உற்சாகப்படுத்தி பரிசுகள் தந்தது எங்கள் மங்கையர்மலர்.

உற்சாகப்படுத்தி பரிசுகள் தந்தது எங்கள் மங்கையர்மலர்.

ன்னுடைய இணைபிரியாத தோழி மங்கையர் மலர். ஆரம்பித்த நாள் முதல் படித்து வருகிறேன். முன் அட்டை படம் முதல் பின் அட்டை படம் வரை ஒரு வரி விடாமல் படிப்பேன். பெண்களுக்கான ஸ்பெஷல் புத்தகமாக, பெண்களுக்குத் தேவையான உடல்நலம் ஆரோக்யம், குழந்தை வளர்ப்பு, சமையல், கூட்டுக் குடும்பம், கல்வி, தையல், கோலம்... இப்படி பல விஷயங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லி, போட்டிகள் வைத்து உற்சாகப்படுத்தி பரிசுகள் தந்தது எங்கள் மங்கையர்மலர்.

திருமதி மஞ்சுளா ரமேஷ் ஆசிரியராக இருந்தபொழுது பல பரிசுகள் பெற்றுள்ளேன். 2010ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த ‘உல்லாச ஊஞ்சல்’ நிகழ்ச்சியில் திருமதி பாரதி பாஸ்கர் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் பரிசு பெற்றதை இன்னும் மறக்கவே இல்லை. என்னுடைய தோழி திருமதி. பிருந்தா ரமணியையும் அங்கு நேரே சந்தித்து (அவர் மகள் அம்பிகா என்னுடன் பட்டிமன்றத்தில் பங்கேற்றாள்) – அப்பப்பா இணைபிரியா தோழியாகிவிட்டோம்.

வருடா வருடம் நடக்கும் மங்கையர் மலர் விழாவில் கண்டிப்பாக கலந்துகொள்வோம். பட்டுப் புடைவைகள், மிக்ஸி கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் என பல பல பரிசுகளைத் தந்து என்னை ஊக்கவித்தது மங்கையர் மலர். பிறந்த வீட்டு சீதனம் போல் வந்துகொண்டே இருக்கும். மங்கையர் மலர் புத்தகமாக வெளிவந்தபோது ஒருநாள் லேட்டாக வந்தாலும் இருப்பு கொள்ளாது. தவிக்கும் மனம். புத்தகத்தை கையில் வைத்து (குழந்தை போல்) போட்டிகள் என்ன, புது விஷயங்கள் என்னென்ன என்று படித்த நாட்கள் மனதை விட்டு அகலவில்லை.


73 வயதாகும் எனக்கு, என்னுடைய பெண், தோழி, நெருங்கிய உறவினர் போல 43 வருடங்கள் வளர்ந்துள்ள மலர் இன்னும் பல வருடங்கள் புத்தகமாக வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com