
அடிக்கடி கோப உணர்ச்சிக்கு ஆளாகின்ற தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் வளர்ப்பின்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது!
குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிறபோது, அதன் அறிவு வளர்ச்சி கூர்மையடையத் தொடங்குகிறது. பூப்போல சிரித்த முகத்துடன் இருக்கும் குழந்தை, தன் சுற்றுப்புற சூழ்நிலைகளை கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறது. முக்கியமாக, தன் தாயின் முகபாவங்களையும், செயல்களையும் கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் அடைகிறது.
அமுதூட்டும் தாய், எப்போதும், சிரித்த முகத்துடன் இருந்தால், குழந்தைக்கு அது குதூகலத்தை ஏற்படுத்தும். கோபமாகவும், சிடுசிடுவென்று எரிந்து விழுந்து கொண்டும், புலம்பிக்கொண்டும் இருந்தால் தன்னைப் பராமரிக்கின்ற தாயினை, அவளுடைய முகபாவங்களை வைத்தே ஒரு பெரிய மனித தோரணையில் நன்றாகப் புரிந்துகொள்ளும் சக்தி அக்குழந்தைக்கு உண்டு.. அது மட்டுமல்ல; அவைகள் அனைத்தும் அந்தப் பிஞ்சு மழலையின் மனத்தில் சிறிது, சிறிதாக படிய ஆரம்பித்துவிடும். பிறகு, அது குழந்தை முகத்திலும் வெளிப்பட ஆரம்பிக்கும். சில குழந்தைகளின் முகத்தில் அது பயமாகவும் வெளிப்படும்.
மழலை மாசற்ற சிரிப்போடு எப்போதும் இருக்க வேண்டும் என நினைக்கும் தாய்மார்களே, குழந்தையின் எதிரில், யாருடனும், கோபமாக பேசவோ, நடந்துக்கொள்ளவோ கூடாது. தங்கள் குழந்தை பிற்காலத்தில் நல்ல கண்ணியமாகவும், கனிவாகவும், சிரித்த முகத்தோடும் இருக்க வேண்டுமானால், அது தாய், தந்தையின் செயல்களில்தான் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.