ஹெல்மெட் பராமரிப்பு குறித்த சூப்பர் டிப்ஸ்!

ஹெல்மெட் பராமரிப்பு குறித்த சூப்பர் டிப்ஸ்!

வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. மதிய நேரங்களில் வெளியில் காலெடுத்து வைத்தால் சுட்ட கத்தரிக்காய் போல அவிந்து போய்த் தான் மீள வேண்டியதாயிருக்கிறது. இந்த கஷ்ட காலத்தில் நாம் ஹெல்மெட்டுகள் குறித்தும் பேச வேண்டும். ஏனெனில், வெயில் சுட்டெரிக்கிறதே, இது வேறு தலைக்குப் பாரமாக எதற்கு என்று கழற்றி வீட்டில் வைத்து விட்டுச் சென்று விட முடியாது. ஏனெனில் இப்போது ஹெல்மெட் அணிவதைப் பொருத்தவரை சட்டம் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. சட்ட வரம்புகளைத் தாண்டி ஹெல்மெட் உயிர் காக்கும் கவசம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே எக்காரணம் கொண்டும் ஹெல்மெட் அணிவதை தவிர்க்கவோ, நிராகரிக்கவோ முடியாது, கூடவும் கூடாது.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை முதலில் ரூ.1000 என அறிவித்த மாநில அரசு தற்போது அபராதத்தை ரூ.500 ஆகக் குறைத்துள்ளது. என்பதால் நிச்சயம் ஹெல்மெட் அணியாமல் சாலைகளில் இறங்குவது மடத்தனம்.

ஆனால், இந்த வெயிலுக்கு முறையாகப் பராமரிக்கப்படாத பழைய ஹெல்மெட்டுகளை அணிந்து கொண்டு வெயிலில் சுற்றினால் வியர்த்து விறுவிறுத்துப் போவதில் பொடுகுத் தொல்லை, சரும வறட்சி, வியர்வை மற்றும் பொடுகு காரணமாகத் தலையில் இருந்து படிப்படியாக முகத்திற்குப் பரவும் பலவிதமான தோல் நோய்கள், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான பலவிதமான உஷ்ணப் பிரச்சனைகள் என வெயில் காலம் முழுவதும் அவஸ்தைப்பட வேண்டியதாகி விடுகிறது.

தினமும் ஹெல்மெட் அணிபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

ஹெல்மெட்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட ஆயுட்காலம் உள்ளது, ஏனெனில் ஹெல்மெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பிசின் மற்றும் பிற பொருட்கள் உங்கள் உடலின் வியர்வை மற்றும் தலையில் தேய்த்துக் கொள்ளப்படும் கேஷ எண்ணெய்கள், புற ஊதா ஒளிக்கதிர்கள் மற்றும் தொடர்ந்து அணிவதால் ஏற்படக்கூடிய சாதாரண தேய்மானம் ஆகியவற்றால் ஹெல்மெட்டுகளின் உட்புறங்களும், வெளிப்புறங்களும் தொடர்ந்து சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. எனவே, உங்கள் ஹெல்மெட்டை வாங்கிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது உற்பத்தி தேதிக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகேனும் மாற்றி விடுவது விவேகமான ஆலோசனையாகக் கருதப்படுகிறது. ஹெல்மெட் உற்பத்தியாளர்களின் ஒருமித்த கருத்தும் இதுவே தான் என்பதால் இது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஹெல்மெட் எது?

ஒரு ஹெல்மெட் உயர்தர பாதுகாப்பு அணைவுகளுடன் குறைந்தபட்சம் 20-25 மிமீ தடிமன் இருக்க வேண்டும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அனைத்து ஹெல்மெட்களிலும் ஐஎஸ்ஐ முத்திரையை கட்டாயமாக்கியது. இந்த பிரத்யேகக் குறி இல்லாமல் ஹெல்மெட்களை சில்லறை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாக கருதப்பட்டு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவில்நடைமுறையில் இருக்கும் ஹெல்மெட் சட்டங்கள் ரைடர்களின் தலைக்கு உகந்த பாதுகாப்பை வழங்காததால், அரை ஹெல்மெட் அணிவது என்பது அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129(a) கூறுகிறது. அதில், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முழு முக தலைக்கவசம் தொடர்பான சில குறிப்புகளையும் கூட அது கட்டாயப்படுத்துகிறது.

ஹெல்மெட் வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நிறங்கள்…

ஹெல்மெட்டுகளைத் தவிர்க்க முடியாது எனும் போது நிறங்களையாது நம் இஷ்டப்படி தேர்வு செய்யலாம் என்று நினைத்து விட வேண்டாம். ஆய்வாளர்கள் அதிலும் ஒரு செக் வைத்திருக்கிறார்கள். கறுப்பு மற்றும் கருமையான ஹெல்மெட்களை விட வெள்ளை நிற ஹெல்மெட்கள் பாதுகாப்பானவை என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. அவை அதிக ஒளியைப் பிரதிபலிக்கின்றன, இரவில் வாகனம் ஓட்டும்போது இது ஒரு அதி பாதுகாப்பு அம்சமாக இருக்கும். இருப்பினும், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பச்சை ஆகியவை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகளுக்கு பாதுகாப்பான நிறங்களாகவே கருதப்படுகின்றன.

ஹெல்மெட்டுகளுக்கான பராமரிப்பு டிப்ஸுகள்!

