தந்தையின் கைப்பிடித்து
பள்ளி சென்றபோது
பொறாமையாக இருந்தது
ரிக்ஷாவில் வந்த
சகமாணவர்களைக் கண்டு!
சைக்கிளில் கல்லூரி
சென்றபோது ஏக்கம்
‘பைக்’கில் வந்த
மாணவர்களைக் கண்டு!
‘பைக்’கில் அலுவலகம்
சென்றபோது பொறாமை
காரில் வந்தவர்கள் மீது!
மணமாகி மழலைச் செல்வம்
இல்லாதபொது ஏக்கம்
பிள்ளை பெற்றவர்களைக் கண்டு!
பெற்ற பிள்ளைகள்
காதலில் விழுந்து
சொன்ன பேச்சை கேட்காமல்
பிரிந்து சென்றபோது
பொறாமை
கீழ்படியும் பிள்ளைகளைப்
பெற்றவர் மீது!
வயதாகி நோயுற்று
உறவினர்களிடம்
உதாசீனப்பட்டு
உழல்கையில்
பொறாமையாக உள்ளது
வீதியில் செல்லும்
சவ ஊர்வலங்களைக் கண்டு!
- ஆர். ரகோத்தமன், ஸ்ரீபெரும்புத்தூர்