கலகலப்பாக இருந்தால்தான் என்ன?

அதிகாலை நேரம்; படுக்கையை விட்டு எழ, பக்கத்தில் சயனித்திருப்போரையோ! அல்லது எதிர்படும் யாருடைய திருமுகத்திலாவது விழிப்போமில்லையா, வெகு அமைதியாக, மௌனமாக ஒருவரை ஒருவர் கடந்து போகிறோமில்லையா! "இது" எனது சின்ன வயதிலிருந்தே என்னவோ போல எனக்குப் பிடிக்கவில்லை; பிடிபடவுமில்லை!
ஏதாவதொரு முகமன் கூறிக் கொள்வது எத்துணை செழுமையாக இருக்கும்; ஒரு சின்னஞ்சிறு புன்முறுவல் கூட எத்துணை பரிவை, அன்பைப் பரஸ்பரம் அள்ளி வீசும். அதனை அனுபவித்தே தெரிய வேண்டும். நான் வெகு நன்றாகவே அனுபவித்திருக்கிறேன்.
நம்மை ஆண்டு சென்ற ஆங்கிலேயர் அதைச் செய்து காட்டிச் சென்றிருக்கிறார்கள் ஒரு Good morning (afternoon, evening, night) என ஒருவரை யொருவர் சந்திக்கும்போது மட்டுமல்லாது, கடந்து செல்லும்போதெல்லாம் இப்படி ஒரு முகமன் கூறிக் கொள்வதை நாம் கண்டிருக்கிறோம். அப்பொழுதெல்லாம் பரஸ்பரம் ஓர் நல்லெண்ணம், நட்புரிமை பரவக் கண்டோமில்லையா! ஏன் அவர்கள் தங்கள் இல்லங்களிலே கூட குடும்ப அங்கத்தினரும், ஒருவருக்கொருவர் இங்ஙனம் வாழ்த்துக் கூறி மகிழ்கின்றனரே என்பதைச் சொல்லத்தான் வருகிறேன்.
நாமும் அந்த மாதிரி செய்வோமே! எத்துணை மனச் சோர்வுகள், மனமாச்சர்யங்கள், கஷ்ட நஷ்டங்களிருப்பினும், இன்முகத்தோடு பொழுது புலர்ந்துஅதே இனிமையுடன் பொழுது சாயட்டுமே ஆக குறைந்தபட்சம் அதிகாலை எழுந்தவுடன் எதிர்படும் குடும்ப அங்கத்தினருக்கு ஒரு குட்மார்னிங் எதிர்ப்படுமென்ன ஒருவரை ஒருவர் சந்தித்ததும் படுக்கைக்குச் செல்லுமுன் ஒரு குட் நைட் சொல்லிப் பாருங்கள்; அதனுடைய இனிமை, ரசனை, 'ருசி'யை நாமே நன்கு அனுபவிக்கக் காணலாம்.
இதனுடைய இனிமையான தமிழாக்கம்தான், தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் தாரக மந்திரமான ‘வாழ்க வளமுடன்' என்ற முகமன் வாழ்த்தொலி, ஒரு நாளின் எல்லா காலங்களுக்கும் பொருந்தும்படியாக!
நாளும், நமது இல்லங்களுக்கு சிறியவர் பெரியவர் என வந்து போவது நிகழ்கின்றனவல்லவா: அவர்கள் உறவினராகவோ, புதியனவராகவோ இருக்கலாம். அவர்களை “வாங்கோ - வாருங்கள்” என்பதில் உள்ள இனிமை சொல்லித் தெரிய வேண்டாமே.
மேலும், அச்சமயங்களில், நம் இல்லத்துப் பெரியவரோ அல்லது முக்கியஸ்தரோதான் அப்படி "வாருங்கள்” என முகமன் கூறுவார்கள்; சரிதான். அச்சந்தர்ப்பங்களில் கூட, இல்லத்தின் அங்கத்தினர் சிறுவர். சிறுமியர் உள்பட யாராக இருப்பினும், ஒரு வார்த்தை ‘வணக்கம்’ எனவும் கூறினால், அச்சூழலில் ஓர் இனிமையான ஒளிபரவக் காணலாம்.
அதை விடுங்க, நம் இல்லத்து சிறுவர்களோ இளவட்டங்களோ பள்ளி, கல்லூரிகளிலிருந்து வீடு திரும்புகிறார்கள். உடனே நம் இல்லத்து அம்மா - அப்பா, தாத்தா பாட்டி, "வாடா கண்ணே - வாடி ராஜாத்தி" எனவும் "வாப்பா கிட்டு, வாடி ராணி" என வரவேற்றால் அவர்கள் எந்த மனப்பிரமைகளிலிருந்தாலும், அத்தனையும் மறந்து ஒர் மந்தகாசமான புன் முறுவலோடு இல்லத்தில் நுழைவார்கள்.
