நாம்  பணியாற்றும் அலுவலகம் சொர்க்கமாக அமைய என்ன செய்யலாம்?

நாம் பணியாற்றும் அலுவலகம் சொர்க்கமாக அமைய என்ன செய்யலாம்?

நாம்  பணியாற்றும் அலுவலகம் சொர்க்கமாக அமைய என்ன செய்யலாம்?

ரசாங்க வேலையோ, தனியார் நிறுவனமோ... இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் சொன்னால் புரியாது. அனுபவித்தால், ஒரு வேளை புரியலாம்.

வீட்டிலிருக்கும் பெண்கள் பெரும்பாலும் ‘வாழ்க்கையை வீணடித்து விட்டோமோ’ என நினைக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களோ உழைத்தும் நிம்மதியாக வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு 10-12 வருடங்கள் பின்நோக்கிச் செல்வோம். இல்லத்தரசிகளாக இருந்த பெண்கள், ‘நாம் படித்து  வேலைக்குச் சென்றால்  நாமும்  சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையுடன் வாழலாம்’ என்ற நினைப்புடன் தம்மை வளர்த்துக்கொண்டார்கள். படித்து வேலைக்குச் சென்று ‘தன்னால் முடியும்’ என நிரூபித்தார்கள். தன் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு அலுவலகம் வாய்ப்பளித்தது. தன் காலில் சுயமாக நிற்பதற்கு வேலை ஒரு கருவியாய் அமைந்தது.

இன்றோ, “ஏன் நீங்கள் வேலைக்குச் செல்லவில்லை?” என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறாள் பெண். ஆனாலும் மனத்தளவில் இன்னமும் சிறைப்பட்டு இருக்கிறாள். வீட்டில் இருப்போர்க்கு பதில் சொல்வது போக,  அலுவலகத்திலும் பதில் சொல்லும் நிலை.  இரண்டு குதிரைகளை ஓட்டுவது ஒரு பெரிய சவால் அல்லவா? இரண்டும் வெவ்வேறு பக்கமாக இழுத்து விட்டால் ஓட்டுபவர் நிலை அவ்வளவுதான். இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். இடை வெளிகளைப் புரிந்துகொள்வோம்.

பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த காலகட்டத்தில்,  வீட்டைப் பாதிக்காதவாறு அமைந்த வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். (உ) ஆசிரியர், நர்ஸ் போன்ற வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். இன்றோ,  வேலையைப் பாதிக்காதவாறு குடும்பம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்பொழுது எல்லாத் துறைகளிலும் ஆணுக்கு நிகராகப்  பெண்ணுக்கும் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன. பெண்களுக்கு முன்பை விட வாய்ப்புகள் அதிகம். ஏன், இன்னும் ஒரு படி அதிகமாகச் சொன்னால், “எங்க பெண் வேலைக்குச்  செல்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை யென்றால் மேலே பேசலாம்” (அ) “வேலை செய்வது, இல்லை செய்யாமல் இருப்பது அவளுடைய விருப்பம். எதுவும் திணிக்கக்கூடாது (அ) அவளது சம்பளம் அவளுக்குரியது” என்று திருமணம் செய்வதற்கு முன்னால் பெண்ணின் பெற்றோர்கள் சொல்கிற அளவுக்கு இன்று வேலைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஆனால்,  பெரும்பாலான வீடுகளில் பெண்களை வேலைக்குப்போக அனுமதித்தாலும் வீட்டிலும் எல்லா வேலைகளையும் முழுமையாகச்  செய்ய வேண்டும் என்று குடும்பத்தார் எதிர்பார்க்கிறார்கள். “யார் உன்னை வேலைக்குப் போகச் சொன்னார்கள்? வேலைக்குப் போனாலும் இங்கு எல்லாவற்றையும் முடித்து விட்டுப் போ,” என்று கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்பவர்கள் ஏராளம். பெண்களும் நல்ல பெயர் எடுக்க, மற்றவர்களைத் திருப்தி செய்ய, தான் நல்ல மகள், மனைவி, தாய், மருமகள் என்ற பெயரெடுக்க, ஒரு ‘சூப்பர் உமனாக’ ஓடி ஓடி வேலை செய்கிறார்கள்.  இதையெல்லாம் சமாளித்துத் தினமும் கடைசியில்  அடித்தளத்தில் ஆயாசம், கசப்புதான் மிஞ்சுகிறது. எதற்கு இப்படி ஓடுகிறோம் என்ற உணர்வு இல்லாமல் அல்லல்படுகிறாள். எவ்வளவு செய்தாலும் எங்கேயோ எதையோ முழுவதுமாக செய்ய முடிவதில்லை என்ற நினைப்பு வேதனை தருகிறது.  ஆக, வீட்டையும் வேலையையும் சமனாகச் சமாளிப்பது பெரிய சவாலாக அமைகிறது.

