பழைய சோறும் பச்சை மிளகாய் தொக்கும்!

பழைய சோறும் பச்சை மிளகாய் தொக்கும்!

"மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி.." என பாடல் பாடும் ஆவணி மாதமே பிறந்து விட்டது. ஆனாலும் சித்திரையின் வெயில் தாக்கம். நாற்பது வருடங்களுக்கு முன்பு இப்படி இருந்ததாக செய்திதாளின் செய்தி வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

காலை உணவாக எது எடுத்துக் கொண்டாலும்  பிடிக்கவே இல்லை. ஒரு மாறுதலுக்கு பழைய சோறு சாப்பிட்டுப் பார்க்கலாம்  என்று தோன்றியது..

பழைய சோற்றில் கை வைத்ததும் மனம் தறிகெட்டு ஓடியது .

பழைய சோறு... நீராகாரம்..பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருமில்ல... நீங்கள் தினப்படி சாப்பிடும் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி..  ஏன் பிரியாணியைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கென்று தனிப்பட்ட முறையில் ஏதாவது  பாடல்கள் இருக்கிறதா?

ஆனால் தி கிரேட் "பழைய சோற்றை மையமாக வைத்து ஒரு அருமையான பாடலை "திருநாள்"படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருப்பார்.

 "பழைய சோறு

பச்சை மிளகாய் 

பக்கத்து வீட்டு 

குழம்பு வாசம்..."  ன்ற வரிகள் (வார்த்தைகள்) நம்மை மெய்மறக்கச் செய்யும்.

பொன்னி அரிசி சோற்றை வடித்து ஆறவிட்டு 12 மணி நேரம் நீரூற்றி (நொதிக்க) வைத்து மறுநாள் காலை சாப்பிடுவது தான் பழையசோறு. இதை வாரம் இரண்டு முறை எடுத்துக் கொள்ள... உடல் பட்டாம்பூச்சி போல் (லேசாக)  மிதக்குமாம். கூடவே தேனீயின் சுறுசுறுப்பும் கிடைக்குமாம். (பெரியவர்கள் அன்றேசொன்னது… கண்டிப்பாக சரியாகத்தான் இருக்கும்.

பழைய சோற்றுக்கு தொட்டுக்கொள்ள மட்டும் விதவிதமா...

மோர் மிளகாய்" காக்கிச்சட்டை" கமல், மாதவிபோல் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும்.

 எலுமிச்சை/ மாங்காய் ஊறுகாய் "வாழ்வே மாயம்" கமல், ஸ்ரீபிரியா போல் சரியாகத்தான் இருக்கும்...ஆனா.... புதினா துவையல் / எள்ளு துவையல்/பருப்பு துவையல் "நாயகன்" கமல், சரண்யா மாதிரி ஒரு விதமான தனித்துவம்.

வத்தக் குழம்பு/ மொச்சகொட்டை கீரைத் தண்டு குழம்பு" சகலகலா வல்லவன்" கமல் ,அம்பிகாபோல 'பெப்பியாக இருக்கும்.

கரகர மிக்சர் ,மிளகு போட்ட காரா பூந்தி "பேர் சொல்லும் பிள்ளை" கமல், ராதிகா மாதிரி (து(மி)டுக்காக) சற்றே வித்தியாசமாய் இருக்கும்.

ஆனால் ‌‌, அம்மாசெய்யும் (சொக்க வைக்கும் சுவையில்) பச்சை மிளகாய் தொக்கு ...இருக்கிறதே....ஸ்ஸ்ஸ்ப்பா... "மூன்றாம் பிறை", "மீண்டும் கோகிலா", வறுமை நிறம் சிறப்பு கமல், ஸ்ரீதேவி போல் பொருத்தம்ன்னா பொருத்தம்... இதுதான் பொருத்தம் என்று அடித்துச் சொல்ல வைக்கும்.

கால் கிலோ பச்சை மிளகாய், 

50 கிராம் புளி

தேவையான உப்பு, 

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.( அம்மா, அம்மியில் வைத்து அரைப்பார்கள். அது தனிக் கதை)

இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து மிளகாய் கலவையில் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து கலவையைக் கொட்டி வதக்கி எடுக்க "பச்சை மிளகாய் தொக்கு" "நான் உள்ளேன் ஐயா" ன்னு சொல்லும்.

பழைய சோற்றுக்கு இந்த பச்சை மிளகாய் தொக்கை தொட்டு சாப்பிட்டுப் பாருங்கள்...

இப்பல்லாம் எங்க வீட்டுல வாரம் இரண்டு நாள் பழைய சோற்றுக்கு மாறியாச்சு  நாங்க...

அப்ப நீங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com