உலக மாற்றுத் திறனாளிகள் தினம்!

டிசம்பர் -3
மாற்றுத்திறனாளி
மாற்றுத்திறனாளி

பிறப்பில் ஏற்பட்ட மாற்றங்களுடன் குடும்பத்தாரின் அலட்சியத்துடன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆட்பட்டு தினம் அல்லல்படும் சக உயிர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்களே என்றால் மிகையாகாது .ஒரு மனிதரின் உடலில் ஏற்படும் குறைகள் அந்த மனிதனுக்கு மட்டுமல்ல அவரைச்சுற்றி உள்ளோருக்கும் பெரும் அவதிக்குள்ளாக்கும் ஒரு விசயமாகவே சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை பார்க்கப் பட்டது .ஆனால் இன்று அந்த நிலை சற்று மாறியுள்ளது .காரணம் அரசால் உருவாக்கப்பட்டமாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான பள்ளிகள் சிறப்பாசிரியர்கள் நலத்திட்டங்கள் சலுகைகள் போன்றவைகள் .

ஆனால் இவை அனைத்தும் சேர வேண்டியவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதுதான் பெரும்பாலோரின் கேள்வி இன்றும் மாற்றுத்திறன் கொண்டவர்களின் ஆதார் அட்டைக்காக நடையாக நடப்பவர்களை நான் பார்த்துள்ளேன் . நான் சந்தித்த சேவை மனிதர் அவர் . தன்னைப் போலவே அவதியுறும் மாற்றுத்திறன் கொண்டவர்களை அரவணைத்து அவர்களுக்கான உதவிகளை செய்பவர் .அவர் சொன்னது இதோ ..

  “அரசின் சலுகைகள் இருந்தாலும் அதைத் தெரிந்து முறையாக பெறுபவர்கள் சதவிகிதம் மிக குறைவு . எங்களுக்கு ஆதார் கார்டும் வோட்டு உரிமையும் இருந்தாலும் அதில் தனிப்பிரிவாக எங்களை இன்னும் அரசு அங்கீகரிக்க வில்லை என்பது பெரும் குறை.

ஒருவர் கல்வி கற்றால் அவரின் தலைமுறையே நிமிர்ந்து நிற்கும். ஆனால் மாற்றுத்திறனாளிகளின் நிலை ? இவர்களுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வியைத் தர அரசு முன்வர வேண்டும் .ஆர்வமுள்ள மாற்றுத்திறன் கொண்டவர்கள் பெரும் பதவிகள் வகிக்க அவசியம் கல்வி கற்க முன்வர வேண்டும்

 இது தான் இன்றைய மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது .எவ்வளவோ வசதிகளும் மாற்றங்களும் வந்தாலும் இன்னும் நம்மில் ஒருவராக இவர்களை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டும் இரக்கமற்ற மனிதர்களும் நம்மிடையே உள்ளனர் .சமீபத்தில் நான் பயணித்த பேருந்தில் கண் பார்வையற்ற இளைஞர் ஒருவர் தட்டுத்தடுமாறி ஏற முயல அந்த பேருந்தின் நடத்துனர் அட நேரம் ஆயிடுச்சி இதுல இதுங்க தொல்லை வேற என்று முணுமுணுத்தது கேட்டு கோபம் வந்தது .ச்சே ..என்ன மனிதர்கள் இவர்கள் எனும் ஆதங்கத்துடன் அவரை சாடி அவரின் தவறைப் புரிய வைத்து வந்தேன் .

என் தோழி ஒரு சிறப்புப்பள்ளியை நடத்துகிறார் .அதில் சிறப்புக் குழந்தையான அவளின் மகளுடன் முப்பது வயது வித்யாசம் கொண்ட மனவளர்ச்சியற்ற சிறுவர் சிறுமிகள் உள்ளனர் . தன்னலம் கருதாது தன் கைக்காசை செலவழித்து அவர்களுக்காக பல்வேறு விழாக்கள் பயிற்சிகளை அவர் தந்து வருவது கண்டு பாராட்டுவேன் .ஆனால் அவர் என்ன சொல்வார் தெரியுமா ?

“அடப் போங்க அக்கா ..நான் மட்டும் உயிரைத் தந்து என்ன பிரயோசனம் ..இவங்களோட பெற்றோர்கள் புரிந்து எங்களோட கை கோர்த்தா எவ்வளவோ செய்யலாம் .இவர்கள் என்ன பயிற்சி பெறுகிறார்கள் என்பதில் கூடஅக்கறை இன்றி இருப்பார்கள் .இங்கே கொண்டு சேர்த்து விட்டதுடன் தங்கள் கடமை முடிந்தது என்று நினைப்பவர்களே அதிகம் , இந்தக் குழந்தைகள் அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு தயார் படுத்தலாம் .ஆனால் இங்கு வந்து பயிற்சி பெறுவதோடு சரி வீட்டுக்குப் போனதும் மூலையில் முடக்கி விடுகிறார்கள்  வேதனையுடன் அவர் சொன்னது உண்மைதான் .மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை சமூககேலிகளுக்குப் பயந்து வீட்டுக்குள் முடக்கி வைக்கும் பெற்றோர்களை பார்த்துள்ளேன் . (இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு) .ஆனால் இது சரியா ? பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளுக்கு ஊக்கம் தந்தால் மாற்றுத்திறன் மகத்தானதாக மாறும் என்பதே உண்மை .

ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசின் உதவித்தொகை போன்ற கிடைக்கும் சிறிய உதவிகளை மட்டும் பெற்று போதும் என்ற திருப்தியுடன் வீட்டுக்குள் முடங்காமல் முடியும் எனும் தன்னம்பிக்கையுடன் வெளியே வரத் துணிய வேண்டும் .இதற்கு அவர்களின் பெற்றோர் உதவ வேண்டும். முதல் பத்து வயதிற்குள் அவர்களுக்குத் தேவையான பிசியோதெரபி பயிற்சிகளை அளித்தால் பிறரை சார்ந்திராமல் தன் வேலையைத் தானே செய்யக்கூடிய சக்தி கிடைக்கும் .நம் பிறப்பும் வலிகளும் நம்மை ஏதோ ஒன்றை நோக்கி நகர்த்துவதை உணர வேண்டும் அது எது என்று கண்டுகொள்ள வேண்டும் அதற்கு இந்த பிரபஞ்சம் துணை நிற்கும். இது மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல சாதாரண நமக்கும் பொருந்தும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com