சூப்பர் சைட் டிஷ் 3!

சூப்பர் சைட் டிஷ் 3!

இட்லி, தோசை, இடியாப்பம், புலாவ்... இவற்றில் எதுவானாலும், தொட்டுக்கொள்ள வெஜ் சுல்தான், ஒயிட் சால்னா, சோயா பீன்ஸ் கூட்டு இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து அசத்துவோமா?

1. வெஜ் சுல்தான் 

கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு... (தேவையான அளவு) அரை வேக்காடு வேகவைத்து, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.சிறிதளவு பச்சைப் பட்டாணியை வேக வைத்துக்கொள்ளவும்.100 கிராம் பனீரை சின்ன துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு வெண்ணெயில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். 50கிராம் முந்திரியை ஊறவைத்து வெண்ணெய் போல் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு 10 பல், இஞ்சி சிறு துண்டு, பச்சை மிளகாய் 4, 4 வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் ஏலக்காய்த்தூள், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், சர்க்கரை தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஒரு தம்ளர் தண்ணீர்விட்டு கலவையை நன்கு கொதிக்கவிடவும். பின் வேகவைத்த கேரட், பீன்ஸ், காலிபிளவர், பட்டாணி, போட்டு வதக்கி கடைசியாக வறுத்த பனீர், சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி, 50 கிராம் உலர் திராட்சைபோட்டு இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும். பரிமாறும்முன் பாலேடு 50 கிராம், நெய் 2 டீஸ்பூன் சேர்த்து பரிமாறவும். புதுமையான சுவையில் அசத்தும் இந்த 'வெஜ் சுல்தான்.'

2. ஒயிட் சால்னா

ருளைக்கிழங்கு கேரட் காலிபிளவர் பீன்ஸ். (தேவையான அளவு). காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரை மூடி தேங்காயைத் துருவி அரைத்து முதல் இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும் ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை, 3 பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய சிறுதுண்டு இஞ்சி,10 பூண்டுபல், 2 வெங்காயம், சின்ன வெங்காயம் 10 சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை முதலில் சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்த பாசிப் பருப்பு அரைத்த பொட்டுகடலை விழுதை சேர்த்து தேவைப்பட்டால் சிறுது தண்ணீர்  சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து நுரைத்து வந்ததும் இறக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை தாளித்து கலவையில் சேர்க்கவும். கமகம மணத்துடன் 'ஒயிட் சால்னா' தயார்.

3. சோயாபீன்ஸ் கூட்டு

சோயா பீன்ஸ், காராமணி, கொண்டைக்கடலை தலா கால் கப் எடுத்து முதல் நாள் இரவே ஊறப்போட்டு மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த கலவையில் தலா 2 வெங்காயம், தக்காளி, தேவையான அளவு மிளகாய்த்தூள், சிறிதளவு மஞ்சள்தூள் 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு சிறிதளவு தேங்காய் துருவலுடன், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, கடுகு கருவேப்பிலை தாளித்து எடுக்க சுவையான சோயா பீன்ஸ் கூட்டு தயார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com