
அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பமாகி அடுத்து 25 நாட்கள் தமிழ்நாட்டில் கத்தரி வெய்யிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சென்னை வானிலை மைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அக்னி நட்சத்திரம் இன்று (மே 4)தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும். தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையை அக்னி நட்சத்திர காலத்தில் பார்க்க முடியும். ஏற்கனவே கடந்த சில மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சமீபத்தியில் பெய்த மழையின் காரணமாக வெப்பநிலை சற்று குறைந்திருக்கிறது.
இந்நிலையில் இன்று தொடங்கி இருக்கும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் உடனடியாக இல்லாவிட்டாலும் வரும் வாரம் படிப்படியாக உச்சத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவை பொய்த்துப் போனது. அடுத்து வரும் 4 நாட்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு தொடர்ந்து கூடியிருப்பதாலும் மாநிலம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்து இருக்கிறது.
இந்நிலையில் வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு மழை இருககும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. நான்கு நாட்களுக்குப் பின்னர் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். குறைந்தபட்சம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக,வரும் 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வருகிற 8-ந்தேதி, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும், பின்னர் புயலாக வலுப்பெறவும் மத்திய வங்க கடல் பகுதியை நோக்கி நகரவும் வாய்ப்பு உள்ளது. அப்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்கும்
அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்கப்போவதில்லை. ஆனால், அடுத்த வாரம் முதல் கத்தரி வெய்யிலின் ஆட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறார்கள்.