
கதை; T. சுதா
சங்கீதாவின் மனம் குமுறிக்கொண்டிருந்தது கோபத்தில். இனி எந்த வித சமாதானத்திற்கும் அவள் தயாராக இல்லை. அவள் மீது அக்கறையே இல்லாத குடும்பத்தில் அவளை திருமணம் செய்து கொடுத்த அம்மாவின் மீதுதான் அளவுக்கு அதிகமான கோபம் வந்தது.
"நல்லா மாட்டிவிட்டா என்னை" என்று பொருமினாள். திருமணத்திற்கு முன்பே சங்கீதா பெங்களூருவில் ஐடியில் நல்ல வேலையில் இருந்தவள் அன்னையின் வற்புறுத்தலால் சென்னைக்கு மாற்றிக் கொண்டு வந்தாள். நல்ல பையன் நல்ல குடும்பம் என்று சங்கீதாவிற்கு வேப்பிலை அடித்து வருணுக்கு மாலையிட வைத்தாள்.
வருண் மிகவும் நல்லவன்தான். சென்னையில் சொந்தமாக பிசினஸ் செய்வதுடன் கிராமத்தில் உள்ள நிலங்களையும் பெற்றோரின் உதவியுடன் பராமரித்து வந்தான்.
என் தேசம் என் நாடு என் மக்கள் என்பதே அவன் நோக்கம். போலீஸ் ஆர்மி இவற்றில் சேர அவன் உடல் தகுதி அனுமதிக்கவில்லை. அதில் ரொம்ப வருத்தம் அவனுக்கு. அதனால் ஏதாவது ஒரு விதத்தில் நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை புரிய வேண்டும் என்று கூறுவான்.
திருமணமான புதிதில் சங்கீதாவிற்கும் அவனுடைய சேவை மனப்பான்மை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் நாளாவட்டத்தில் அவளுக்கு சற்றே அலுக்க ஆரம்பித்தது.
சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் அனாதை இல்லங்களுக்கும் முதியோர் காப்பகங்களுக்கும் சென்று உதவி செய்வது, இல்லாவிட்டால் கிராமத்திற்கு சென்று விவசாயத்தை பார்ப்பது, இதைத் தவிர வருணுக்கு வேறு இலக்கு இருப்பதாக தெரியவில்லை. இப்போது சமீப காலமாக ஒரு புதிய ஆசை வருணுக்கு ஏற்பட்டிருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் போய் விவசாய நிலம் வாங்கி கோதுமை சாகுபடி செய்ய வேண்டும் என்பதே அது. நல்ல தரமான கோதுமையை உற்பத்தி செய்து அதன் மூலம் கோதுமை பொருட்கள் தயார் செய்து எல்லை பாதுகாப்பு படையினருக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றும் விரும்பினான் வருண். தன் ஆசையை சங்கீதாவிடம் வெளியிட்டவுடன் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு அந்த யோசனை பிடிக்கவும் இல்லை. மொழி தெரியாத ஊரில் போய் யார் திண்டாடுவது என்று தான் தோன்றியது அவளுக்கு.
மேலும் சங்கீதாவின் இளமை சற்றே உல்லாசத்தை விரும்பியது. மால், தியேட்டர், பிக்னிக் போன்ற இடங்களுக்கு வருணுடன் செல்ல ஆசைப்பட்டாள் அவள். வருணின் உயரிய நோக்கம் சங்கீதாவிற்கு புரியவில்லை. சங்கீதாவின் நியாயமான ஆசை வருணுக்கு புரியவில்லை. சங்கீதாவின் வருத்தம், வருனின் சற்றே மெத்தனமான போக்கு இரண்டும் சேர்ந்து இருவருக்குமிடையே மெலிதான விரிசலுக்கு இடம் கொடுத்தது. சங்கீதா அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு கொல்கத்தாவில் உள்ள தன் தோழியை சந்திக்கச் சென்றாள். ஆசை தீர கொல்கத்தாவை சுற்றிப்பார்த்துவிட்டு தோழியுடன் அரட்டை அடித்து விட்டு இன்று சென்னை திரும்புகிறாள். ஒருவாரமாக வருணுடன் பேசவில்லை. வருணும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை மெசேஜ் அனுப்பிவிட்டு வாளாவிருந்துவிட்டான்.
