திருப்பதி
திருப்பதி

திருப்பதி போக போறீங்களா? இதை படிங்க....

ஏழுமலையிலமர்ந்து அருள்பாலிக்கும், எம்பெருமானைத் தரிசிக்க, இந்தியா முழுவதுமிருந்து, ஏன், வெளிநாட்டுப் பக்தர்களும் ஏராளமாய் வந்து பெருமாளைத் தரிசித்து செல்கின்றனர். சுவாமியைத் தரிசிக்க இலவச தரிசனம், முந்நூறு ரூபாய் கட்டணத் தரிசனம், பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் போன்ற பலமுறைகள் இருக்கின்றன.

இலவச தரிசனம் தவிர மற்ற எல்லா தரிசனத்திற்கான டிக்கட்டுகளையும் தற்போது 'ஆன்லைனியே' பெறமுடியும். அறைகளையும் முன் பதிவு செய்யலாம். இதற்கு 'திருப்பதி தேவஸ்தான 'ஆப்' ஐ கைப்பேசியிலோ, கணிணியிலோ பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷனில் எப்போது கட்டண தரிசனம், ஊனமுற்றோர் முதியோர் தரிசனம் , சிறப்பு ஆர்ஜித சேவை், அங்கப் பிரதட்சஷினம் உள்ளிட்டவற்றிற்கு, டிக்கட்டுகள் மாதம் ஒரு முறை முன்பதிவு செய்யும் தேதிகள் அறிவிக்கப்படும். இல்லையெனில் 'நெட் செண்டர்களை' அணுகியும் தரிசன டிக்கட்டுகளைப் பெறலாம். சென்னையிலுள்ளவர்கள், தியாகராயநகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானக் கிளை அலுவலகத்தை நாடியும் பெறலாம்.

முன்னர் இலவச தரிசனத்திற்காக, இருபது முதல் முப்பது மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுவிட்டது. இப்போது கீழ்த்திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான 'டோக்கன்கள்' வழங்கப்பட்டு வருகின்றன. இதைப் பெறுவதற்கு 'ஆதார்' அட்டை ஒரிஜினலும், ஒரு நகலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

கீழ்த்திருப்பதியில், 'அலிப்பிரி' பேருந்துநிலையம் அருகே, 'பூதேவி காம்ப்ளக்ஸிலும், மெயின் பஸ்ஸ்டாண்ட் அருகே 'சீனிவாசம்' காம்ப்ளக்ஸிலும், ரயில் நிலையம் பின்புறம், கோவிந்தராஜ சாமி இரண்டாவது சத்திரத்திலும், அதிகாலை ஐந்து மணிமுதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. டோக்கனைப் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு சென்றால், மூன்றிலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள், பெருமாளைத் தரிசித்து ஆனந்திக்கலாம். காத்திருப்பு நேரத்தில் உணவும் வழங்கப்படுகிறது.

சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நாளொன்றுக்கு, இருபத்தைந்தாயிரம் டோக்கன்களும், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதினைந்தாயிரம் இலவச தரிசன டோக்கன்களும் வழங்கப்படும். டோக்கன்கள் தீரும்வரை தொடர்ந்து வழங்கப்படும். கிடைக்கப்பெறாதவர்கள், மேல்திருப்பதியில், வைகுந்தம் காம்ப்ளக்ஸ் வழியே சென்று தரிசனம் செய்யலாம்.

திருப்பதி பெருமாள்
திருப்பதி பெருமாள்

வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜனவரி மாதம் 01-01-2023முதல் 11-01-2023 வரை இலவச டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுப்பப்படுவார்கள். எனவே, நாளொன்றுக்கு, ஐம்பதாயிரம் இலவச தரிசன டோக்கன்கள் கீழ்த்திருப்பதியில் வழங்கப்படும். இந்த நாட்களில் முந்நூறு ரூபாய் தரிசன டிக்கட்டுக்கள் அனுமதிக்கப்படும்.

மேலும் இன்று(01-12-2022)முதல் முக்கிய பிரமுகர்கள், சிறப்புக்கட்டணம் செலுத்தியவர்கள், சிபாரிசு கடிதம் பெற்று வருபவர்கள் இவர்களுக்கெல்லாம் தினசரி காலை எட்டு மணி முதல் பணிரெண்டு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் இரவு முழுதும் காத்திருந்து, வரும் இலவச தரிசன பக்தர்கள், காலையிலேயே கோவிந்தனைத் தரிசிக்க முடியும்.

பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் வாணி டிரஸ்ட் சிறப்பு தரிசன டிக்கட்டுகள் இப்பொழுது பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகேயுள்ள மாதவம் காம்ப்ளக்ஸிலேயே கிடைக்கும். அறைகளும் முன்பதிவு செய்து கொள்ளலாம். தரிசனத்திற்காக மட்டும் காலையில் திருமலைக்கு சென்றால் போதும்.

என்றாலும் திருப்பதி சந்திரனுக்குகந்த ஸ்தலம். மலைமீது சுமார் பதினோரு மணிநேரம் தங்கி சுவாமி தரிசனம் செய்தால், கோவிந்தனின் அருளோடு, சந்திரனின் அருளையும் பெறலாம்.

வாடினேன் வாடி வருந்தினேன் மனதால்

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்; கோவிந்த. கோவிந்த. கோவிந்தா!

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com