டூ வீலர் ஓட்டும் பெண்களே! உஷார்! இதெல்லாம் மிக முக்கியம்!

டூ வீலர் ஓட்டும் பெண்களே! உஷார்! இதெல்லாம் மிக முக்கியம்!

ற்போது நடுத்தரக் குடும்பங்களில் உள்ள பெண்கள் அதிகம் உபயோகிப்பது இரண்டு சக்கர வாகனங்களை. ஆபீஸ் போகும் பெண்கள் மட்டுமின்றி குடும்பத் தலைவிகளும் இப்போது டூ வீலர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஷாப்பிங் போக, பிள்ளைகளை ஸ்கூலில் கொண்டு போய் விட,  கூட்டி வர என்று பல வேலைகளுக்கும் டூ-வீலர் தேவைப்படுகிறது. டூ வீவர்களை பயன்படுத்தும் பெண்கள் தம்முடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. இவர்களுக்காக இங்கு சில டிப்ஸ்கள்.

1. வீட்டை விட்டுக் கிளம்பும் முன் வண்டியில் பிரேக், இன்டிகேட்டர், ரியர் வியூ மிரர் இவற்றைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

2. டூ வீலர் ஓட்டும்போது சுடிதார் உடைகளே வசதியாக இருக்கும். துப்பட்டாவை பறக்க விடாமல் இறுகக் கட்டிக்கொள்ள வேண்டும். புடவை அணிந்தால் முந்தானையை இழுத்துச் சொருகிக்கொள்ள வேண்டும். முன் கொசுவத்தையும் லேசாகத் தூக்கி சொருகிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் ப்ரேக் போட்டுக் கால் ஊன்ற வேண்டி வரும்போது செருப்பு, கொலுசு, மெட்டி இவை புடவையில் சிக்கினால் 'பாலன்ஸ்' தவறி விடும்.

3. வண்டியை ஓட்டும்போது நிதானமாக ஓட்ட வேண்டும். வேகம் விவேகம் அல்ல; வேதனைதான்!

4. சின்னக் குழந்தைகளை மதியம் ஸ்கூலில் இருந்து அழைத்து வரும்போது குழந்தைகள் மிகவும் களைத்துப் போய் இருப்பார்கள். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பதால் மத்தியான நேரத்தில் தூக்கம் கண்ணைச் சுழற்றும். அந்த நேரத்தில் குழந்தைகளை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு வண்டி ஓட்டுவது மிகவும் ஆபத்து. குழந்தைகள் தூங்கி விடாமல் இருக்க அவர்களிடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும்.

5. பெட்ரோல் ரிசர்வில் இருக்கும்போதே பெட்ரோல் போட்டு விட வேண்டும். இல்லையெனில் எதிர்பாராத வேளையில் பெட்ரோல் தீர்ந்து போய் தவிக்க நேரிடும். வாரம் இருமுறை சக்கரங்களில் காற்று அழுத்தமும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

6. எப்போதும் கைவசம் 'டூல்ஸ்' வைத்திருக்க வேண்டும். திடீரென்று டயர் பங்ச்சர் ஆகி விட்டால் சக்கரத்தைக் கழற்றி மாற்றத் தெரிந்து வைத்திருத்தல் நலம். ஸ்டெப்னியை எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

7. ரோட்டில் மணல் மற்றும் ரோடு போட பயன்படுத்தும் பொடி கற்கள் இவற்றைக் கடந்து போக நேரிடும்போது மெதுவாக வண்டியை செலுத்த வேண்டும். வேகமாக போனால் மணலில் சக்கரம் புதைந்து சறுக்கி விழ நேரிடும்.

8. ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் பின்னாலேயே 'தேமே'  ன்னென்று போகக் கூடாது. நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டில் உள்ள சின்ன குழிகளை அநாயாசமாகக் கடந்து சென்றுவிடும். பின்னாலேயே செல்லும் டூ வீலர்கள் சட்டென்று குழியில் இறங்கி விடும் அபாயம் உண்டு.

9 இப்போதெல்லாம் (அப்போதும், இப்போதும், எப்போதும்தான்)  லாரி, பஸ் டிரைவர்கள் கண் மூடித்தனமாகத்தான் வண்டி ஓட்டுகிறார்கள். முன்னால் போகும் சிறிய வாகனங்களை நசுக்கி விடுகிற மாதிரி மிகக் குறைந்த இடைவெளியில் அசுரவேகத்துடன் வருகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நாமும் வேகமாக போக வேண்டியிருக்கும். ஆனால், நமக்கு முன்னால் உள்ள ட்ராஃபிக் அதற்கு இடம் கொடாது. திடீரென்று ப்ரேக் போட்டாலும் நமக்குதான் ஆபத்து. இதற்கு ஒரே வழி இடது பக்க இன்டிகேட்டரை போட்டுக் கொண்டு இடதுபுறம் ஓரம் கட்டி விடுங்கள். அந்த ‘பயங்’ கார்கள் கடந்து போன பிறகு நிதானமாகச் செல்லலாம்.

10. உங்கள் வண்டியின் எந்தப் பாகம் ரிப்பேர் ஆனாலும் உடனுக்குடன் அதைச் சரி செய்து விடுங்கள். இல்லையென்றால் எதிர்பாராத நேரத்தில் காலை வாரி விடும். அடிக்கடி சர்வீஸுக்கு அனுப்புவது மிகவும் அவசியம்.

-ஜோஸபீன் ஃபிலிப்

பின்குறிப்பு:-

மங்கையர் மலர் - ஜனவரி 1999 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடைக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com