சித்ரா பௌர்ணமியில் தோன்றிய சித்ரகுப்தர்

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் பாதையில் சித்திரகுப்தர், எமதர்மராஜன் கோவில் உள்ளது. இங்கு எமன் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்க, அவரது கணக்கரான சித்திரகுப்தன் அருகில் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன் நிற்கிறார். இவர்களை சித்ரா பௌர்ணமி அன்று தரிசித்தால் மரண பயம் ஏற்படாது. கடன் தொல்லை வியாதிகள் தீரும். இங்கே சித்ரா பௌர்ணமி அன்று 101 வகை படையல்கள், பொங்கல் படைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி கோவில் உள்ளது. எழுத்தாணியை வலது கையிலும், பனை ஓலை ஏட்டை இடது கையிலும் ஏந்தி காட்சி தருகிறார் சித்திரகுப்தர். இங்கு சித்ரா பௌர்ணமி அன்று காலையில் அஷ்ட ஐஸ்வர்ய பூஜை, அலங்காரம், தீபாராதனைகள், பூஜைகள் நடைபெறுகின்றன. மாலையில் கல்யாண உற்சவம் நடைபெறும். சித்திரகுப்தர் வீதி உலா வருவார்.

தேனி மாவட்டம் கோடாங்கி பட்டி அருகில் உள்ள தீர்த்த தொட்டி எனும் இடத்தில் சித்திர புத்திர நாயனார் கோவில் உள்ளது. இவர் கேதுவுக்கு அதிபதி என்பதால், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.