
தமிழ் நாட்டில் மயிலாடுதுறை தாலுகாவில் விளநகர் கிராமத்தில் சாதாரண ஒரு வணிகக் குடும்பத்தில் 1928ஆம் ஆண்டு பிறந்தவர் திரு எம். எஸ். உதயமூர்த்தி. தன்னம்பிக்கையோடு கூடிய விடா முயற்சியால் தன் சொந்த வாழ்க்கையில் உயர்ந்ததோடு மட்டுமில்லாமல் மற்றவர்கள் உயரவும் மிக மிக எளிய முறையில் வழி சொல்லித் தந்தவர். பரந்த மனப்பான்மையுடன் பிறரிடம் கருணை பரிவு காட்டி வாழ்க்கையை நேர்மறை எண்ணங்களுடனும் எதிர் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர் இவர்.
அமெரிக்காவில் சொந்த வியாபாரம் செய்து வெற்றி பெற்றவர், 'நதிநீர் இணைப்பு' க்காகத் தன் வாழ்நாள் முழுவதும் முயன்றவர், 'மக்கள் சக்தி இயக்கம்' என்று ஒன்றை தோற்றுவித்து எழுச்சி மிக்க இளம் தலைமுறை யினரை ஒன்று சேர்த்து மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் என்று இவருக்கு பன்முகங்கள் இருந்த போதிலும், மக்களுக்கு மிகப் பரிச்சியமான முகம் எம். எஸ். உதயமூர்த்தி என்கிற 'தன்னம்பிக்கை - நேர்மறை சிந்தனை' நூல்களை வெகுஜனப்பத்திரிகைகளில் எழுதிய எழுத்தாளர் என்கிற முகந்தான்.
திருமணமான புதிதில் சீர்காழியில் ஒரு பள்ளி ஆசிரியராக வேலை. வீடோ வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தது. அப்போது அவருக்கு வயது 21. அவர் மனைவிக்கோ 18 தான். வீட்டில் தண்ணீர் வசதியில்லை. தெருமுனையிலிருந்துதான் தண்ணீர் தூக்கி வர வேண்டும். இளவயது மனைவி தண்ணீருக்காக சிரமப்படுவதை பொறுக்காத உதயமூர்த்தி தன் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே ஒரு கிணறு தோண்ட தீர்மானிக்கிறார். மாலை வேலை முடிந்து வந்ததும் கணவனும் மனைவியுமாக கடப்பாரையும்,. மண்வெட்டியும் பிடித்துத் தோண்டுகிறார்கள். இருவருக்கும் கொஞ்சமும் பழக்கமில்லாத கடினமானதொரு வேலை! பத்து நாட்கள் தோண்டித் தோண்டி பன்னிரண்டு அடி வந்ததும் தண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. அவர்களே தோண்டிய கிணற்றிலிருந்து மகிழ்ச்சியாக தண்ணீரை இறைத்து உபயோகிக்க ஆரம்பித்தனர். அவருடைய தன்னம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் சான்றாக இள வயதிலேயே நடந்த சுவாரசியமான சம்பவம் இது!
'எண்ணங்கள்' இவருடைய முதல் புத்தகம். நம் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் அது கெட்ட எண்ணமோ, நல்ல எண்ணமோ, எப்படி நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தது என்று விளக்கமாக எடுத்துக் கூறி 'வாழ்வின் தாத்பர்யங்கள் எல்லாம் 'நல்லெண்ணம்' என்கிற ஒரு சொல்லில் அடங்கி இருப்பதாகக் கருதுகிறேன்' என்று முத்தாய்ப்பாக முடித்திருப்பார். 'நம் மனம் எவ்வாறு நம்மை ஆட்டிப் படைக்கிறது, அதை எப்படி வசப்படுத்தி, வளப்படுத்தலாம்' என்று கூறியதன் மூலம் முதன் முறையாக நம்மை நமக்குள்ளே பார்க்க வைத்தவர் திரு எம். எஸ். உதயமூர்த்தி தான் என்றால் அது நிச்சயம் மிகையான வார்த்தையல்ல.
தன் வாழ்க்கை அனுபவங்களோடு, வாழ்வில் மாற்று சிந்தனைகளை முன் வைத்து முன்னேறிய உலகிலுள்ள மற்ற பிரபலங்கள் தலைவர்களின் அனுபவங்களையும் எழுதி, எங்களால் முடிந்தது 'உன்னாலும் முடியும் தம்பி!' என்று கூறினார். நம் நாட்டு, அயல் நாட்டு பிரபல விஞ்ஞானிகள், நமது தேசத்தின் மதிப்புக்குரிய மகான்கள் என்று எல்லோரும் அத்தகைய உயர்நிலையை அடையக் காரணம் என்ன என்று 'பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?', 'நீ தான் தம்பி முதலமைச்சர்!', 'உயர் மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்' என்று எண்ணற்ற நூல்கள் மூலம் மிக எளிமையாகப் புரிய வைத்தார். 'மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை' என்று வெகு எளிதாக ஒரு கருத்தைச் சொல்லி வாழ்க்கையை எப்படி உன்னதமாக வாழ வேண்டும் என்று புரிய வைத்தார்.
இவரை மானசீக குருவாக ஏற்று தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டவர்கள் ஏராளம். இவர் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குநர் திரு கே.பாலசந்தர் தன்னுடைய திரைப்படம் ஒன்றுக்கு 'உன்னால் முடியும் தம்பி' என்று தலைப்பு வைத்து கதாநாயகனுக்கு 'உதயமூர்த்தி' என்று பெயரும் வைத்து இவரை சிறப்பித்து மகிழ்ந்தார்.
அவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மறைந்து விட்ட போதிலும் அவருடைய எண்ணற்ற தன்னம்பிக்கை யூட்டும் நூல்கள் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்கிறார், நம் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.