடைத்துப்போட்ட வழுக்கி விழ வைக்கும் திருஷ்டிப் பூசணிக்காய்களை அகற்றிய துடன் வணிகர்களுக்கு அறிவுறுத்திச் சென்றதால்!

இன்னும் பல சேவைகள் செய்து, அனைவரின் கவனைத்தையும் கவர்ந்து வரும் சேலம் இளைஞர் குழுவின் முப்பெரும் விழா சமீபத்தில் ஆதரவாளர்கள் திரண்டு வாழ்த்த கொண்டாடப்பட்டது.

ஆறு வருடங்களுக்கு முன் சேலம் இளைஞர் குழுவாகத் தொடங்கப்பட்டு, தற்போது சேவகன் சமூகநல அறக்கட்டளையாக உத்வேகத்துடன் சேவையில் பயணிக்கும் இக்குழுவின் நிறுவனர் பிரதீப் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கண்ணனிடம்  உரையாடினோம்.

“பணமும் வயதும் அனுபவமும் இருந்தால் மட்டுமே சேவைகளில் இறங்க முடியும் என்பதை மாற்றி, இளைஞர் சக்தியாலும், நல்ல மனம் இருந்தாலும் சேவை செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது எங்கள் சேலம் இளைஞர் குழு. எங்கள் குழுவில் தற்போது 80 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களில் மூட்டைத் தூக்கும் கூலித் தொழில் செய்பவரிலிருந்து தொழில் பணம் வயது வேறுபாடின்றி அனைவரும் உள்ளனர். பெண்களும் தற்போது எங்களுடன் இணைந்து வெளியே சேவையில் இறங்குவது பெரும் மகிழ்ச்சி. தமிழகம் முழுக்க சுமார் 500 உறுப்பினர்கள் உள்ளனர். 16 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள சேவை உள்ளம் கொண்டவர்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் இங்கு வந்து சேவைகள் செய்கின்றனர்.

சுற்றுச் சூழல் காக்கும் பொறுப்பை கையில் எடுத்து, மரக்கன்றுகளை நட்டு அதைப் பராமரிப்பதையும் பசிக்கு உணவு அளித்தலையும் எங்கள் முதல் சேவையாகத் தொடங்கி இன்று பல சமூகத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு நன்கொடையாளர்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணம்.

சாலையோரம் உள்ள ஆதரவற்ற முதியோர்களைத் தேடிப்போய் அவர்களைக் குளிக்க வைத்து, புத்தாடை உடுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு தரும் ‘நாங்கள் உங்கள் பிள்ளைகள்’ திட்டம், விரும்புவோர் வீடுகளுக்குச் சென்று டென்ட் அமைத்து தேவையான மரம் நட்டு வரும் ‘வீட்டுக்கு ஒரு மரம்’ திட்டம்,  வறியவர்களின் பசித் தேவையைத் தீர்க்கும் ‘பசியில்லா தமிழ்நாடு’ திட்டம்,   சீரமைக்காமல் கிடக்கும் குளம், ஏரி, கிணறு போன்றவைகளை சீரமைத்து பாதுகாக்கும் ‘நீர்நிலைகளைப் பாதுகாக்கும்’ திட்டம், விளம்பரங்களைத் தாங்கி ஆணியினால் பட்டுப்போகும் அபாயத்தில் உள்ள ‘பழங்கால மரங்களைப் பாதுகாக்கும்’ திட்டம், அரசுப்பள்ளிகளுக்கு எங்களால் ஆன உதவிகளைச் செய்து ‘அரசுப்பள்ளியைத் தரம் உயர்த்தும்’ திட்டம். இப்படிப் பல திட்டங்களைத் தற்போது செயலாற்றி வருகிறோம். நெகிழியினால் பாழ்படும் சுற்றுசூழலைக் காக்க 5 லட்சம் துணிப்பைகளைத் தரும் இலக்குடன் நெகிழியில்லா தமிழகம் திட்டத்துக்கும் ஆதரவளிக்கிறோம்.

நான் எனும் வார்த்தை மறைந்து நாம் என்று முனைந்து ஒன்று கூடினால் நம் சமூகம் விரைவில் முன்னேற முடியும். எந்தப் பிரச்னைக்கும் தீர்வு நம் கையில் மட்டுமே என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாமும் மகிழ்ந்து. பிறரையும் மகிழ்விக்கலாம்.”

இளைஞர்களே நம் தேசத்தின் மிகப்பெரும் சக்தி என்பதை நிரூபித்து மற்ற இளைஞர்களுக்கு உதாரணமாக செயல்படும் சேலம் இளைஞர்களுக்கு பாராட்டுகள்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com