கவிதை: மாதங்களில் நான் மார்கழி

கவிதை: மாதங்களில் நான் மார்கழி

கவிதை

பேதமில்லாமல், யாவருக்கும் 

காலைக்குளிரோடு பனி மூட்டம்!

ஓசோன் மண்டலக் காற்றைச் சுவாசிக்க

முன்னோர்கள் 

வாசலில் கோலமிட,

இல்லத்தில் அழகு கொஞ்சும்.

உள்ளத்தில் மகிழ்ச்சி

பொங்கும்.

தூய காற்றை ஆழ்ந்து சுவாசிக்க வீதியிலே,

நேயத்தோடு, ஆன்ம பலம் பெற பாடுவார்கள்,

பாவைப்பாடல்கள்.

கறை கண்டனை,

கார்மேக வண்ணனை

ஏத்தியே பாடிட

உள்ளத்தில் எழும் புத்துணர்ச்சி!

கன்னியர்கள்

நல்லதொரு கணவனைக்

கைப்பிடித்திட

நெய்யுண்ணாமல்

பாலுண்ணாமல்

நோன்பிருந்து

பாவைப்பாடல் பாடியே

கூடாரவல்லியன்று

நம்பிக்கையோடு

கூடியிருந்து

மூட நெய் பெய்த்து

முழங்கை வழிந்தோட

பொங்கலைப்

பல்லோர்க்கும் நல்கி

இறையருளைப் பெற்றே

இன்பமாக வாழ்ந்திடும்

மார்கழியை நாமும் போற்றுவோம்!

பனிமழை இசைமழையோடு

ஓசோன் படலம்

பூமிக்கருகே 

ஓங்கி உலகளந்தவனின்

புகழ்பாட வந்திடும்.

ஒளிநிலா நாளில் ஆடலரசனுக்குத்

திருவாதிரை திருவிழா!

குன்று தோறாடும் குமரனின் புகழ் பாடும் படி

உற்சவத் திருவிழா!

மார்கழி மூலத் திருநாளில்

அனுமன் புகழ் பாடும்

திருவிழா!

நிலவளம் பெருக்கிட மழை பெய்யும்,

உயிர்கட்கு இதமூட்டும்

குளிர் தென்றல் வீசும்

மார்கழியைப் போற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com