சுவரில் எழுதினால் தோஷம் உண்டாகும்!

சுவரில் எழுதினால் தோஷம் உண்டாகும்!

கொரோனாவின் மீதிருந்த பயம் கலந்த மரியாதை குறையத் தொடங்க, திருக்கோவில்களைத் தரிசிக்க துணைவியாருடன் கிளம்பினேன்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உறவினரின் மணிவிழாவில் ஆரம்பித்த ஆன்மீகப் பயணம், மூன்று நாட்கள், இருபத்தைந்து கோவில்கள் கடந்து தஞ்சை பெரிய கோவிலுடன் முடிவடைந்தது.

பார்த்த இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளம். குவிந்திருந்த கூட்டத்தில் ஒரு விழுக்காடு மக்களே முகக்கவசம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கொரோனா மீண்டும் வராது என்ற நம்பிக்கை. சென்னையில் முகக்கவசத்துடன் வலம் வந்து கொண்டிருந்த எங்கள் குடும்பம், அந்த சில நாட்களுக்கு முகக்கவசத்திற்கு விடுதலையளித்தது.

திருக்கடையூர் கோவிலில் அன்று பதினெட்டு மணிவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுற்றமும் நட்பும், மணிவிழா நடத்தும் புரோகிதர்கள், மங்கள வத்தியம் இசைப்பவர்கள், புகைப்படம் எடுப்பவர், வீடியோக்ராபர் என்று ஒவ்வொரு மணிவிழா நபரைச் சுற்றியும் கூட்டம். முன்பு கோவில் பிரகாரத்தில் நடந்து கொண்டிருந்த இந்த நிகழ்ச்சிகள் இப்போது அதற்கென்று கட்டப்பட்ட மணிவிழா மண்டபத்தில் நடக்கிறது. இதனால் கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைஞ்சலின்றி சுவாமி தரிசனம் செய்து கோவில் பிரகாரத்தைச் சுற்றி வர முடிகிறது.

இருபத்தைந்து கோவில்களில் தரிசனம் முடித்து, பண்டைய கோவில்களின் அமைப்பையும், சிற்பங்களின் அழகையும் வியந்த வண்ணம், எங்கள் பயணத்தின் கடைசியில்  தஞ்சை பெரிய கோவிலிற்குச் சென்றோம். அன்று பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மாலை. கோவிலின் மணற்பரப்பில் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் எனக்கு ஞாயிறு மாலை மெரினா கடற்கரையை நினைவூட்டியது.

கோவில்களில் கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது, இறை நம்பிக்கை நாளுக்கு நாள் கூடுகிறதே தவிர, குறைவதில்லை என்பது புரிகிறது

நாங்கள் பார்த்த கோவில்களில் சில ஆதீனத்தின் கட்டுபாட்டில் இயங்கி வருகின்றன. மற்ற கோவில்கள் அரசின் அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளன. ஆனால் எல்லாக் கோவில்களும் குப்பைக் கூளங்கள் இன்றித் தூய்மையாக இருக்கிறது.

இந்து அறநிலையத்துறை கோவில்களில், இறைவன் சன்னிதியில் அந்த சன்னிதியில் இருக்கும் இறைவனின் திருநாமத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறித்து வைத்துள்ளனர். பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழ் படிக்கத் தெரியாத மற்ற மாநிலத்தவரும் சன்னிதியில் உறையும் இறைவன் திருநாமம் அறிந்து கொள்ள முடியும். இறைவனின் திருநாமத்திற்கு முன்னால் “அருள்மிகு” என்று குறிப்பிட போதிய இடம் இல்லாத்தால் “அ.மி” என்று குறிப்பிட்டுள்ளார்கள். எழுத்தின் அளவைக் குறைத்து “அருள்மிகு” என்று குறிப்பிட்டால் நல்லது என்று தோன்றுகிறது. மேலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பும், தமிழில் அர்ச்சனை செய்யும் குருக்கள் பெயர், அவருடைய கைபேசி எண் குறிப்பிட்ட பலகையும் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் புராதன கோவில்கள் எல்லாம் சோழர் காலத்திலும், மராட்டிய அரசர்கள் காலத்திலும் உருவாக்கப்பட்டவை. நீண்ட மதில் சுவர்கள், உள்ளேயும், வெளியேயும் பெரிய பிரகாரங்கள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள கிராமமும், மக்களும் கோவிலையும், வரும் பக்தர்களையும் நம்பி வாழ்கின்றனர். கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்ட போது கிராமத்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பார்கள் என்பதை நினைத்து மனம் வலித்தது. அப்போது மூடிய சில கடைகள் இன்னும் திறக்கப் படவில்லை. ஆனால், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் பெருகி வருவதைப் பார்க்கும் போது, நிலைமை சீராகி வருகிறது என்ற மகிழ்ச்சி.

நம்முடைய மக்களுக்கு ஒரு (கெட்ட) பழக்கம். பண்டைக்கால நினைவுச் சின்னங்களுக்குச் சென்றால் அங்கேயுள்ள பாறைகளை அல்லது சுவற்றை வருகைப் பதிவேடாகப் பாவித்து தங்கள் பெயரை எழுதுவது அல்லது செதுக்குவது. இதில் புராதன வழிபாட்டுத் தலங்களும் அடங்கும்.

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் பல கோவில்களின் சுவற்றில் கிறுக்கல்களைப் பார்த்தேன். ஆனால், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி என்ற ஊரில் “அருள்மிகு ஸ்ரீலிவனேஸ்வரர்” என்ற கோவிலில் சுவரிலோ, பாறையிலோ கிறுக்கல்கள் காணப்படவில்லை.

இது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்று பார்த்தால் கோவிலின் பிரகாரத்தில் “சுவரில் எழுதினால் தோஷம் உண்டாகும்” என்று எழுதிய பலகையை வைத்திருந் தார்கள். “சுவரில் எழுதாதே” என்று பலகையில் எழுதியிருந்தால் ஒருவரும் மதிக்கப் போவதில்லை. ஆனால் தோஷம் உண்டாகும் என்றால் பயம். பரிகாரம் செய்ய வேண்டி வரும் என்ற அச்சம். இந்தக் கோவில் ஒரு பரிகாரத்தலம்.

இது போன்ற பலகையை மற்ற கோவில்களிலும் வைக்கலாமே?

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்ததால் வாகனப் பயணம் சுகமாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு பயணித்தால், மனதில் வருபவர்கள் வந்தியத் தேவன், ராஜராஜ சோழன், குந்தவை ஆகியோர். இவர்களை நமது மனதில் பதிய வைத்த எழுத்துச் சித்தர்கள் கல்கி, அகிலன், சாண்டில்யன், பாலகுமாரன் ஆகியோர்களை தலை தாழ்த்தி வணங்குகிறேன்.

திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம் ரெயில் நிலையங்கள் குப்பை துளிக்கூட இல்லாமல் சுத்தமாக இருந்தன. “தூய்மையான இந்தியா” என்ற இலக்கை நோக்கி நாம் சீராகப் பயணம் செய்கிறோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com