1.நீக்கக்கூடிய பகுதிகளை பிரிக்கவும்…

உங்கள் ஹெல்மெட்டில் அகற்றக்கூடிய பாகங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அடிப்படை ஹெல்மெட் உள்ளமைவுகள் தவிர வேறு எந்த நீக்கக்கூடிய பாகங்களுடனும் வரவில்லை, எனவே நீங்கள் லைனிங் மற்றும் பேடிங்கில் அதிக வலுவைப் பயன்படுத்தி சுத்தம் செய்தீர்கள் எனில் அவை கிழிந்து போகும் அபாயம் உள்ளது. எனவே,தேவைப்பட்டால், உற்பத்தியாளரின் இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது நீங்கள் ஹெல்மெட் வாங்கிய கடையில் கேட்கவும்.அவர்கள் அளிக்கும் ஆலோசனையின் படி, ஹெல்மெட்டில் அகற்றக்கூடிய பாக்ங்களில் இருக்கும் ஆணிகள், ஃபைபர் கிளாஸ்கள் போன்றவற்றை அகற்றி சுத்தப்படுத்தி விட்டு திரும்ப மாட்டும் செயலில் ஈடுபடும் போது அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஏனெனில் கவனமின்மையால் எதையாவது மறந்து விட்டு விட்டால் ஹெல்மெட்டை மீண்டும் ஒன்றாக இணைக்கும் போது அந்த பாகங்கள் இல்லாமல் இணைப்பதே கஷ்டமாகி விடும்.

2.பேபி ஷாம்பூவில் ஹெல்மெட்டை ஊற வைக்கவும்!

நீக்கக்கூடிய அனைத்து பாகங்களும் பிரிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுவதால், அடுத்த கட்டமாக ஹெல்மெட்டை மைல்டான பேபி ஷாம்பூ கரைசலில் குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஷாம்பூவை அதிகம் சேர்க்க வேண்டாம், மேலும் ஹெல்மெட்டை சுத்தம் செய்ய வலுவான இரசாயனங்கள் எதையும் பயன்படுத்தவும் வேண்டாம், ஏனெனில் அது மேற்பரப்பில் உள்ள பெயிண்ட்டை உரியச் செய்து அதன் பளபளப்பைக் குறைக்கும்.

3.ஹெல்மெட்டில் படிந்துள்ள அழுக்கை கழுவவும்!

ஹெல்மெட்டை 2 முதல் 3 மணி நேரம் ஊற வைத்த பிறகு, ஷாம்பு கரைசலில் இருந்து ஹெல்மெட்டை அகற்றி, மென்மையான பருத்தி துணி அல்லது மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி மேற்பரப்பில் இருந்து , அதன் மீது படிந்துள்ள தூசி மற்றும் அழுக்குகளை மட்டும் அகற்றவும். மேற்பரப்பில் அழுத்தமாகத் தேய்க்கக் கூடாது. டேப் வாட்டரைத் திறந்து விட்டு ஓடும் நீரில் ஹெல்மெட்டைக் காட்டி மிருதுவாகத் தேய்த்துக் கழுவினாலே போதும்.இது ஹெல்மெட்டின் மூலை முடுக்குகளில் படிந்திருக்கும் தூசுகள் மற்றும் அழுக்கைக் கூட கரைத்து சுத்தம் செய்து விடும். நீங்கள் ஹெல்மெட்டை முழுவதுமாக கழுவிவிட்டு, ஷாம்பு அல்லது அழுக்கு எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, அதை இயற்கையாக உலர அனுமதிக்கவும். கொதிக்கும் சூரிய ஒளியின் கீழ் அதை வைக்க வேண்டாம். அது இயற்கையாகவே அறை வெப்பநிலையில் காய்ந்தவுடன், உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி நீர் கறைகளைத் துடைத்து எடுத்து விடலாம்.

4. பாலிஷ் & மெழுகு இடும் முறை…

இப்போது ஹெல்மெட் சுத்தமாக இருப்பதால், அது இப்போது பாலீஷ் இடத் தயாராக உள்ளது! ஹெல்மெட்டுகளை நீங்களே வீட்டில் பாலிஷ் அல்லது மெழுகு இட்டுப் பராமரிப்பது என முடிவெடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாலிஷ் நல்ல தரம் வாய்ந்ததாக இருகக்கிறதா என்று உரியவர்களிடம் விசாரித்து அறிந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

5.ஹெல்மெட்டை மீண்டும் இணைக்கவும்...

இறுதியாக, சுத்தப்படுத்துவதற்காக கழற்றி வைத்த ஹெல்மெட்டின் அனைத்து பகுதிகளையும் ஒன்றாக இணைக்கவும், எல்லாவற்றையும் முறையாக ஒன்றாக இணைத்ததும் மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தி, ஹெல்மெட்டை இறுதியாக ஒரு முறை துடைக்கவும். இப்போது ஹெல்மெட்டின் உட்புறத்தில் ஹெல்மெட் டியோடரைசரைப் பயன்படுத்துங்கள். சிறந்த பலன்களுக்கு, டியோடரைசரை 4-5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பயன்படுத்தலாம்.

இப்போது மார்க்கெட்டில் கிடைக்கும் புதிய மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்டுகள் அனைத்து விதமான புதிய பாதுகாப்பு அம்சங்களுடனும், அகற்றக்கூடிய உள் லைனிங் மற்றும் பேடிங் போன்ற கூடுதல் அம்சங்களுடனும் வருகிறது, இது பராமரிப்பை மிகவும் எளிதாக்குகிறது.

அவ்வளவு தான் ஹெல்மெட் பராமரிப்பு டிப்ஸ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com