ஸைலன்ட் நைட்!

ஸைலன்ட் நைட்!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்!

கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களில் உலகப் புகழ் பெற்ற பாடலாகிய ‘ஸைலன்ட் நைட்’  (Silent Night) சுமார் 32 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இப்பாடல் எப்படி உருவானது?

ஜோசப் மோர் என்பவர் ஜெர்மனி நாட்டின் சால்ஸ் பர்க் அருகேயுள்ள நகரமான ஓபன் டார்ப் புனித நிகோலஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தையாக இருந்தவர்.

டிசம்பர் 24, 1818 மாலை கிறிஸ்துமஸ் திருப்பலி பூஜைக்குத் தயாராக கோயிலுக்கு வந்தார். அதே சமயம் பூஜையில் இன்னிசை நிகழ்வினை நடத்த ஆர்வத்துடன் ஆலய ஆர்கன் இசைக்கலைஞர் ஃப்ரான்ஸ் குரூப்பரும் வந்திருந்தார். தனது ஆர்மோனியத்தை அவர் திறக்கையில் அதிர்ச்சி அடைந்தார். காரணம்...

ஆர்மோனியத்தின் மணிவடம் (Bell Cord) எலியால் கடித்து வைக்கப்பட்டிருந்தது. இன்னிசை நிகழ்வினை எப்படி நடத்துவதென்கிற கவலை வந்துவிட்டது.

கிறிஸ்துமஸ் பூஜை ஆரம்பிக்க சில மணி நேரங்களே உள்ளன. வெளியில் பனி கொட்டுகிறது. ஆர்மோனியத்தை சரிபார்க்கவோ அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வரவோ வாய்ப்பில்லை. தவிர, கிறிஸ்துமஸ் சமயத்தில் யார் இரவல் கொடுப்பார்கள்? நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஜோசப் மோரின் மனதில் புதியதோர் எண்ணம் தோன்றியது.

“ஆர்கன் இசைக்கருவி இல்லையென்ற குறை தெரியாமல் அற்புதமான ஒரு பாடலை இசைக்க வேண்டும். அதைக் கேட்டு மக்கள் மெய் மறக்க வேண்டும். இசைக்கருவி பழுதான விபரம் அவர்கள் நினைவுக்கு வரக்கூடாது.” மீண்டும் மீண்டும் யோசித்தார். நினைவுக்கு வந்தது.

மடமடவென செயல்பட்டார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய  Silent Night பாடலைத் தேடியெடுத்து பிரான்ஸ் குரூப்பரின் உதவியுடன் இசை வடிவம் கொடுத்தார். ஒற்றை கிடார் கருவியின் உதவியுடன் ஒத்திகை நடந்தது.

பாடலின் மகத்துவம்:

பூஜை சமயம் ஆலய மணிகளின் பின்னணி இசையுடன் முதன்முறையாக இப்பாடல் இசைக்கப்பட அனைவரும் மெய்மறந்தனர். இதன் பிறகு இப்பாடல் ஒலிக்காத கிறிஸ்துமஸ் பண்டிகை இல்லையென ஆகிவிட்டது. கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களின் வரிசையில் இறுதியில் பாடப்படும் பாடலும் இதுதான்.

ஆலய விளக்குகள் அனைத்தையும் அணைத்து, மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் பாடும் மரபினைக் கொண்டு உலகமுழுவதும் ஒலிக்கும் ஒப்பற்ற பாடல் ஸைலன்ட் நைட்! ஹோலி நைட்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com