அப்படி இருக்க, ஆஃபிஸை சொர்க்கமாக்குவது சாத்தியமா?

முதலில் ஓர்  உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வோம்!

இருபத்தி நான்கு மணிநேரத்தில் நாம் பாதி நேரம் அலுவலகம் மற்றும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். ஆகையால், வாழ்க்கையின் அந்தப் பாதி நேரம், சொர்க்கத்தில் இருப்பதுதானே நமக்கு நல்லது. ஆஃபிஸில் மகிழ்ச்சியுடன் இருப்பது, திறம்படச் செயல்படுவது போன்றவை இயல்பாகி எந்த வேலையிலும் நாம் திறம்பட செயலாற்ற மூன்று காரணிகள் உள்ளன. இதை புரிந்துகொள்ள வேண்டும்.

1. நாம் வேலை செய்யும் நிறுவனத்தின் நோக்கம் மற்றும் நமது வேலையின் தன்மை.

2. ந்த வேலையைச் செயலாற்றும் ஊழியரின் தனிப்பட்ட அணுகுமுறை, ஆற்றல்.

3. ந்த ஊழியருக்கு இருக்கக்கூடிய மற்ற உபகரணங்கள், உதவக்கூடிய சக ஊழியர்கள்.

 “நீங்கள் ஏன் வேலைக்குச் செல்கிறீர்கள்?”  எனக் கேட்டால், ‘சம்பளத்துக்காக’ என்ற பதில்தான் முதலில் தோன்றும். ஆனால் சம்பளத்திற்கு மட்டும் என்றால் எத்தனையோ வழிகள் இருக்க, ஏன் பிரத்யேகமாக உங்களுடைய துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்? சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், அந்தத் துறையில் தன்னார்வம், திறன், ஈடுபாடு,  வேலைக்கான உத்தரவாதம், மனமகிழ்ச்சி, பெருமை, திருப்தி,  நல்ல எதிர்காலம் - என்று பல காரணங்களும் இருக்கும். உங்களுடைய காரணத்தை யோசித்துப் பாருங்கள். அது நிச்சயமாக பணமாக மட்டுமாக இருக்காது.

எந்தத் தொழிலானாலும் மூன்று நிலைகளிலிருந்து செய்யலாம். ஒரு சின்ன கதை - ஒரு கோயில் கட்டிக் கொண்டிருந்தார்கள். செங்கற்களை அடுக்கிக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு கொத்தனாரிடம் சென்று  “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டோம். “பார்த்தால் தெரியவில்லை? செங்கல் அடுக்குகிறேன்” எனத் தெளிவாக பதில் வந்தது. இன்னொரு கொத்தனாரிடம் இதே கேள்வியைக் கேட்டோம். அவர் கட்டும்பொழுது அவ்வப்பொழுது கட்டுவதைச் சரிபார்த்துக் கட்டிக் கொண்டிருந்தார். “இந்தச் சுவரை கட்டுகிறேன். மதிய உணவு நேரத்திற்குள் முடிக்க வேண்டும்” என்று தீவிரமாக வேலையைத் தொடர்ந்தார். மூன்றாவதாக இன்னொரு கொத்தனாரிடம் கேட்கப் போனோம். அவர் கவனம் சிதறாமல் ஒருமுகநிலையுடன் செங்கற்களைக் கட்டிக் கொண்டிருந்தார். கேள்விக்கு அவரிடமிருந்து வந்த பதில் - “இந்த கோயிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.”

ஒரே வேலையானாலும் வேலையைப் பற்றி இம்மூவரின் கண்ணோட்டம் வேறுபடுகிறது. நிச்சயமாக மூன்றாமவர் தன் வேலையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுகிறார். அவரது அணுகுமுறை தூரப்பார்வை யுடன் இருக்கிறது.  சம்பளம் முக்கிய மானாலும் அதையும் விட உயர்ந்த நிலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர் இவர். இத்தகைய உணர்வுதான் நம் வேலையில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கும்.

“என் வேலை யாருக்கு உபயோகமாக போய்ச் சேருகிறது?” என்பதை யோசித்துப் பாருங்கள். பூ விற்கும் பெண், தன்னிடம் பூ வாங்குபவருக்கு அந்த  பூ மகிழ்ச்சி அளிக்கின்றது என்பதை உணர்ந்து, விற்கிற ஒவ்வொரு முழமும் தனது  மகிழ்ச்சிக்கு ஒரு கருவி என நினைத்தால், தானும் மகிழ்ச்சியுடன் வேலை செய்வாள்.

இது குடும்பங்களுக்கும் பொருந்தும். நம் குடும்பம் அன்புடன், நல்ல உயர்ந்த நோக்கத்துடன், ஒத்துழைப்புடன் செயல்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். வீடு சண்டை சச்சரவின்றி அன்பும் மரியாதையும் கலந்த கோயிலாகி விடும். இதுவும் ஒரு சொர்க்கம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com