திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் கூட வரலட்சுமி பூஜை செய்வார்கள். பச்சரிசி இட்லி எள்ளு கொழுக்கட்டை, உளுந்து வடை, தேங்காய் பாயசம், அப்பம், கேசரி, சுய்யம், இப்படி எல்லாவித இனிப்புகளை செய்து, நைவேத்தியங்களை படைத்து, வரலட்சுமி தேவியை தியானித்து, முறைப்படி பூஜித்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து மகிழ்வது நல்லது.
சுவையான நைவேத்தியங்கள் செய்து பண்டிகையை ஜமாயுங்கள்.
பாசிப்பருப்பு பாயசம்
பாசிப்பருப்பு- இரண்டு கப்
வெல்லம்- இரண்டரை கப்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால்- இரண்டு கப்
முந்திரி -தேவையான அளவு
ஏலத்தூள் - சிறிதளவு
பாசிப்பருப்பை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்தெடுத்து நன்கு மலர வேக வைக்கவும். வெல்லத்தைப் பொடித்து கால் கப் நீர் சேர்த்து சூடாக்கிக் கரைந்ததும் வடிகட்டி வெந்த பருப்போடு சேர்க்கவும்.
இந்தக் கலவை நன்கு கொதித்ததும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி மேலும் 3 நிமிடங்கள் அடுப்பில் வைத்து கடைசியில் ஏலப்பொடி, நெயில் வறுத்த முந்திரி சேர்க்க பாசிப்பருப்பு பாயசம் ரெடி.
உளுந்து வடை
உளுந்து -ஒரு கப்
பச்சரிசி -ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி -சிறு துண்டு
பச்சை மிளகாய்- 3
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை -சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
அரிசி உளுந்தை 20 நிமிடம் ஊற வைத்து நைசாக அரைத்து எடுக்கவும். (அரைக்கும் போதே பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து விடவும் .)அரைத்து எடுத்ததும் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மல்லி தழை தேவையான உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் உளுந்து மாவை சின்ன சின்ன வடைகளாகத் தட்டி போட்டு வேக வைத்து எடுக்கவும் .
சுய்யம்
கடலைப்பருப்பு- இரண்டு கப் வெல்லத்தூள் -இரண்டு கப்
ஏலத்தூள்- 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்- ஒரு கப்
மைதா மாவு -ஒரு கப்
உப்பு -சிட்டிகை
எண்ணெய் -பொறிக்க தேவையான அளவு.
கடலைப்பருப்புடன் அரை கப் நீர் சேர்த்து நான்கு விசில் வரை வேக விடவும். வெந்த பருப்பிலிருந்து நீரை வடித்து பிறகு மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். (நீர்விடாமல்) அரைத்த கடலைப்பருப்பு விழுதில் பொடித்த வெல்லத்தூள்+ தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.(மாவு சற்று நீர்க்க இருந்தால் வாணலியில் சிறிதளவு நெய் விட்டு மாவை நன்கு கிளறவும்) (கலவை கெட்டிப்படும்) பிறகு மாவை கோலிகுண்டு அளவு எடுத்து உருண்டைகளாக்கவும்.
மைதா மாவில் சிட்டிகை உப்பு சேர்த்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டையை மாவில் தோய்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தேங்காய் பூரண கொழுக்கட்டை
மேல் மாவுக்கு
பச்சரிசி -ஒரு கப்
உப்பு -சிட்டிகை
எண்ணெய் -இரண்டு டீஸ்பூன்
பூரணத்துக்கு
தேங்காய் துருவல்- அரை கப் வெல்லத்தூள்- அரை கப்
பொடியாக நறுக்கிய முந்திரி- சிறிதளவு
வெள்ளரி விதை -சிறிதளவு
பொடியாக நறுக்கிய பாதாம்- சிறிதளவு
ஏலத்தூள்- அரை டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்.
அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பிறகு நீரை வடித்து நிழலில் காய வைத்து நைசாக பொடித்து சலித்துக் கொள்ளவும்.
1 1/4 கப் அளவுக்கு நீரை எடுத்து சிட்டிகை உப்பு எண்ணை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு தீயை மிதமாக்கி கொதிக்கும் நீரில் மாவை கொட்டி கட்டித் தட்டாமல் நன்கு கிளறவும். ஆறியதும் கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு மாவை நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
பாதாம் முந்திரியை நெய்யில் வறுத்து எடுக்கவும். வெல்லத்தை ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டு நன்கு சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி தேங்காயோடு சேர்க்கவும். அதில் வறுத்த முந்திரி, வெள்ளரி விதை, பாதாம், ஏலத்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து சொப்பு போல் செய்து நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மடித்து ஆவியில் வேக விட்டு எடுக்க கொழுக்கட்டை தயார்.