கடவுளுக்கே சீல்!

கடவுளுக்கே சீல்!

னிதன் தோன்றும் முன்னே மண்ணில் தோன்றிய ஆன்மிகம், இன்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஜாதிகளின் பெயரால் சீர்குலைந்து போவது இந்த கலிகாலத்தில் நிகழ்ந்து வருகிறது. நான் எனும் ஈகோவும் எங்களுடையது எனும் சுயநலமும் எங்கு தோன்றினாலும் அங்கு ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதுதான் உண்மை. சேலம் அருகே உள்ள மேச்சேரி நங்கவள்ளியில் உள்ள ஒரு கிராமத்தின் மாரியம்மன் கோவில் காவல்துறையால் பூட்டப்பட்ட சம்பவம் இதற்கு சான்றாகிறது.

      நங்கவள்ளி அருகே உள்ள விருதாசம்பட்டி ஊராட்சிக்குள் வரும் பழங்கோட்டை கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் இருக்கிறது. அந்த கிராமத்து மக்களால் வழிபாடு நடத்தி வந்த அரசின் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலின் கும்பாபிசேகம் கடந்த மாதம் 7 ந்தேதி நிறைந்ததைத் தொடர்ந்து மண்டல பூஜைகளும் நடைபெற்று வந்தன.

“சென்ற 25-12-22 அன்று நடைபெற்ற 48 வது நாள் மண்டல பூஜையின்போது குறிப்பிட்ட சமூகத்தினரை மண்டபத்தில் அனுமதிக்காமல் வெளியே நின்று வழிபடுமாறு வேறொரு பிரிவினர் தடுத்துள்ளனர். இது தொடர்பாக அங்கிருந்தவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை முற்றி மோதல் ஏற்படும் சூழல் எழுந்தது. இது தொடர்ந்தால் அங்கு கலவரம் வெடிக்கும் என்பதால் செய்தி அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரும் தாசில்தாரும் அறநிலையத்துறை அதிகாரியும் இரு தரப்பினர் இடையே நடத்திய பேச்சுவார்த்தை சமரசம் ஏற்படாததால் கோவிலைப் பூட்டி சீல் வைக்கும் நிலை ஏற்பட்டது” என்கின்றனர் அங்குள்ள மக்கள்.

        இது குறித்து அங்கிருந்த அனுமதி மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத நபர் “கும்பாபிசேகத்தின் போது இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சமுதாய இனத்தவரும் கருவறை அருகே உள்ள மண்டபத்திற்கு சென்று அம்மனை வழிபட அனுமதிக்கப் பட்டனர். நாங்களும் சென்று வழிபட்டோம். ஆனால் இன்று மட்டும் ஏன் எங்களுக்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்பது தெரியவில்லை. நாங்களும் இந்தக் கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடைகள் தந்துள்ளோம். ஆகவேதான் அனுமதி மறுக்கப்பட்டதும் நியாயம் கேட்டோம்” என்கிறார்.

       கடவுளின் சந்நிதானத்தில் ஏழை பணக்காரர் ஜாதி மதம் பேர் புகழ் அனைத்தும் வேறுபாடின்றி சமமாக பார்க்கப்பட வேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக பெரும்பாலான கோவில்களில் கருவறைக்குள் மக்களை அனுமதிக்க மறுப்பது நடைமுறையில் இருந்தே வருகிறது. நான் உயர்ந்தவன் எனும் ஈகோ வந்தால் கடவுளரும் கையறு நிலையில் சிறைப்படுவார் என்பதற்கு இந்த சம்பவம் சாட்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com