கவலைகள் தீர்க்கும் கருட பகவான்!

கருட தரிசனம் சிறந்த சமயோகித புத்தியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல எண்ணங்களையும் அளிக்கிறது. ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது! தன்னிகரற்றது கருட தரிசனம்.
கருடதரிசன பலன்கள் :-
ஞாயிறு – நோய் அகலும்
திங்கள் – குடும்ப நலம் பெரும்
செவ்வாய் – தைரியம் உண்டாகும்
புதன் – எதிரிகள் அழிவர்
வியாழன் – நீண்ட ஆயுள் கிடைக்கும்
வெள்ளி – செல்வம் சேரும்
சனி – முக்தி கிடைக்கும்
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
கருடனுடைய மனைவியர் ருத்ரா, சுகீர்த்தி ஆகியோர் ஆவர்.
கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்பவர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுவர்.
ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து கருட பகவானை அர்ச்சனை செய்து பிரசாதம் பெறுவதால் பறவை தோஷம், நாக தோஷம், நவக்கிரக தோஷம் போன்றவை விலகும்.
புடவை கட்டும் கருடன்:-
திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கண்ணமங்கை தலத்தில் கருடாழ்வார் பெரிய உருவில் காட்சி அளிக்கிறார். பாம்பை ஆடையாக அணிந்துள்ளதாக ஐதீகம். இவருக்கு அதனால் 9 கஜம் புடவையை உடுத்துகிறார்கள்.
மூலைக் கருடன்:-
சிவகங்கை மாவட்டத்தில் - காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும். தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.
கை கட்டிய கருடன்:-
திருக்கண்ணங்குடி எனும் திவ்யதேசத்தில், கருடன், மற்ற இடங்களைப்போல் கை கூப்பிக்கொண்டு நில்லாமல், கைகட்டிக்கொண்டு வைகுந்ததில் இருப்பது போல் நிற்பது ஒரு சிறப்பு.
பெண் வடிவிலான கருடன்:-
சவுகார்பேட்டையில் உள்ள பைராகிமடம் திருவேங்கடம் ஏழுமலையான் ஆலயத்தில், பெண் வடிவிலான கருடனை தரிசிக்கலாம். கார்த்திகை மாத உற்சவத்தின் போது, அலர்மேலுமங்கைத் தாயார் இந்த பெண் கருட வாகனத்தில்தான் வீதி உலா வருகிறார்.
சங்கு சக்கர கருடன்:-
கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி கருடாழ்வார் இருக்கிறார். இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும்.