பெண் அர்ச்சகர்கள் நியமனம்... இடைக்காலத் தடை உடைபடுமா?

பெண் அர்ச்சகர்கள் நியமனம்... இடைக்காலத் தடை உடைபடுமா?

மீபத்தில் தமிழகத்தில் பயிற்சி நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மூன்று பெண் அர்ச்சகர்களுக்கு, சான்றிதழ் வழங்கி உள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர்களாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்களுக்கும், இன்னின்ன கோயில்களில் அர்ச்சகர் பணி நியமனம் என அறிவித்தது இந்து சமய அறநிலையத்துறை. தமிழகத் திருக்கோயில் கருவறைகளில் பெண் அர்ச்சகர்கள் என்கிற பேராதரவும், கருவறைகளில் பெண் அர்ச்சகர்களா என்கிற பெரெதிர்ப்பும் இரு வேறு தளங்களில் இருந்து தொடர்ந்து வெளிப்பட்டன. இதற்குள் இது போன்றதொரு அர்ச்சகர்  நியமனங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

2021ல் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு, நூறு நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக் கூடிய திட்டத்தினை அமுல்படுத்துவோம் என்று அறிவித்தது. கடந்த திமுக ஆட்சியின் போதே தமிழ்நாட்டில் சில கோயில்களில் ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள் தனியாகத்  தொடங்கப்பட்டன. திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய நகரங்களில் திருக்கோயில் சார்ந்து மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடந்த காலத்தில் இதில் பயிற்சி பெற்ற ஆண், பெண் ஓதுவார்கள், கோயில்களில் ஓதுவாராகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். பெண் ஓதுவார்களின் நியமனத்திற்கு அப்போதும் சில கோயில்களில் சில முணுமுணுப்புகள் தோன்றின. காலப்போக்கில் அதுவும் சரியாகிப் போனது. ஓதுவார்களுக்கு கோயில் சந்நிதிக்கு வெளியே தான் அவர்களது பணியே. முக்கிய சந்நிதிகளின்  வாசலில் நின்று திருமுறைகள் ஓதுவார்கள்.

ஆனாலும் இந்தப் பெண் அர்ச்சகர்கள் பணி என்பது வேறு. இவர்கள் கருவறைக்கு உள்ளே சென்றிருந்து செயல்படக் கூடியவர்கள். செயல்பட வேண்டியவர்கள். இதைத் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின், “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் சென்று கடமையாற்ற முடியாத ஒர் இடம் என்றால் கோயில் கருவறைகள் தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டத்தின் கீழ், கரு சுமக்கும் பெண்களும் இனிமேல் கோயில் கருவறைக்குள் சென்று கடமையாற்றலாம் என்பது ஏற்றமிகு செயல்பாடாகும் இது.” எனத் தனது வலைத்தளப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாத சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் ஒர் ஆண்டாக வைணவ ஆகமங்கள் மற்றும் வைணவ பூஜை முறைகளைக் கற்றுத் தேர்ந்து, முறைப்படி அர்ச்சகர் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகிய மூன்று பெண்களும்.  

ரம்யா, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர். முதுகலை கணிதம் தேர்ச்சி பெற்றுள்ளவர். அவருக்கு வயது இருபத்தி மூன்று. கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மேல் ஆதனூர் கிராமம். அம்மா அப்பா விவசாயக் கூலிகள். “எதையும் முற்றிலும் புதிதாக முதல் முறையாகத் தொடங்கும் போது நிறைய சவால்கள் எழத்தான் செய்யும். அதற்காகவெல்லாம் பின் வாங்கிட முடியாது. பின் வாங்கிடக் கூடாது. கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பெண்ணாகப் பிறந்து, ஒரு திருக்கோயில் கருவறைக்குள் சென்றிருந்து அர்ச்சகராகப் பணியாற்றப் போகிறோம் என்பதில் மனதுக்குப் பெரும் மகிழ்ச்சி.” என்கிறார் ரம்யா.

கிருஷ்ணவேணியும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். ரம்யாவின் கல்லூரித் தோழி. ரம்யாவிடம் அர்ச்சகர் பயிற்சியில் நீயும் நானும் சேரலாம் என்று தூண்டுகோலாக இருந்தவர். “காலை ஏழு மணிக்குத் தொடங்கும் அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள். இடைவேளை நேரம் விட்டு விட்டு இரவு ஏழு மணி வரைக்கும் தொடர்ந்து நடைபெறும். அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளில் எங்களுடன் ஆண்களும் இணைந்தே பயின்றனர். எங்களிடம் நன்கு மரியாதையாக பழகினர். வைணவ ஆகமம் மற்றும் பூஜா முறைகளைக் கற்றுத் தந்த வைணவப் பெரியோர்களும், எங்களுக்கு எவ்வித பேதமும் இன்றியே மிகச் சிறப்பாகவே கற்றுத் தந்தனர்.” என்கிறார் கிருஷ்ணவேணி.

ரஞ்சிதா, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி. பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அம்மா உமா அப்பா நடராஜ் ஆகிய  இருவரும் கூலித் தொழிலாளிகள். இளநிலைக் காட்சித் தொடர்பியல் தேர்ச்சி பெற்று, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தவர். குடும்பத்தின் முதல் பட்டதாரி. அது மட்டுமல்ல பட்டியலின வகுப்பில் இருந்து முதல் பெண் அர்ச்சகர். “ஒரு ஆண்டு பயிற்சி காலத்தில் மாதவிடாய் நாட்களில் மட்டுமே வகுப்புகளுக்குச் செல்ல மாட்டோம். மூன்று அல்லது ஐந்து நாட்கள் முழு ஓய்வில் இருப்போம். அப்போது அந்தப் பாடங்களும் எடுத்துப் படிக்க மாட்டோம். கோயில் கருவறைகளில் அர்ச்சகராகக் கடமை நிறைவேற்றும் போதும் இந்தப் பழக்கமானது எங்களுக்குப் பெரும் துணையாக இருக்கும் அல்லவா?” என்கிறார் ரஞ்சிதா.

ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா
ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஓராண்டு பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதற்காக, அர்ச்சகர் மற்றும் ஓதுவார் நியமனத்தில் இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளைக் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசும் இது தொடர்பான அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்யர்கள் சேவை சங்கமும், இந்து ஆலய வழிபாடுகள் சங்கமும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அர்ச்சகர் நியமனங்களுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தன. பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

“தமிழகத்தில் ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் என்பதில், தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும். அதை விடுத்து ஆகம விதிகளுக்குப் புறம்பாக புதிய நியமனங்களையோ அல்லது இடமாறுதல் உத்தரவோ பிறப்பிக்கக் கூடாது.” என இந்து சமய அறநிலையத்துறைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது உச்ச நீதிமன்றம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழக அரசின் புதிய திட்டமானது, தமிழகத் திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுமா? மேலும் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு உடைபடுமா?  நிலைநாட்டப்படுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com