
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கி வரும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (STANFORD UNIVERSITY) எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு நிலத்தில் பரந்து விரிந்துள்ளது. 1891ல் நிறுவப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகம், உலக அளவிலான மிகச் சிறந்த கண் மருத்துவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருபத்தைந்து கண் மருத்துவர்களைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருந்து ஐந்து கண் மருத்துவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அவர்களில் நான்கு பேர்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் என்பது தனிச்சிறப்பு. கண் மருத்துவர்கள் ஸ்ரீநிவாசன், வெங்கடேஷ் பிரசன்னா, ரத்தினம் சிவகுமார், லலிதா பிரசன்னா ஆகிய நால்வரும்தான் உலக அளவில் மிகச் சிறந்த கண் மருத்துவர்களின் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் மிகச் சிறந்த கண் மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ரத்தினம் சிவகுமார் அவர்களிடம் நாம் பேசினோம். அவருக்கு வயது அறுபத்தி இரண்டு.
எப்போது மருத்துவப் படிப்பு முடித்தீர்கள்?
மருத்துவப் படிப்பு என்பது மிகப் பெரிய கடல் போன்றது. ஒருபோதும் அதனைப் படித்து முடித்து விட முடியாது. மதுரை மருத்துவக் கல்லூரியில் 1983ல் ஒரு கோர்ஸ் முடித்தேன். 1986ல் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் முதுகலை கல்வி நிலையத்தில் சேர்ந்தேன். 1988ல் இருந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன்.
இதுவரை எத்தனை நபர்களுக்கு கண் மருத்துவம் செய்திருப்பீர்கள்?
நான் பணியில் சேர்ந்து முப்பத்தி நான்கு ஆண்டுகள் ஆகி விட்டன. 2000 ஆம் ஆண்டு தொடங்கி, இதுவரை சுமார் ஒரு லட்சம் கண் நோயாளிகளைச் சந்தித்து மருத்துவம் பார்த்துள்ளேன். 2௦௦௦ஆம் ஆண்டுக்குப் பின்னர் கண் மருத்துவம் சார்ந்து ஆய்வு நோக்கில் தீவிரமாக இயங்க ஆரம்பித்தேன். இந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக கண் மருத்துவ ஆய்வில் என்ன முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.
பொதுவாக கண் மருத்துவத்தில் உங்களின் “ஆகச் சிறந்த சிறப்பு” தான் என்ன?
பொது மருத்துவர்களோ அல்லது கண் மருத்துவர்களோ கண் நோயாளி ஒருவருக்கு என்ன பிரச்னை என்ன தொந்திரவு என்று குறிப்பிட்டு எங்களிடம் அனுப்புவார்கள். அவர்களுக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கத் தொடங் குவோம். கண்களில் உள்ள விழிக் கரும்படலம் சார்ந்த நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதில் நான் கொஞ்சம் எக்ஸ்பெர்ட். விழிக் கரும்படலம் பாதிப்பு என்பது நமக்கு ஏற்படும் சுமார் நாற்பது வகையான வியாதிகளில் இருந்து உருவாகக் கூடியது. அலர்ஜி, எலும்புருக்கி நோய், தொழுநோய், பால்வினை நோய், முடக்குவாதம் போன்ற இன்ன பிற நோயாளிகளுக்கும் கண்களின் விழிக் கரும்படலத்தில் பிரச்னைகள் தொந்திரவுகள் கண் நோய்கள் ஏற்படும். விழிக் கரும்படல நோய்களை வரும் முன் காக்க இயலாது. வந்த பின்னரே சரி செய்திட இயலும்.
கண் மருத்துவத்துறையில் சர்வதேச அளவில் எவ்விதம் கவனம் பெற்றீர்கள்?
கண்கள் சார்ந்த வியாதிகளுல் மூன்றினைக் கண்டு பிடித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ளேன். லெப்டோஸ் பைரோசிஸ் (Leptospirosis) மற்றும் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) ஆகிய இந்த இரண்டு நோய்களையும் எனது ஆய்வுகள் மூலமாக இந்திய அளவில் முதன் முதலில் நான்தான் வெளிக் கொணர்ந்தேன். மூன்றாவதாக ட்ரிமடோட் யுவைடிஸ் (Trematode Uveitis) என்கிற வைர்ஸ்சினை உலக அளவில் ஆய்வுகள் மூலமாக முதன் முதலாக வெளிக் கொணர்ந்துள்ளேன். காவிரி மற்றும் தாமிரபரணி ஓடும் பகுதிகளில் ஆற்றுத் தண்ணீரில் இருந்து பரவும் வைரஸ் அது. இது குழந்தைகளை மட்டுமே பாதிக்கும். கண் மருத்துவம் என்பது எட்டு பிரிவுகளை உள்ளடக்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில் உலக அளவிலான மெடிக்கல் ஜர்னல்களில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். கண் மருத்துவம் சார்ந்து சர்வதேச அளவில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் என் ஆய்வுகள் குறித்து சேப்டர்கள் எழுதி உள்ளேன்.
நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள, உலகளவில் தலைசிறந்த கண் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள்!