நகைகளை பராமரிப்பது எப்படி?

நகைகளை பராமரிப்பது எப்படி?

பொதுவாக, நகைகளை வாங்குவதில் நாம் எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தைப் போல் அதை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் கவனம் இருக்க வேண்டும். அந்த வகையில் நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

* நகைகளை நல்ல பட்டுத் துணியால் ஈரம், வியர்வை போக துடைத்து மரப்பெட்டியில் வைத்தால் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

* தங்க நகைகளோடு கவரிங் நகைகளை சேர்த்து அணிந்தால் தங்க நகைகள் தேய்ந்து விடும்.

* தங்க, வைர வளையல்களை அணிந்து பாத்திரம் தேய்த்தால் தேய்ந்துவிடும். ஆதலால் அவைகளை கழற்றி வைத்துவிட்டு தேய்க்க வேண்டும்.

* நகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அதற்கான பெட்டிகளில் வைக்க வேண்டும். ஒன்றுடன் இன்னொன்று சேர்ந்தால் உராய்வு ஏற்பட்டு தேய்ந்து விடும்.

* விசேஷங்களுக்காக வெளியில் செல்லும்போது, மேக்கப் முழுவதையும் முடித்துவிட்டு நகைகளை அணிய வேண்டும். திரும்பியதும் முதலில் நகைகளை கழற்ற வேண்டும்.

* ஒட்டுமொத்தமாக எல்லா நகைகளையும் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாப்பது கூடாது. ஒரு நகையுடன் இன்னொரு நகை உராயாமல் தனித்தனியே வைத்து, அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது நல்லது.

* பெரும்பாலும் தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் முறை தான் பரிந்துரைக்கப்படுகிறது. ஆல்கஹால் கரைசலில் தங்க நகைகளை சில நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவி வந்தால் பாக்டீரியாக்களையும், அதிலுள்ள அழுக்குகளையும் நீக்குகிறது என்றாலும் சரியான பராமரிப்பு முறை தெரியாமல் அதை செய்வது தவறானது.

* தங்க நகைகளை வெதுவெதுப்பான நீரில் சிறிது அம்மோனியா கலந்து ஊறப் போட்டு கழுவினால், அவற்றில் உள்ள அழுக்குகள் அகன்று பளிச்சிடும்.

* சோப் கலந்த நல்ல நீரில் நகைகளை சிறிது ஊற வைத்து, பிறகு கழுவி சிறிய மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்து துடைத்து விட்டால், அழுக்கு அகன்று சுத்தமாக பளிச்சென்று மின்னும்.

* கல் வைத்த நகைகளாக இருப்பின், அவற்றை நகைக் கடையில் கொடுத்து சுத்தம் செய்து கொள்வது நல்லது.

* தங்க நகைகளை அளவோடு அணிந்தால் அழகு. அழகுக்கு மீறினால் ஆடம்பரம், ஆபத்தும் கூட.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com