சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்!

ஆரோக்கியம்
சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள்!

ம் உடல் சரியாக இயங்க போதிய ஊட்டச்சத்துகள் தேவை. இன்றைய காலக்கட்டத்தில், மாறுபட்ட உணவு பழக்கம் காரணமாக சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது குறைந்துவிட்டது. இப்போது பெரும்பாலானோர், சத்துகளுக்கு மாறாக, நாவின் சுவைக்காக மட்டுமே உணவை உட்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு, உடலுக்குத் தேவையான சத்துக்கள் எங்கிருந்து கிடைக்கும்?

முதுமை அல்லது பரம்பரை போன்ற பல்வேறு காரணிகளால் ஒருவரது உடலில் ஏற்படும் குறை பாடுகளை ஈடுசெய்ய சப்ளிமென்ட்ஸ் எனும் சத்து மாத்திரைகள் உதவுகின்றன. சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அதற்கு முன்னதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இவை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எந்த வயதில் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம், எந்தெந்த சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்று ஆராய்ச்சிகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது பற்றி சற்று விரிவாக தெரிந்துகொள்வோம்... அவரவர் வயது, உடல் வாகு, அதற்கேற்ப என்னென்ன சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவரின் வழிகாட்டல்படி இருக்க வேண்டும் என்பது அவசியம்.

20 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ்: ஒரு நாளைக்கு உங்களது உடலுக்குத் தேவையான புரத சத்தின் தேவையில் பாதி அளவைப் பூர்த்தி செய்திட ஒரு ஸ்கூப் புரோட்டீன் சப்ளிமென்ட் சரியாக இருக்கும். புரோட்டீன் நிறைந்த உணவுகள் தசைக் கட்டமைப்பை ஊக்குவிப் பதோடு, சில மணிநேரங்களுக்கு உங்களைத் திருப்திப்படுத்திடும்.

போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வது, ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பல் ஆரோக்கி யத்தை மேம்படுத்த உதவிடும்.

வைட்டமின் டி3 சப்ளிமென்ட்ஸ் உடலின் ஹார்மோனல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவை மேம்படுத்த உதவிடும்.

இரும்புச்சத்துக்கள், பெண்களுக்குக் குறிப்பாக ரத்தச் சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாத்திட உதவும்.

30 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ் சராசரியாக ஒருவருக்கு எப்போது 30 வயதாகிறதோ அவர்களின் உடலில் வளர்சிதை மாற்றம் மற்றும் உணவுகள் மூலம் சத்துகள் உறிஞ்சப்படுவது குறையத் தொடங்கும்.

30 வயதில், வைட்டமின் டி, ஒமேகா 3, வைட்டமின் சி, கொலாஜன், புரோட்டீன் சப்ளிமென்ட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம், ஜிங்க் மற்றும் கால்சியம் கொண்ட சப்ளிமென்ட் ஆகியவை பொதுவானவை. அதிலும், பாதுகாப்பான வைட்டமின்கள் பெரும்பாலும் உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி சேர்ப்பது வயதான காலத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது.

கற்றாழை, முருங்கை இலைகள், ஸ்பைருலினா, கோதுமை க்ராஸ், ஹெம்ப் அல்லது இயற்கையான புரோபயாடிக்குகளும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

40 வயதிற்கான சப்ளிமென்ட்ஸ் உங்களுக்கு 40 வயதாகும்போது உடல் முதுமையின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். இந்த நேரத்தில் நீங்கள் சரியான சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்.

வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக அறியப்படுகின்றன. எனவே, இவை உங்கள் சருமம், முடி ஆகியவற்றைப் பாதுகாக்கவும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் உதவிடும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை எலும்பு அடர்த்தி குறைவதன் விளைவுகளை எதிர்கொள்ள உதவுகின்றன. பெரும்பாலானவர்கள், அவர்களது
40 வயதுக்கு மேற்பட்ட காலத்தில் எலும்பு தேய்மானப் பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்குகிறார்கள். இதனைத் தடுக்க கால்சியம், வைட்டமின் டி சப்ளி மென்ட்ஸ் எடுத்துக்கொள்வது சிறந்தது.வைட்டமின் பி 12 சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம், நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து உடலுக்குத் தேவையான வைட்டமின் உறிஞ்சப்படாமல் இருப்பதைத் தடுக்க உதவுகிறது.

துத்தநாகம், அதாவது ஜிங்க் மற்றும் செலினியம் சப்ளிமென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தைராய்டு செயல்பாடுகளைப் பராமரிக்கவும் உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் சப்ளிமென்ட்ஸ் உங்கள் ஒட்டுமொத்த உடலின் ஆற்றலுக்கு உதவுகின்றன.

50 வயது மேற்பட்டவர்களுக்கான சப்ளிமென்ட்ஸ் உங்களுக்கு 50 வயது எட்டியவுடன், உங்கள் உடல், வயதாவது தொடர்பான சில பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்குவீர்கள். வைட்டமின் டி மற்றும் கால்சியம் சப்ளிமென்ட்ஸ் எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உங்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாத்திடும். ஜிங்க் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைப் பராமரித்திடும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற அளவைப்  பராமரிக்க உதவுவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சிடச் செய்யும்.

ஒமேகா 3 மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு சப்ளிமென்ட்டுகள் கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் வயதாவது தொடர்பான பிற கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கவும், தாமதப்படுத்தவும் உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com