இதை விடுங்க மாலையில், இரவில், இல்லத்துப் பெரியவர்களோ. கணவன்மார் மனைவிமாரோ, ஏனையோரோ, பல்வேறு சூழல்களிலிருந்து விடுபட்டு, இல்லம் திரும்பி, உள்ளே காலடி வைக்கிறார்களல்லவா. அச்சமயம், "வாங்க பஸ்ஸில கூட்டமா? அல்லது டிராபிக் ஜாமா” என்று பரிவுடன் வரவேற்றால் என்ன வாடி வதங்கி இருந்தாலும், ஒரு புன்னகை வெளிப்பட்டு விடும்
அதையும் விடுங்க இதையும் விடுங்க - இதைப் பாருங்க. பரபரப்பான காலை நேரங்களில் நமது இல்லங்களை விட்டு, பல்வேறு அலுவல்களின் பொருட்டு ஏதேதோ சிந்தனைகள் எதிர்பார்ப்புகளோடு புறப்படும் நம் குடும்ப அங்கத்தினரிடமும் Wish you a Nice Day (a good day, a great day Sucessful day) என சொல்லி, வாழ்த்தி வழியனுப்பிப் பாருங்கள். அதனுடைய 'ருசி'யே தனிதான். அவர்கள் மாலை, இரவில் இல்லங்களுக்குத் திரும்ப, Welcome Home எனவும் வரவேற்க, இதனுடைய 'ருசி' இன்னும் தூக்கலாக இருக்கும். இப்படி முகமன் கூறிக்கொள்வதில் இல்லங்களில் ஓர் கலகலப்பு வந்து விடுகிறதென்றே வைத்துக்கொள்ளுவோம்.

இப்போது அடுத்த விஷயத்திற்கும் போவோம் -
வானொலியை ரசித்துக் கேட்கும்பொழுதும், டீ.வி.பார்க்கும்பொழுதும், வைத்த காது கண் எடுக்காமல் (மரண) அமைதியான மௌனம் ஏன்? அந்தச் சந்தர்ப்பங்களில் கூட நமது எண்ணங்களின் பரிமாற்றங்கள், விமரிசனங்களைக் கூறி, கலகலப்புண்டாக்கி, மகிழலாமே.
இந்த நவயுகமென்ற காலத்திலும் கூட பல இல்லங்களில் அவரவர் பாட்டுக்கு, தம்பாட்டுக்கு மௌன குருசாமிகளாக அமர்ந்திருப்பதைப் பார்த்துத்தான் இதையும் கூற வந்தேன்.
இப்பூவுலகில், இயற்கையின் வனப்பில், சமூகப் பிணைப்பு, பந்தங்களில் எத்தனையெத்தனை சம்பவங்கள், விஷயக் கோர்வைகள் உள்ளன. அவற்றையும் ரசனையோடு பேசி, சொல்லக் கேட்டு, சொல்லச் சொல்லியும் கேட்டு, நம் இல்லங்களை சலசலக்கச் செய்வோமே.
ஒரு சின்ன (பெரிய) விஷயம் கூறுகிறேன். அன்று காலை வழக்கம்போல மழைத் தூறல். வானத்தில் மேற்கு திசையில் ஓர் வானவில் என்னவொரு வண்ணக் கோலம்; அது எப்போதும் அடிவானம் டு அடிவானம்தான்; துளிக்கூட பிசிறு இல்லாத நேர்த்தியான அரை வட்டம்! வீட்டிலுள்ளவர்களை அழைத்து அந்த எழிலைப் பார்க்கும்படி அழைத்தேன். என்ன அழகு போங்கள்!
சிறிது நேரம் கழித்து, அந்த வானவில்லின் கீழே, அதற்குச் சரிசமமாக, நேர்த்தியாக மற்றொரு வானவில், ஆனால் சிறிது மங்கலாக இருந்தது. (அது, மழைத் துளிகளின் பிரதிபலிப்பு நம் கண்களை அடையும் கோணத்தைப் பொறுத்து என உங்களுக்குத் தெரியுமே!)
இரண்டும் கலர்புல்தான்; ஆனால் ஒரு விஷயம்: அவையிரண்டும். தாம் ஒருவரை யொருவர் பார்த்ததும் முகம் திருப்பிக்கொள்வதைப் போல் அதன் வண்ணங்களின் வரிசை அமைந்திருந்தன, என்பதனை அன்றுதான் கவனித்தேன்.
அதாவது மேலுள்ள வானவில்லின் மேல்புறம் இளம் சிவப்பாகவும் (மற்றபடி கலா வாரியாக) கீழே தோன்றிய வானவில்லின கீழ்பாகம் இளம் சிவப்பாகவும் (மற்றபடி கலர் வரிசையாக) இருக்கக் கண்டேன். மறுபடியும். இல்லத்திலுள்ள அனைவரையும் கூவி அழைத்து, மேற்படி அதிசயமான வண்ண அமைப்பு விவரம் கூறினேன். அவர்களிடம் ஏற்பட்ட சலசலப்பும் அதிசயத்தக்கதாக இருந்தன.
அக்கம்பக்கமுள்ள வாண்டு பெருமக்களையும் கூவி, கூவி அழைத்து, வானத்து அந்த வானவில்களிரண்டையும் காண்பித்து, அதன் மேற்படி விவரங்களையும் கூற, என்னவொரு கலகலப்பு - சலசலப்பு போங்கள்!
இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்ளே ஆனாலும் நம் மன, எண்ண ஒட்டங்களில் பெரிய பெரிய பாதிப்புகளை விளைவிக்கின்றன என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்க்கையின் இனிமைக்கு ஊட்டமளிக்கும் ஓர் வைட்டமின் சத்து என்றே வைத்துக் கொள்ளலாமே!
- பிரேமா வெங்கடேஸ்வரன்
பின்குறிப்பு:-
மங்கையர் மலர் - ஜனவரி 1999 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுக மாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடைக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்