ஆறா வடுவாக இருக்கும் சுனாமி!

சுனாமி நினைவு நாள்…!
ஆறா வடுவாக இருக்கும் சுனாமி!

2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் காவு வாங்கிய அந்த கருப்பு நினைவு தினத்தை இன்று லட்சக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி துக்கம் செலுத்திவருகின்றனர்.

சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இன்றும் அந்த நிமிடங்கள் நெஞ்சுக்குள் ரணத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அந்த சுனாமியிலிருந்து தப்பித்தவர்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்தங்களை இழந்து, உடைமைகளை இழந்து இன்றும் அந்த இழப்பிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். என்றும் ஆறாத வடுவான சுனாமி ஆழிப்பேரலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 பேர் உயிரிழந்தனர்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மறுநாள் அடுத்து நடக்கும் கொடூரமான சுனாமி ஆழிப்பேரலையை பற்றித் தெரியாமல், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். டிசம்பர் 26ஆம் தேதி அவர்களுக்கு நடக்கப்போகும் கொடூரத்தை அறியாமல் அடுத்தது புத்தாண்டு கொண்டாட்டத்தை பற்றி நிறைய பேர் கனவு கண்டுகொண்டும், யோசித்துக்கொண்டும் இருந்தனர்.

இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாிந்தன. ஆய்வாளர்கள் 10 நிமிடங்கள் வரை இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர். உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவில் நிலநடுக்கம் பதிவானதில்லை என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனர். ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது.

கடலில் தரைக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆயிரத்து 600 கி.மீ. நிள நிலத் தட்டுகள் சாிய காரணமாக அமைந்தன. இந்த நிலத்தட்டு சாிந்ததால் அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து அதிவேகமாக கடல் நீரைத் தள்ளியது. இதுவே ஆழிப்பேரலையாக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக ஆழிப்பேரலையாக எழுந்தது. சுமார் 15 அடி உயரத்திற்கு எழுந்த அலை ஊரையே சூறையாடியது.

சுனாமி தாக்கியதில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் 2.30 லட்சம் போ் உயிரிழந்தனர். தமிழகத்தில் சென்னை, கடலூா், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமாி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோா் உயிரிழந்தனர். என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் இந்தியா முழுவதற்கும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டது.

ஆக்ரோஷமாக எழுந்த ஆழிப்பேரலைக்கு இறையாக மாறிய லட்சக்கணக்கான மக்களின் உறவினர்கள் உயிரிழந்தோருக்கு திதி கொடுத்தும், மெழுகுவெர்த்தி ஏந்தியும், மலர் தூவியும், பால் ஊற்றியும் சுனாமி தாக்குதல் ஏற்பட்ட இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்றுடன் 18 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், அந்த சம்பவம் கண்ணைவிட்டு அகலாமல் இன்றும் நெஞ்சில் இருப்பதாக சுனாமியிலிருந்து தப்பியவர்கள் கூறுகின்றனர்.

சொந்த பந்தகங்களை இழந்த மக்கள் மற்றும் தங்களுடைய உடைமைகளை இழந்த மக்கள் என அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த சுனாமியால் ஒரே இரவில் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இழந்த மக்கள் எத்தனையோ பேர். இன்னும் அந்த இழப்பிலிருந்து மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற முடியாமல் தவிக்கும் மக்கள் ஏராளம்.

கொத்து கொத்தாக இறந்த மக்களைக் கடற்கரை பக்கத்தில் ஒன்றாக அடக்கம் செய்தனர். 100க்கும் மேற்பட்ட உடல்களை ஓரே இடத்தில் அடக்கம் செய்யும் வேதனைக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. பின்னர், அவர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமியில் நிறைய பேரின் உடல்கள் கிடைக்கவில்லை என்று அவர்களின் சொந்தக்காரர்கள் வேதனை தெரிவித்தனர். உலகத்தையே உறைய வைத்த 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி சம்பவம் இன்றும் ஆறா வடுவாக அனைவர் நெஞ்சிலும் இருந்துவருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com