ஞாபக மறதி நோயை தவிர்க்க என்னென்ன செய்யலாம்? ஆய்வுகள் கூறும் எளிய வழிகள் என்ன?

செப்டம்பர் 21- உலக ஞாபக மறதி தினம்!
ஞாபக மறதி நோயை தவிர்க்க என்னென்ன செய்யலாம்? ஆய்வுகள் கூறும் எளிய வழிகள் என்ன?

ந்தியாவில் வயதானவர்களில் 7.4 சதவீதம் பேர் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதாக இந்திய எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி குழு மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 4 மில்லியன் பேர் இந்நோயின் காரணமாக அவதிப்பட்டார்கள். இந்தாண்டு 9 மில்லியன் பேர் இந்நோயில் அவதிப் படுகிறார்கள். இதில் ஜம்மு காஷ்மீரில் 11 சதவீதம் பேரும், மகாராஷ்டிராவில் 7 சதவீத பேரும் அவதிப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

வயது அதிகரித்தாலே  ஞாபக மறதி தானாகவே வந்துவிடும். பொருளை வைத்த இடத்தில் இருந்து மீண்டும் எடுப்பதற்கு வயதானவர்கள் சிரமப்படுவதை பல இடங்களில் காணலாம். இவ்வாறு ஏற்படும் ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பது தொடர்பாக கனடா ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்படி உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின் மூலமாக  ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் அல்லது ஞாபக மறதி ஏற்படுவதனை தாமதப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டோரோண்டோ ஒன்டாரியோவில் ஆய்வாளர் மொன்டிரோ ஒடாஸோ தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை மேற்கொண்டுனர். மருந்து மாத்திரைகளை விடவும் இந்த உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி மூலம் ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

பத்திரிகைகளில் வெளிவரும் குறுக்கெழுத்துப் போட்டிகளை முயற்சிப்பது. இசைக்கருவிகளை வாசிப்பது, தோட்டப் பராமரிப்பு, பறவைகள் வளர்ப்பது, ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றுக்கொள்வது என ஏதேனும் பொழுதுபோக்குகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். நட்பு வட்டங்களை அதிகப்படுத்தி, அவர்களுடனான அரட்டைகளில் உலக நடப்புகளை அறிந்து கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக...பத்திரிகை மற்றும் புத்தகம் படிக்கும் பழக்கம் ஒருவரின் மூளையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளும்போது எப்பொழுதும் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் நேர்மறையான சிந்தனைகள் பெருகி நினைவாற்றல் அதிகரிக்கும். குறைவாக நடப்பவர்களுக்கே டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் அதிகளவில் ஏற்படுகிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

வயதான காலத்தில் உங்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா? செஸ், கேரம் போன்ற "போர்டு 'விளையாட்டுகளை தொடர்ந்து விளையாட உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். குறிப்பாக 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள். இவர்கள் தொடர்ந்து செஸ் விளையாடினால் ஞாபக மறதி நோய்யை தடுக்கலாம் என்கிறார்கள்.

சராசரி அளவை விட தினமும் நீங்கள் எடுக்கும் ஒரு டீஸ்பூன் அதிக உப்பு உங்களை மந்தப்புத்தி உள்ளவர்களாக ஆக்குவதுடன்  மறதி நோயான அல்சைமர் வரவும் காரணமாகிறது என்கிறார்கள் டோரண்டோ  பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

மீன் உணவுகள், பருப்பு வகைகள், காளான், மாதுளம் பழம் போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிடுகிறவர்களுக்கு அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அதிகப்படியான மாமிச உணவுகள், வாட்டி உண்ணப்படும் மாமிச உணவுகள் மற்றும் உப்புக் கண்ட மாமிச உணவுகள் எடுத்துக் கொண்டவர்களுக்கு பிற்காலத்தில்  ஞாபக மறதி நோய் வருவதற்கு 5 சதவீதம் அதிக வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கொஞ்ச நாட்களாகவே உங்களுக்கு எதற்கெடுத்தாலும் ஆத்திரம் வருகிறதா, கோபம் வருகிறதா, எரிச்சல் எரிச்சலாக வருகிறதா இம்மாதிரியான நடத்தை மாற்றங்கள் உங்களுக்கு ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கான காரணமாக கூட இருக்கலாம். அல்லது அதன் ஆரம்ப கட்ட அறிகுறியாக கூட இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

தினமும் மாதுளை சாறு சாப்பிடுவதால் அது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்காமல் பார்த்துக் கொள்கிறது என்கிறார்கள். எனவே, இந்நோயை தவிர்க்கும் ஆற்றல் மாதுளை சாறுக்கு உண்டு என்பதை கண்டறிந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com