சேலத்தில் குடிகொண்ட ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்!

சேலத்தில் குடிகொண்ட 
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்!

றைவன் அனைவருக்கும் பொதுவானவர். அவர் விரும்பினால் சிறு இடத்திலும் அமர்ந்து பெரும் நன்மைகளை செய்வார் என்பதற்கு சாட்சியாக சேலம் சாமிநாதபுரத்தில் வண்டிப்பேட்டை பகுதியில் கம்பீரமாக அமர்ந்துள்ளாள் ஸ்ரீ சமயபுர மாரியம்மன். இந்த அம்மனை வேண்டிச் சென்றால் வேண்டியவையனைத்தும் கண்டிப்பாக பலிக்கும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.

அதிலும் அமாவாசை அன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கும்பம் படையல் இட்டு, அதை குழந்தை இல்லாத தம்பதியரும் உடல் நலம் வேண்டியும் பிரசாதமாக பெற்று சாப்பிட ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்பது அந்த அம்மனின் சக்தியை சொல்லாமல் சொல்கிறது . கார்த்திகை மாத அமாவாசை அன்று சுமார் 5000 பக்தர்கள் கும்பப் படையல் பிரசாதத்தை வரிசையில் நீண்ட நேரம் நின்று வாங்கி மகிழ்ந்தனர்.

ஒரு சின்ன தெருவில் சிறு இடத்தில் ஒரு இளைஞரால் உருவாக்கப்பட்ட திருமேனியில் “இந்த அகிலமே என் பார்வையில் வாருங்கள் என்னிடம் உங்கள் கவலைகள் தீர்ந்து மகிழ்வுடன் திரும்புங்கள்” என்று அழகிய கண்களில் கருணை வழிய முகத்தில் அன்பு நிறைந்து வழிய சகல அலங்காரங்களுடன் அபயம் தருகிறாள் மாரி.

இக்கோவிலின் நிர்வாகியும் பூசாரியுமான சதீஸ்குமார் கோவிலைப் பற்றி நம்மிடம் பகிர்ந்தார்.

 “நாங்கள் இதே பகுதியில் நீண்ட வருடங்களாக வசிப்பவர்கள். என் தாத்தா சமயபுர மாரியம்மனை வழிபட்டு வந்தார். பூசாரிக் குடும்பம் என்றே எங்களைக் குறிப்பிடுவார்கள். அவர் வேப்பமரத்தில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை எனக்கு அடையாளம் காட்டியது முதல் நானும் அம்மனை மனதார வழிபட்டு வந்தேன்.

ஒரு நாள் கனவில் வந்த அம்மன் தனக்கு இந்த இடத்தில சிலாரூபம் வேண்டும் இங்கே அமர விரும்புகிறேன் என்று அருள்வாக்குத் தர அதன் பின் உருவாக்கியதுதான் இந்த ஏழு அடி உயர சமயபுர அம்மன் சிலை.  சமயபுரம் உட்பட அவள் ஆட்சி புரியும். 21 இடங்களில் இருந்து புற்று மண் எடுத்து வந்து இங்கு அவள் அருளால் பிரதிஷ்டை செய்தோம். அவளே மீண்டும் கனவில் ஒரு ரூபாய் காசை மஞ்சள் துணியில் வைத்து என் மீது நம்பிக்கையுடன் வேண்டிக் கட்டுவோருக்கு நிச்சயம் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பேன் என்று சொல்ல அதன்படி இங்கு வருவோர் மஞ்சள் துணியில் காசு முடிந்துக் கட்டி வேண்டுகின்றனர்.

மேலும் ஒவ்வொரு அமாவாசையன்றும் விசேஷ பூஜையுடன்  மொச்சைக்கொட்டை கத்திரிக்காய் குழம்பு வைத்து முருங்கைக் கீரை பொரியலுடன் படையலிட்டு  பச்சரிசி மாவு விளக்கு ஜோதியில் அம்மனை ஆவாகனம் செய்து அம்மனுக்குப் படைத்து அதை குழந்தை வரம் வேண்டியும் உடல் நலன் வேண்டியும் வருவோருக்கு பிரசாதமாக வழங்கி வருகிறோம். இதுவும் அவள் கட்டளையுடன் இதுவரை சிறு தடங்களும் இல்லாமல் நிகழ்ந்து வருகிறது .தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த பிரசாதத்தை நம்பிக்கையுடன் வாங்கி சாப்பிடுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து வருவது இந்த அம்மனின் சக்தியே அன்றி வேறேது? நாம் அங்கிருந்தபோது மணியனுரைச் சேர்ந்த தம்பதியர் சக்திவேல் ஜெயபிரியா தம்பதியர் தங்கள் கைகளில் தொட்டிலை வைத்து கணகளில் நம்பிக்கையுடன் அம்மனை வணங்கினர். வேண்டுதல் நிறைவேற அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னோம்.

’’சமயபுர அம்மன் இங்கு வந்து அமர்ந்து எராளமான பக்தர்களுக்கு நன்மைகள் வழங்க என்னைக் கருவியாக்கியது நான் பெற்ற பாக்கியம் “ என்று ஆனந்தமாக சொல்கிறார் சதீஸ்குமார்.

சேலம் பக்கம் வந்தால் எங்கள் ஊர் சமயபுரம் மாரியமம்னை தரிசித்து அவள் அருளைப் பெற்றுச் செல்லுங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com