
கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கத்ரி மலைப்பகுதியில் மஞ்சுநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. கோவில் சிவலிங்கம் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு அன்னம்மா, மலையராயா என்ற தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. சங்கராந்தி பண்டிகை அன்று மட்டும் இந்த சன்னதியில் கதவுகள் திறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கும்.
பெருமாள் கோயில்களில் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி என்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் சங்கராந்தி பொங்கல் திருநாளன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
பெங்களூரு மையத்தில் ராமகிருஷ்ணா மடம் அருகே உள்ளது கவி கங்காதீஸ்வரர் கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் தினத்தன்று சூரிய பாதையில் மாற்றம் ஏற்படும் மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை (தக்ஷணாயத்திலிருந்து உத்திராயத்திற்கு மாறும் நேரம்) கங்காதீஸ்வரர் மூலவர் திருவடிகளின் கீழ் சூரிய ஒளி விழும். பிறகு சிவலிங்கத்தின் மீது முழுவதுமாக பரவி, பின்னர் மறைகிறது. அப்போது சிவனை வணங்கினால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவிலில் உற்சவமூர்த்தி காமகோடி அம்மன் கணு பொங்கல் நாளில், சகல அலங்காரத்துடன் மண்டபத்தில் குழு வீற்றிருப்பாள். அன்று மட்டும் தேங்காய் நிவேதனம் செய்வதுண்டு.
நவதிருப்பதிகளில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டத்தில் பொங்கல் நாளன்று கண்ணனுக்கு 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். கொடி மரத்தை வலம் வந்தபின் ஒவ்வொரு போர்வையாக அகற்றி, அலங்காரத்தை களைவார்கள்.
பொதுவாக சூரிய பகவான், கோயில்களின் நின்ற நிலையில் காட்சி தருவார். கேரள மாநிலம் ஆதித்யபுரம் சூரியதேவன் கோவிலில் சூரியன் மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இங்கு சூரிய பகவானை வணங்கும் போது, கிழக்கிலிருந்து உதயமாகி, ஒளி தரும் சூரியனையும் சேர்த்து வணங்குமாறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கோயில் கொண்டுள்ள சோமசுந்தரர் சித்தராக வந்து அங்குள்ள கல் யானைக்கு கரும்பு கொடுத்து உண்ண வைத்தது பொங்கல் நாளன்றுதான். இன்றும் இந்த சம்பவம் பொங்கல் நாளன்று கடைபிடிக்கப்படுகிறது.