பூஜைக்கேத்த பூவிது!

தோட்டக்கலை!
பூஜைக்கேத்த பூவிது!

றுமண மலர்களை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அதன் அழகு கண்களைக் கொள்ளை கொள்ளும். மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, நந்தியாவெட்டை, அரளி, சாமந்தி, கனகாம்பரம் போன்ற பூக்களை வீட்டு முற்றத்திலோ, புழக்கடையிலோ, மொட்டை மாடியிலோ எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம். தினமும் அவற்றோடு நேரத்தைச் செலவிடும்போது மனதுக்கு சந்தோஷம் கிடைப்பதோடு  வீடும் அழகாகும். பூக்களும் கிடைக்கும்.

பூ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மல்லிகை. மல்லிகையில் ஜாதிமல்லி, ஊசிமல்லி, குண்டுமல்லி, அடுக்குமல்லி என பல வகை உள்ளன. மல்லிகையின் நடவுச் செடிகளை பதியன் முறையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். நர்சரிகளிலும் கிடைக்கும். ஒரு சிறிய தொட்டியில் வண்டல் மண், மணல் கலந்த கலவையைப் போட்டு இலேசாக முற்றிய குச்சியை அதில் வளைத்து வைத்து தினமும் நீர் ஊற்றுவதன் மூலம் மூன்று மாதங்களில் நடவுச்செடி தயாராகிவிடும். ஜூன் முதல் அக்டோபர் வரை மல்லிகை பயிரிட ஏற்ற காலம். மல்லிகைக்கு அதிகம் தண்ணீர் தேவையில்லை. வேர்ப்பகுதியில் இலேசான ஈரப்பதம்  இருந்தால் போதும்.

தொட்டியில் பயிரிடுவதாக இருந்தால் ஒன்றரையடி நீளம், அகலம், ஆழம் கொண்ட தொட்டியைப் பயன்படுத்த வேண்டும். நிலத்தில் பயிரிடுவதாக இருந்தால் இதேபோல் ஒன்றரையடி நீளம், அகலம், ஆழம் கொண்ட ஒரு குழி எடுக்க வேண்டும். நன்றாக மக்கிய  தொழு உரம், செம்மண், வண்டல் மண் தலா ஒரு பங்கு, ஆற்றுமணல்  இரண்டு பங்கு கலந்து குழியை மூட வேண்டும். பிறகு ஒரு வாரத்திற்கு  குழி நன்கு நனையும் வரை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொழு உரத்திலுள்ள வெப்பம் முழுவதும் வெளி யேறிவிடும். இப்போது மல்லி கையை நடவு செய்யலாம். மல்லிகை நடவு செய்ய மாலை நேரமே உகந்தது.  வீட்டு பால்கனி அல்லது வாசலில் ஆர்ச் கம்பி அமைத்து அதில் படர்த்தலாம். பார்க்க அழகாக இருக்கும். மல்லிகை மேல் நோக்கி வளர இரண்டடிக்கு மேல் வளர்ந்த பிறகு பக்க கிளைகள் வரும் போது அதை கிள்ளிவிட வேண் டும். ஓர் ஆண்டில் பூக்க ஆரம்பித்து விடும். வீட்டில் பூக்கும் பூவின் அழகும் வாசனையும் தனிதான்.

ரோஜா: பூக்களில் அழகு ரோஜாதான்,  ரோஜாவில் எண்ணற்ற இரகங்கள், வண்ணங்கள் உள்ளன. முறையாகப் பயிரிட்டால் ஏராளமான ரகங்களை வீட்டிலேயே பயிரிடலாம். நிலத்தில் பயிரிடுவதாக இருந்தால் நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது வண்டல் கலந்த குறுமண் ஏற்றது. மழைக் காலத்தில் நடவு செய்வது நல்லது. நர்சரியில் விதவிதமான ரோஜா செடிகள் கிடைக்கின்றன.  

தொட்டிகளில் பயிரிடுவதாக இருந்தால் ஒரு அடி ஆழம் கொண்ட சாதாரணத் தொட்டி போதுமானது. மூன்று பங்கு செம்மண், இரண்டு பங்கு மணல், ஒரு பங்கு நன்கு மக்கிய தொழு உரம் அத்துடன் 10 கிராம் லிண்டேன் மருந்து கலந்து ரோஜாவை நடவு செய்யவும். லிண்டேன் மருந்து கலப்பதால் வேர்ப் பூச்சி வராது. ஆறு மாதத்தில் பூத்து குலுங்க ஆரம்பித்துவிடும். பிறகு என்ன? வெளியில் கிளம்பும் போதெல்லாம் உங்கள் தலையிலும் ரோஜா பூக்கும். சாமந்தி, டெய்சி, மரிக்கொழுந்து போன்ற செடி களுக்கும். ரோஜாவுக்குத் தயார் செய்வது போன்ற மண் கலவை போதும். நான்கு மாதத்திலேயே பூக்க ஆரம்பித்துவிடும். 

செம்பருத்தி, அரளி, நந்தியா வட்டை போன்ற செடிகளுக்கு உப்புத்தன்மை இல்லாத  குறு மண்ணாக இருந்தாலே போதும். இலேசாக முற்றிய  முக்கால் அடி நீளம் கொண்ட குச்சியை இரண்டு முனையும் மண்ணில் இருக்கும் படி ஆர்ச் வடிவில் வளைத்து நடவு செய்யவும். நன்கு வளர்ந்த எந்த வகை செடியானாலும் ஆண் டுக்கு ஒருமுறையாவது கவாத்து (பக்க கிளைகளை வெட்டிச் சீர்ப்படுத்தல்)  செய்ய வேண்டும். இது மழைக் காலத்துக்கு முன் செய்வது நல்லது. பூச்சிகள் வராமல் தடுக்க அடிக்கடி வேப்பம் புண்ணாக்கை வேர்ப்பகுதியில் தூவ வேண்டும்.

பூ மொட்டு அரும்பத் தொடங்கியதும் செடியின் சுற்றுப்புற மண்ணைக் கிளறி விட்டு, அடி உரம் போட வேண்டும். தோட்டச் செடிகள், தொட்டிச் செடிகள் எது ஆனாலும் இரண்டு ஆண்டுகளில் மண்ணின் வீர்யம் குறைந்து விடும். அப்போது புதிதாக மண் கலவையை மாற்ற வேண்டும். துளசிச் செடிக்குக் கூடப் பூச்சிகள் தாக்கும். பூச்சியைக் கட்டுப்படுத்த ‘ரோங்கர்’ என்னும் திரவ மருந்தோடு ‘செவின்’ பொடியை நீரில் கலக்கித் தெளிக்கலாம்.

எல்லாச் செடிகளுக்குமே தினமும் இரண்டு முறை, காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஊற்றுவது நல்லது. நைட்ரஜன் கலந்த உரம் போட்டால் மினுமினுப்போடு உற்சாகமாக அவை வளர உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com