
வியாபாரத்தில்
ஏற்பட்ட நஷ்டத்தால்
விக்கித்துப் போன
என்ன(கண)வரை
ஆசையாய் அணைத்து
ஆறுதல் சொன்னேன்.
கல்லூரியில்
கனியாத காதலால்
கசங்கிப் போன
சிங்கார மகனை
சிரிப்புக் காட்டி
சிந்திக்க வைத்தேன்.
பள்ளியில்
படிக்காத பாடத்தால்
பலர் முன் திட்டு வாங்கிய
செல்ல மகளுக்கு
செம்மையாய் வழிகாட்டி
செயல்பட வைத்தேன்.
அலுவலக வேலையில்
அநாவசியமாய் அவமானப்பட்டதால்
ஆடிப்போன என்னை
காரணம் கேட்காமல்
கருணை இல்லாமல்
‘அழுமூஞ்சி’ என்றது, என் உறவுகள்.
என் கண்ணீருக்குத்
தலையணையே
தோழியாகிப் போனது!