கோடை காலத்தில் உடலை ஜில்லுனு வைக்கும் உணவுகள்!
இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்க ஆரம்பித்து விட்டது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழுமையாக வெயில் காலம் வரும் முன்னே அதை எப்படி சமாளிப்பது நம் உடலை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றிய ஒரு சில குறிப்புகள்.
மண் பானை குடிநீர் :
இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும்.
இளநீர் :
இளநீரைப் போன்று சிறந்த எலக்ட்ரோலைட் வேறேதுவுமில்லை. இதில் இருக்கும் குளுக்கோஸ் நமக்கு உடனடி எனர்ஜியை அளிக்கின்றது.
லெமன் ஜூஸ் :
தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம்.
புதினா :
சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும்.
தர்பூசணி :
அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம்.
சோற்றுக்கற்றாழை :
அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
நெல்லி :
வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு.
நீர்மோர் :
தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம்.
காய்கறிகள் :
வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம்.