சங்கீதாவின் கோபம் உச்சத்தில் இருந்தது. ஆனால் யாரிடம் காண்பிப்பது? சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி அமர்ந்து நிதானமாக யோசிக்க தொடங்கினாள் அவள்.
சங்கீதாவின் கம்பார்ட்மெண்டில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஏறினார். அவளுடன் கூட மிலிட்டரி உடை அணிந்த ஒரு பெண்ணும் மற்றும் ஒரு கணவன் மனைவி இருந்தனர். அவர்கள் மூவரும் வயதான பெண்மணியை வழியனுப்ப வந்தவர்கள் என்று புரிந்தது. மிலிட்டரி யூனிபார்மில் இருந்த பெண் "அம்மா ஜாக்கிரதையா போயிட்டு வாங்க அம்மா. எனக்கு திடீர்னு ட்யூட்டி போட்டுட்டாங்க. இல்லாட்டி நானும் கூட வந்து இருப்பேன்" என்றாள்.
அப்போது அந்த மற்றொருவர் "அம்மா அடுத்த வாரம் சென்னையில் சந்திக்கலாம். மீனாட்சியும் நானும் வருவோம்" என்றார். "ஆமா அத்தை" என்றாள் அந்த இன்னொரு பெண்.
இவர்களை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த சங்கீதாவின் மனம் தன் கோபத்தை தற்காலிகமாக மறந்தது. "ஓ அந்த மிலிட்டரி பெண்ணும் ஆணும் அண்ணன்-தங்கை போலிருக்கிறது. அண்ணனுக்கு இப்போதுதான் திருமணமாகி இருக்கிறது போலும்" என்று எண்ணிக்கொண்டாள் சங்கீதா.
"வண்டி கிளம்புது. நீங்கள்லாம் போங்க. நான் ஜாக்கிரதையா போயிட்டு வரேன் " என்றார் அந்த முதிய பெண்மணி.
கையசைத்து அனைவரும் விடைபெற்றனர்.
"அப்பாடி தமிழ் பேசும் சகபயணி" என்று மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்தாள் சங்கீதா. அந்தப் பெண்மணியைப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.
மற்ற பயணிகள் யாரும் வந்திருக்கவில்லை. பெட்டியில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். "உங்க பொண்ணு மிலிட்டரில சர்வீஸ் பண்றாங்களா?" என்று வினவினாள் சங்கீதா. மளுக்கென்று அந்த முதிய பெண்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
பதறிப் போனாள் சங்கீதா. "ஸாரி ஸாரி மேடம், ஏதாவது தப்பா கேட்டுட்டேனா? ரொம்ப ஸாரி" என்றாள் மீண்டும்.
"இல்லம்மா, நீ எதுவும் தப்பா கேட்கல. அவ என் பொண்ணு இல்ல மருமக. என் மகன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவன். எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டான். ஆனா நெஞ்சிலே துப்பாக்கி குண்டை வாங்கின பிறகும் நாலு தீவிரவாதிகளை அழித்து விட்டு தான் உயிரை விட்டான். என் மருமகள் என்னை விட்டு போக மாட்டேன்னுட்டா. என் மகன் இறந்தவுடன் பரீட்சை எல்லாம் பாஸ் பண்ணி அவளும் மிலிட்டரியில் சேர்ந்துட்டா. அவளோட மாமன் மகன் அவளை கல்யாணம் செஞ்சுக்க தயாராக இருந்தான். ஆனா அவ பிடிவாதமாக மாமியாரை விட்டு விட்டு வரமாட்டேன் என்று சொல்லி அவனுக்கு நல்ல பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். அவங்க ரெண்டு பேரும் தான் இப்போ கூட வந்தது." என்று பேசி முடித்தார் அந்த முதிய பெண்மணி.
பிரமித்துப் போய் பேச வாய் வராமல் அமர்ந்திருந்தாள் சங்கீதா.
அவள் மனம் வருணுடன் பேசியது. "வருண் நான் பஞ்சாப் வர தயார்."
டெலிபதியில் வருணுக்கும் அவள் மனம் புரிந்து விட்டதோ?
சங்கீதாவின் மொபைல் ஒலித்தது. வருணிடம் இருந்து தான் அழைப்பு.
மனதில் மகிழ்ச்சி பொங்க போனை அட்டெண்ட் செய்தாள் சங்கீதா.