
நீரில் ஊற வைத்த அரிசியும்
மோரில் நறுக்கிப் போட்ட
வாழைத்தண்டும் காத்திருக்கின்றன
அரைமணியாய் அடுக்களையில்.
எங்களை கொஞ்சம் துலக்கி
சுத்தப்படுத்தேன் என
சமையல் அறை பாத்திரங்கள்
சமிக்ஞை செய்கின்றன.
குவியலாய் கிடக்கின்ற
துவைத்த துணிகள்
மடித்து வைக்கப்பட
என் விரல்களை யாசிக்கின்றன.
கொஞ்சம் பொறுங்களேன் எல்லோரும்!
என் கற்பனைத் தேவதை
சிறகு விரித்து விட்டாள்.
கதையோ, கட்டுரையோ
கவிதையோ எதுவாகினும்
அவள் விருப்பம் போல
சற்றே இளைப்பாறி வரட்டும்
எழுத்து எனும் ராஜ்ஜியத்தில்.