அஞ்ச வைக்கும் அக்னி நட்சத்திரம்

அஞ்ச வைக்கும் அக்னி நட்சத்திரம்

க்னி  நட்சத்திரம் ஆரம்பிக்கப்போகிறது.  ஏற்கெனவே வானிலை அறிவிப்பு மையம் மார்ச் மாதத்திலிருந்தே வெப்ப அலை வீசும்.  இந்த வருடம் வெய்யில் அதிகமாக இருக்கப்போகிறது.  நண்பகல் 12.00 மணி முதல் 03.00 மணி வரை மிகவும் அவசியம் இருந்தாலொழிய வெளியே போகாதீர்கள் என்று அறைகூவல் விடுத்தாகிவிட்டதே இப்போது அக்னி நட்சத்திரம் வேறயா என்று தானே கேட்கிறீர்கள்?

ஆமாம்! ஒவ்வொரு வருடமுமே சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெயில் உள்ள காலமான கத்திரி வெயில் எனப்படுகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அக்னி நட்சத்திர காலம் என்பது  ஆங்கில மாத கணக்குப்படி மே 4 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை என்பது பெரும்பாலும்  மாற்றமில்லாமல் அப்படியே வருகிறது என்பதுதான்.

இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு  வெப்பம் சுட்டெரிக்கும்.  தலையில் நேரடியாக வெயில் பட்டால்  மூளை நரம்புகள், பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு உடலில் பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றைத் தலைவலி, கண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.  தோல் நோய்களும் ஏற்படும்.  அது மட்டுமா? அம்மை, அக்கி போன்ற வெய்யில் காலத்திற்கென்றே இருக்கும் நோய்களும் தாக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் வெய்யில் சுட்டெரிக்கும்.  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவார்கள். உடலில் நீர்சத்து குறைவதால் சிலருக்கு  மயக்கம் ஏற்படும்.  இரவில் தூக்கம் சரியாக வராது.  உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நிறைய தண்ணீர், இளநீர், நீர் மோர் போன்றவற்றை அவ்வப்போது அருந்தி உடல் நலம் பேண வேண்டும். தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவை வெயில் காலத்தில் உடலுக்கு நல்ல குளிர்ச்சி கெடுக்கக்கூடியவை.

இதன் தாக்கம் மக்களை பாதிக்காமல் இருக்க அம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வித்து, பானகம், மோர் போன்றவற்றை நைவேத்தியம் செய்து விநியோகிப்பார்கள்.  மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே நீர்ப்பந்தல்கள் அமைத்து சாலை வழி செல்லும் பயணிகளுக்கு நீரும், மோரும் விநியோகிக்கலாம். கோடைக்காலம் வந்தாலே ஆங்காங்கே தண்ணீர் பந்தல் வைத்து, நீர் மோரும், தண்ணீரும் அந்தப் பக்கமாக போகிற வருகிறவர் களுக்குக் கொடுப்பார்கள். அதே போல பறவைகளுக்கும், நாய் பூனை போன்ற விலங்குகளுக்கும் குடிப்பதற்கு நம் வீட்டு மொட்டை மாடியிலும் வீட்டு வாசலிலும் பாத்திரங்களீல் நீர் வைக்கலாம். சில சமயங்களில் அக்னி நட்சத்திர நாட்களைத் தாண்டியும் சில நாட்கள் வெய்யிலின் தாக்கம் பூமியில் இருப்பதால் அதை 'பின் கத்திரி வெய்யில்' என்று கூறுகிறார்கள்.

வறுத்தெடுக்கும் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் விவசாய வேலைகள் செய்யக் கூடாது என்று கூறப்படுகிறது.  செடி, கொடி மரங்களை வெட்டக் கூடாது.  விதை விதைக்கக் கூடாது.  கிணறு, குளம் தோண்டக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.  மிகவும் தேவையாக இருந்தாலொழிய வெளியே காலை பத்து மணி முதல் மாலை நாலு மணி வரை செல்லக் கூடாது.  அதனாலேயே மக்கள் அக்னி நட்சத்திர காலத்தில் சுபநிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துவதை கூடியவரை தவிர்க்கவே செய்கிறார்கள்.  எல்லோரும் நீர் சத்து மிகுந்த உணவு வகைகளையே சாப்பிட்டு தங்கள் உடல் நலம் காத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் தங்கள் உடல் நலம் பாதிக்காமல் இருக்க இந்த அக்னி நட்சத்திர கால கட்டத்தில்,

              'அஸ்வத்தாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

              தந்நோ சூர்ய ப்ரசோதயாத்'

என்னும் சூர்ய காயத்ரி மந்திரத்தை ஜெபித்து பிரார்த்திக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com