தலைமுடி தானம்.

தலைமுடி தானம்.

திருச்சி புத்தூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி கீர்த்தனா. வயது பதினேழு. அவரது அப்பா விஜயகுமார், யோகா ஆசிரியர். அம்மா சித்ரா, வழக்கறிஞர். கீர்த்தனா, முதலாமாண்டு சட்டப் படிப்பு மாணவி. அவர் தனது நீண்ட தலைமுடியினை வெட்டி, புற்றுநோயாளிகளுக்காக தானமாகத் தந்துள்ளார். அவர் ஏன் புற்றுநோயாளி களுக்காகத் தர வேண்டும்? அவர்களுக்கு இது எந்த வகையில் பயன்படும்? கேள்விகள் நம்மைப் பின் தொடர்ந்தன.

புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு, அவர்களது தலைமுடி உதிர்தல் வழக்கமான ஒன்றாகும். நோய்க்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், அவர்களுக்கான கீமோ தெரபி சிகிச்சைகள் விளைவாக தலைமுடி உதிர்தலின் தாக்கம் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு தலை முடியானது முற்றிலும் கூட உதிர்ந்து விடும். இதனால் அப்பெண்கள், வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அக்கம்பக்கத்தில் மற்றவர்களின் பார்வையில் படாமல் கூட, வீட்டுக்குள் சிறை வைத்தது போல தனக்குத்தானே முடங்கிக் கொள்வார்கள்.

இது போன்று உள்ள புற்றுநோயாளிப் பெண்களும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், வெளியுலகம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கான தலைமுடி “விக்”கினைத் தயாரித்தளித்து வருகின்றன. தலைமுடியினைத் தானம் தருபவர்களுக்கு என சில வரைமுறைகள் உள்ளன. தலைமுடியினை சரியான அளவுக்குக் கத்தரித்து வழங்கா விட்டால் தானமாக வழங்கும் தலைமுடி பயனற்றதாகப் போய்விடும். குறைந்தபட்சம் எட்டு அங்குலம் நீளம் முதல், பதினான்கு அங்குலம் நீளத்துக்கு மேலும் வெட்டி தலைமுடி தானம் தரலாம்.

கல்லூரி மாணவி கீர்த்தனா
கல்லூரி மாணவி கீர்த்தனா

(திருச்சி கல்லூரி மாணவி கீர்த்தனா, சுமார் ஐம்பத்தியாறு செ.மீ. அதாவது ஒன்னேமுக்கால் அடி நீளத்துக்கும் மேலாகவே தனது தலைமுடியினை வெட்டித் தந்துள்ளார்.)

இந்தத் தலைமுடியினை “விக்” வடிவில் தயாரித்து, புற்றுநோயாளிகளுக்கென வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதுமாக இயங்கி வருகின்றன. அவர்கள் முடியின் நீளம், அதன் அடர்த்தி போன்ற விசயங்களைக் கவனத்தில் கொண்டே பொருத்தமான கூந்தலைப் பெறுகின்றனர். சாயம் அல்லது வண்ணம் பூசப்பட்ட கூந்தல் முடியினை அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள். கூந்தல் வளர்ச்சிக்காக ரசாயண சிகிச்சை மேற்கொண்டிருந்தவர்களிடம் தலைமுடிகள் வாங்குவதில்லை. முடியின் அடர்த்தியினையும் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.

தாய், தந்தையுடன் கீர்த்தனா
தாய், தந்தையுடன் கீர்த்தனா

கல்லூரி மாணவி கீர்த்தனாவிடம் நாம் பேசினோம்.

“இயல்பாகவே என் தலைமுடி நீளமாக இருக்கும். என் கால் முட்டிக்கு மேல் வரை தொங்கும். சுமார் இரண்டரை அடி உயரம் இருக்கும். நீளமான தலைமுடி உள்ளவர்கள், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தலைமுடி முழுவதுமாக உதிர்ந்த பெண்களுக்கு தலைமுடியினைத் தானமாகத் தரலாம் என்றறிந்தேன். அப்போது தான் நாம் ஏன் தலைமுடியினை வெட்டித் தரக் கூடாது என்று யோசித்தேன். என் முடிவினை என் அம்மாவிடமும் என் அப்பாவிடமும் தெரிவித்தேன். அவர்கள் இருவருமே சமூக நல ஆர்வலர்கள். துணிந்து களமிறங்கிச் செயல்படும் செயற்பாட்டாளர்கள். அவர்கள் உடன் சம்மதம் தெரிவித்தனர்.

தேனி லெட்சுமிபுரத்தில் உள்ளது ஸ்ரீ ரேணுகா வித்யாலயம் என்கிற சேவை அமைப்பு. அதன் ஒரு கிளை அமைப்பு தான் “HAIR  CROWN”   என்பதாகும். புற்று நோயாளி களுக்கான “விக்” தலைமுடியினை இவர்கள் தான் வடிவமைத்துத் தந்து, அனுப்பி வைக்கிறார்கள். மேற்கண்ட அமைப்பிடம் பதிவு செய்தேன். தலைமுடி வெட்டி அனுப்புவதற்கான வழிகாட்டு முறைகளை அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். என் தலைமுடியினை அவர்களது ஒழுங்கின்படி வெட்டித் தருவதற்கு, பியூட்டி பார்லரில் இருந்து ஒரு பெண்ணை நியமித்துக் கொண்டோம்.

கூந்தலை எந்தப் பகுதியில் இருந்து வெட்டப் போகிறோமோ அங்கு இறுக்கமாக ஒரு ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப் பகுதி வரை முழுவதுமாக வெட்டி விடக் கூடாது. கூந்தலின் நுனிப் பகுதிக்கு மேலாக நாம் எதுவரை வெட்ட வேண்டுமோ அந்த இடத்தில் இறுக்கமாக மற்றொரு ரப்பர் பேண்டை மாட்டி விட வேண்டும். காரணம், கூந்தலின் நீளமும் அதன் அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அந்த நீளம் கூந்தலை தானமாகப் பெறும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதனைக் கவனத்தில் கொண்டு தலைமுடியினை வெட்ட வேண்டும். என்னுடைய தலைமுடியில் ஐம்பத்தியாறு செ.மீ. நீளத்துக்கு அதாவது ஒன்னேமுக்கால் அடி நீளத்துக்கும் மேலாகக் கத்தரித்துத் தந்துள்ளேன்.

என்னுடைய தலைமுடியானது “விக்” ஆகத் தயாரிக்கப்பட்டு எனக்கு முகம் தெரியாத ஒரு பெண்மணியின் துயரமான மனச் சங்கடங்களைத் தகர்த்து, அவரை மகிழ்விக்கும் அந்த ஒரு கணமே எனக்கு மிகவும் மிகுந்த பெருமிதத்தை அளிக்கும் தருணம் ஆகும்.”

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com