
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து மக்கள் ஒவ்வொரு நாளும் வியர்வை குளியலில் முங்கி எழுகிறார்கள். ஒவ்வொரு நாளும் செஞ்சுரி அடிக்கும் சூரிய பகவானால் குழந்தைகள், முதியோர் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். வீட்டில் அடைப்பட்டு இருப்பதே உடலை ஓவனில் வைப்பதிருப்பது போல் உள்ளது. சரி கொஞ்சம் காற்று வாங்க மொட்டை மாடிக்கோ அல்லது பூங்காக்களுக்கு சென்றாலே மரக்கிளையின் ஒரு இலை கூட அசைவதாக தெரியவில்லை.
புகையிலை விளம்பரத்தில் முகேஷ்க்கு என்னதான் ஆச்சு என்பதுபோல், அக்னி வெயிலால் நம் தமிழ்நாட்டுக்கு என்னதான் ஆச்சு என நினைக்கத் தோன்றுகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் சென்றுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் வெப்ப அழுத்தம் உருவாகி மொட்டை மாடியில் காயப்போட்ட வத்தல்போல் மக்களை வாட்டி வதைத்துவருகிறது.
வெப்ப அழுத்தம் என்றால் என்ன?
வெப்பநிலை மாற்றம் காரணமாக ஒரு பொருள் விரிவடையும் போது அல்லது சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் வெப்பஅழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. பூமியில் வெப்பநிலையானது என்றுமில்லாத வகையில் அதன் உச்சத்தைத் தொடும் போது இந்த வெப்ப அழுத்தம் காரணமாக பல்வேறு விதமான அசெளகரியங்கள் ஏற்படலாம்.
பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் கோடை காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றார்கள்.
வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, வெட்டவெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது அல்லது தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனை போன்ற ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருபவர்களே இந்த வெப்ப அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் கோடை காலங்கள் என்பது மனிதர்கள் பணியாற்றுவதற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதிக வெப்பநிலை கொண்டதாக மாறக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
“இந்த வெப்ப அழுத்தமானது மனிதர்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் மட்டுமல்ல கால்நடைகள் மற்றும் பறவைகளின் நலன்களிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.”
அதுமட்டுமல்ல, சமீபத்திய ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் என்பது விவசாயத் துறையின் முக்கிய கவலையாக உள்ளது.வெப்ப அழுத்தம் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளின் நலன் மற்றும் உற்பத்தி செயல்திறனை பாதிக்கிறது.
அத்துடன் மனிதனின் வாழ்க்கை முறையிலும் கூட அனேக மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பது உறுதியாகிறது. பொதுவாக அதிக வெயிலின்போது வெளியே செல்பவர்களுக்கு தலைவலி, குமட்டல், உடல் சோர்வு, மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வெப்ப அழுத்தத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள சில முக்கியமான வழிமுறைகள் இந்த வெயில் காலத்தில் பின்பற்றுவது அவசியம்.
சூரியன் உக்கிரமாக இருக்கும் போது வெயிலில் அலையும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
அப்படியே தவிர்க்க முடியாது வெயிலில் வெளியில் இறங்க வேண்டும் என்றால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அந்த வேலைகளை மேற்கொள்ள வேண்டும். சூரியக் கதிர்கள் எக்காரணம் கொண்டும் நேரடியாக நமது சருமத்தை தாக்கும் வண்ணம் நாம் செயல்படக்கூடாது.
உடலை வறட்சி தாக்காமல் போதுமான அளவில் நீரேற்றம் மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும். தாகமாக இருக்கும் போது மட்டுமல்ல நமது உடல் எடைக்குத் தக்கதென விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் வரையறுத்துள்ள அளவுக்கான தண்ணீரை அருந்த மறக்கக் கூடாது.
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
நேரடி பாதிப்பை எதிர்கொள்ளக்கூடியது சருமம் தான். ஆகவே, சருமத்தைப் பாதுகாக்க அதற்குப் பொருத்தமான வகையில் இயற்கை பூச்சுகளைப் பயன்படுத்தலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இளநீர், நுங்கு, பதனீர், பழரசங்களை அடிக்கடி அருந்தலாம். .
நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
மிக முக்கியமானது எண்ணெய் சத்து, கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை கோடை முடியும் வரை தவிர்த்து விடுவது நல்லது.