ஸ்கேல்!

ஸ்கேல்!

ஓவியம்: ஜமால்

கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது சாருவுக்கு.

ஏன் தான் அப்பா இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்தாரோ? கொஞ்சமாவது விசாரிச்சாரா?

எப்படியோ தன் பொறுப்பு போனால் சரி  என்ற அவசரம். பெண்ணுக்கு நல்ல பணக்கார இடமாய் அமைஞ்சதில் பெருமை வேறு.

அம்மாவுக்கும் கூட என்ன காரணத்தாலோ பரம திருப்தி

ஆனால் கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வாழப்போனவளுக்கு கிடைத்ததோ சோக மயமான மெலோ டிராமா. மெல்லக்கொல்லும் நிமிடங்கள்.

கணவன் ரகு ஒரு வேலைப்பைத்தியம். காலையில் எழுந்ததும் காபியைக்குடித்து விட்டு குளியலையும், காலை டிஃபனையும் மறந்து ஓடும் ஒர்க்ககாலிக். இதில் கூடுதலாய் ஓவர் டைம் வேறு!

மாதா மாதம் எகிறும் பேங்க் பேலன்ஸை பார்த்து புளகாங்கிதம் அடையும் ஜீவன்.

மாமியார் சொந்த பிஸினஸ், உமன்ஸ் கிளப், பியூட்டி கிளினிக் என்று ஒரே பிஸி. அதிகாலையில் டிஃபனும், லேட்நைட் டின்னரும், நடு ராத்திரி வரை  வாட்ஸ்அப்புமாக ஆந்தை.

மைத்துனன் மாது படிப்பை தவிர கிரிக்கெட் கோச்சிங் கிளாஸ், கராத்தே கிளாஸ் என தினம் டைட் ஷெட்யூலை முடித்து விட்டு, இரவு டின்னர் சாப்பிட்டவுடன் மாடியில் திருட்டு  தம் அடிக்கும் விடலைப்பையன்.

நாத்தனார் ஒரு ஐ.டி. கேர்ள். 12மணி நேர வேலை. வெறுப்பாய் ஆபீஸ் போய் டயர்டாய் வீடு திரும்பும் சிறகொட்டிய பெண் புறா.               

மாமனார் சுந்தரேசன் சேல்ஸ் ரெப். மாசத்தில் 25 நாள் வெளியூர். மீதி 5நாள் நண்பர்களுடன் தண்ணியடிச்சு, சீட்டாட போதாது. சாப்பிடக்கூட வருவதில்லை. கல்யாணத்தின்போது பார்த்தது. முகமே மறந்து போகிற அளவுக்கு அந்நியனாகி விட்டார்

பெரிய பங்களா. ஏ.ஸி. லார்ஜ் ஸ்க்ரீன் டி.வி, இன் பில்ட் தியேட்டர். ரெண்டு ஷிஃப்ட் வேலைக்காரர்கள்.

வேலைக்காரர்களுடன் டிபன் சாப்பிட்டு டி.வி. பார்த்து, ஜோக்கடிச்சு சிரித்து மகிழவா கல்யாணம்?

கணவன் ரகுவுடன் ஒரு சினிமா பார்க்க, கோவிலுக்கு போக, பர்ச்சேஸ் பண்ண ஆசை, ஆசையாவே இருக்கு!

தனியே தன்னந்தனியே ஆளில்லா பங்களாவில் சிறை.

தலைவலிக்கு டாக்டர், டிரஸ்ஸூக்கு ஜவுளிக்கடை, சினிமாவுக்கு தியேட்டர், அழகுக்கு பியூட்டி பார்லர், வாழ்க்கைக்கு?

பணக்கட்டுகள் தாம்பத்யமாகுமா?

இல்லாத வாழ்க்கைக்கு எதற்கு இந்த ஆடம்பரம்?

ம்மாவிடம் சொல்லி அழ, “மாமனார், மாமியார், நாத்தனார் பிக்கல் புடுங்கல் இருக்காதுனு தான் உனக்கு கல்யாணம் செஞ்சேன்” என்றாள்.

“எல்லோரும் சம்பாதிக்கறாங்க, பணம், பங்களானு நல்லா வசதியா இருப்பேனுதான் சம்பந்தம் செஞ்சேன்” என்றார் அப்பா.

“நீ நல்லா இருக்கணும்னுதானே நாங்க விசாரிச்சு கொடுத்தோம்” என்றனர்.

“ஏம்மா ஆளாளுக்கு ஒரு ஸ்கேல் வைச்சிருக்கீங்க. எனக்குனு ஒரு ஸ்கேல் இருக்காதா?”  

“சரி உன் சிநேகிதி மாலா வரா. கொஞ்சம் அடக்கி வாசி” என்றாள் அம்மா.

“சாரு எப்படியிருக்கே?” என்று பாசமாய் கொஞ்சிய மாலா மாசமாயிருந்தாள்.

“நல்லாயிருக்கேன் மாலா. எனக்கப்புறம் உனக்கு கல்யாணம். அதுக்குள்ளே புள்ளையா?” சாரு கேட்க,

“போடி” என்று வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தாள் மாலா.

“எங்கே போறே?”

"தர்மாஸ்பத்திரிக்கு செக்கப் பண்ண.”

“ஏன்? தனியார் ஆஸ்பத்திரிக்கு போகலையா?”

“இல்லை சாரு. அதுக்கெல்லாம் வசதி வேணாமா? நாங்க ஏழை.”

“தனியாவா போறே?”

“அதை ஏன் கேட்கறே? காய்கறிக்கடைக்கு லீவு விட்டு புருஷன் பைக்கில் வராரு. மாமியார் தர்மாஸ்பத்திரியிலே வேலை பாக்குது. ஆட்டோவுக்கு கொடுத்த பணத்தில் புருஷனுக்கு இருமல் டானிக் வாங்கிட்டு நடந்து போறேன். ராத்திரி பூரா இருமறார். உடம்பை கவனிச்சுக்கவே இல்லை.” அழுதாள்.

“இந்தா 500 ரூ டாக்ஸியில் போ!” என்று சாரு நீட்ட…

“வேண்டாம் சாரு. என் புருஷனுக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் வரேன்” என்று கிளம்பினாள் மாலா.

“பாத்தியாம்மா மாலாவை. பணம்தான் அவளிடமில்லை. ஆனா வாழ்க்கை இருக்கு. ஸ்கேல் வைச்சு அளக்கறதில்லை வாழ்க்கை. அனுபவிக்கறதுதான் வாழ்க்கை. என்னிடம் பணம் குவியுது. பாசமிகு உறவுகள் இல்லை. மாலாவிடம் பணமில்லை. பாசத்தை கொட்டும் உறவுகள் இருக்கு. வாழ்க்கை இருக்கு.” விம்மினாள் சாரு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com