சிறுதானிய சப்பாத்தி... சிறுதானிய புரோட்டா...

சிறுதானிய சப்பாத்தி...  சிறுதானிய புரோட்டா...

கோதுமை மாவில் சப்பாத்தி. மைதா மாவில் புரோட்டா. நம் பெரும்பாலோரின் புழக்கத்தில் உள்ளது. இது என்ன... சிறுதானிய சப்பாத்தி? சிறுதானிய புரோட்டா? சொல்வதைக் கேட்போம்.

வஹீதா பானு
வஹீதா பானு

கரூர் வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றுபவரும் சமூக நல ஆர்வலருமான வஹீதா பானு “வார விடுமுறை நாட்களில் ஈரோடு விஜயலெட்சுமி அம்மா வீட்டுகுச் சென்று விடுவேன். சில சிறுதானியங்களைப் பயன்படுத்தி சிறுதானிய சப்பாத்தி, சிறுதானிய புரோட்டா தயாரித்துப் பார்த்தால் என்னவென்று எங்கள் இருவருக்கும் தோன்றியது. பல தடவைகளாகப் பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டோம். கடைசியாக ஒரு வழியாக வெற்றி கண்டோம். சாப்பிட்டுப் பார்த்தோம். அவ்வளவு ருசியாக இருந்தது.” என்கிறார்.

இது எவ்விதம் சாத்தியம் ஆயிற்று?

சிறுதானிய சப்பாத்தி சிறுதானிய புரோட்டா தயாரிப்பில் பல்வேறு முயற்சிகளைக் கடந்து தான் வெற்றி பெற்றோம். சிறுதானியங்கள் ஆன குதிரைவாலி, சாமை, தினை, வரகு இவைகளை குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சம்பா கோதுமையினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் அரை கிலோ எடுத்துக் கொண்டால் மொத்தமாக இரண்டரை கிலோ ஆகும். இதனை நல்ல தண்ணீரில் அலசி வெய்யிலில் இரண்டு மூன்று நாட்கள் நன்றாகக் காய வைக்க வேண்டும். காய வைத்து அரைக்க வேண்டும். அரைத்த பின்னர் அதனை நிழலில் உலர்த்த வேண்டும். சிறுதானிய சப்பாத்தி மற்றும் சிறுதானிய புரோட்டா மாவு ரெடி.         (மைதா மாவு துளியும் கலக்கத் தேவையில்லை.)

விஜயலெட்சுமி
விஜயலெட்சுமி

சப்பாத்திக்கு எப்பவும் போல மாவு பிசையும்போது கொஞ்சம் உப்பு கலந்து வெது வெதுப்பான தண்ணீரில் பிசைந்து சப்பாத்தி உருண்டைகள் பிடிக்க வேண்டும். புரோட்டாவுக்கு சுருள் சுருளாக சிறு வட்டமாகப் பிடித்து வைத்தால், புரோட்டாவுக்கான பீடா ரெடி. சிறுதானிய சப்பாத்தி மற்றும் சிறுதானிய புரோட்டா ஆகியவைகளின் ருசி தனி. அபாரம். மேலும் உடலுக்கும் நல்லது நான்கு வகையான சிறுதானியங்களுடன் சம்பா கோதுமையும் கொஞ்சமாகச் சேர்த்து தயாரித்து இருப்பதால், குறிப்பிட்ட சிறுதானியங்களின் சத்துகளும் சம்பா கோதுமையின் சத்துகளும் நமக்கு ஒரு சேர எளிதில் கிடைத்து விடும்.” இவைகளில் நார்ச்சத்து, மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உடலுக்குத் தேவையான வைட்டமின்ஸ், தாது உப்புகள் நிறைய உள்ளன. என்கிறார் ஈரோடு விஜயலெட்சுமி.

சிறுதானிய உணவு வகைகளை உட்கொள்வதல் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறார் சென்னை, இயற்கை நலம் மற்றும் யோகா மருத்துவர் பிரியங்கா.

புரதச் சத்தானது எலும்பு மற்றும் தசைகளின் பயன்பாட்டை சீராக்குகிறது. எலும்பு தேய்மானம், எலும்பு வலி, தசைப் பிடிப்பு மற்றும் தசைகளில் கோளாறு உள்ளவர்கள் மேற்கண்ட சிறுதானிய உணவினை சேர்த்துக் கொள்ளலாம்.  உடலில் உள்ள கெட்ட கொழுப்பு களை நீக்க வல்லது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பினைத் தர வல்லது. இருதய நோய் உள்ளவர் களும் இருதயக் குழாயில் அடைப்பு உள்ளவர்களும் அரிசி உணவுக்குப் பதிலாக மேற்கண்ட சிறுதானிய சப்பாத்தி மற்றும் சிறுதானிய புரோட்டா வகைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் அமினோ அமிலங்கள் இதில் மிகுதியாக இருப்பதால் உடல் எடையினைக் குறைக்கவும் உதவுகிறது.

மருத்துவர் பிரியங்கா
மருத்துவர் பிரியங்கா

நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படும் தன்மை இருப்பதால், இது போன்ற சிறுதானிய உணவுகள், உணவின் செரிமான நேரத்தினை அதிகரிக்கின்றன. அதனாலேயே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுதானிய உணவுகள் மிகப் பெரிய பொக்கிஷமாக விளங்குகிறது.

செரிமான கோளாறுகளை சரி செய்ய வல்லது. முக்கியமாக மலச்சிக்கல், மற்றும் ஆசன வாய்ப் பகுதியில் எரிச்சல் உணர்வு, உணவு உண்ட உடனே மலம் கழிப்பது, ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மலம் கழிப்பது போன்ற பிரச்னைகளைச் சரி செய்யக் கூடியது மேற்கண்ட சிறுதானிய உணவு.

பசையும், பசை போன்ற பெருட்கள் இதில் இல்லை என்பதால் உணவு குழாய்களில் ஒட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை இந்த வகை உணவு களுக்கு இல்லை. இதிலிருந்து கிடைக்கும் வைட்டமின்ஸ், தாது உப்புகள் ஆகியன நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. தேவையற்ற பதற்றம், கோபம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை குறைக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com