
? மத்திய அரசின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது இந்த ஆண்டு ரஜினிக்கு வழங்கப்பட்டிருக்கிறதே?
– ராஜராஜேஸ்வரி, கோவில்பட்டி
! தமிழ் திரையுலகுக்குப் பெருமை. 1980ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான விருது 'முள்ளும் மலரும்' படத்துக்குக் கிடைத்தது. அப்படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிகாந்த்துக்குக் கிடைத்தது. அதுதான் ரஜினிகாந்த் பெற்ற முதல் விருது. எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். செய்தியைக் கேட்டதும் அதை பாலச்சந்தரிடம் தெரிவிக்கத் துடித்தேன். இந்தப் பெருமை கே.பாலச்சந்தரையே சாரும் என்றார் முதல் விருதைப் பெற்ற ரஜினிகாந்த். முப்பதாண்டுகளுக்கு முன் விருதுபெற்றபோது கே.பாலச்சந்தரிடம் பேசத்துடித்த ரஜினிகாந்த், தற்போது 'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றபோதும், பாலச்சந்தரையே நினைவு கூர்ந்திருக்கிறார்.
? 1000 கோடி தடுப்பூசி…?
– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
! பெருமைக்குரிய விஷயம். ஆனால் அதைப் பிரதமரின் சாதனையாகக் கொண்டாடுவது அரசியல். இந்த எண்ணிக்கையில் நமது மக்கள் தொகையில் 21% தான் பாதுகாக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் குழந்தைகளுக்கு நாம் தடுப்பூசி போடத் தொடங்கவில்லை. இங்கிலாந்தில் 80% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டபின்னரும் கொரோனா ஆபத்து நீங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் போக வேண்டியது நெடுந்தூரம். அதற்குள் வெற்றி கம்பத்தைக் கடந்துவிட்டதாக கொண்டாடுவது அபத்தம்.
? அரசுப் பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டிருக்கிறாரே
முதல்வர் ஸ்டாலின்?
– ஆர்.மாதவ ராமன், கிருஷ்ணகிரி
! அரசுப் பேருந்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்தது போல, ஒரு நாள் நீண்ட தூரம் செல்லும் பேருந்தில் பயணம் செய்ய முன் வரவேண்டும். அப்போது தான் அரசு பேருந்துகளின் தரம் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் அவருக்குப் புரியும்.
? ம.தி.மு.க.வில் தலைவரின் வாரிசு தலைவராகிறாரே?
– வண்ணை கணேசன், சென்னை
! கலைஞரின் வாரிசுக்குக் கட்சியில் வாரிசாக மகுடம் சூட்டுகிறார் எனக் குற்றம் சாட்டி தி.மு.க.விலிருந்து பிரிந்து ம.தி.மு.க. கண்டவர் வைகோ. இன்று அதையே அவர் செய்திருக்கிறார். ஆனால், அவர் கட்சியில் இதற்காகப் பிரிந்து செல்ல எவரும் இல்லை. தமிழக அரசியலில் அரசியல்வாதிகள் தடம் புரளும்போதெல்லாம் பயன்படுத்தும் வார்த்தைகள் "காலத்தின் கட்டாயம்". ஆனால் வைகோ, எந்தக் கட்டாயமும் இல்லாமல் இதைச் செய்திருக்கிறார்.
? ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது பற்றி?
– ஆ .மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதெல்லாம், "இது நியாயமாக நடக்காத தேர்தல். தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டார்கள், பணம் விளையாடியதைத் தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை… இதுபோன்ற குரல்கள் கேட்பது வாடிக்கையாகிவிட்டதைப் போல, ஆட்சி மாறியவுடன் இந்த மாதிரிக் குரல்கள் கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.
? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. மின்வாரியத்துறை அமைச்சர் மேல் ஊழல் குற்றம் சாட்டுகிறாரே?
– கண்ணபிரான், நெல்லை
மானநஷ்ட வழக்குக்கு வக்கீல் நோட்டிஸ் வந்ததும் 'நான் ஏழை விவசாயி' என்று தன்னிடமிருக்கும் ஆட்டுக்குட்டிகளின் கணக்கைச் சொல்லுகிறாரே. 1 கோடியே 41 லட்சம் சொத்திருப்பதாக தேர்தல் கமிஷனிடம் சொல்லியிருக்கும் இந்த ஏழை விவசாயி நோட்டிஸுக்கு பதில் அனுப்பி வழக்கை சந்திக்க தயார் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?
? டி-20 தொடரில் முதல் ஆட்டத்திலேயே இந்தியா சறுக்கிவிட்டதே?
– ஜாகிர் உசேன், வாணியம்பாடி
! இம்முறை பாக். டீம் அருமையான டீம். கச்சிதமான பவுலிங். திறமையான பேட்டிங். அவர்கள் ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கிறது. மற்ற டீம்களோடு ஆடும்போது இல்லாத அந்த வெறித்தனம் இந்தியாவோடு ஆடும்போது அபரிமிதமாய்ப் பொங்குகிறது. அதுதான் அவர்களை வெற்றிப் பெறச் செய்தது. இந்த முறை களமும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனாலும் நாம் இன்னும் சற்றுக் கெளரவமாகத் தோற்றிருக்கலாம்.
? 'டிஜிட்டல் இந்தியா' உண்மையிலேயே வெற்றி பெற்ற திட்டமா?
– ராதாகிருஷ்ணன், அயன்புரம்
! என்ன சந்தேகம் சார். மோடி அரசின் மிகப்பெரிய சாதனை இது. இந்தியாவின் சமூக, கலாசார, பொருளாதார மாற்றங்களை ஒருசேர மாற்றிவிட்டதற்கு மத்திய அரசின் உந்துதலால், வரையப்பட்ட UPI platform. 'டிஜிட்டல் பேமென்ட் என்றால் என்ன?' என்று கேட்ட கிராமத்துப்பெண்கள் இன்று யூபிஐ மூலம் வாழைப்பழம் வாங்கிக்கொண்டிருப்பதை மத்திய அரசு ஒரு சில வருஷங்களிலேயே சாத்தியமாக்கியிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா கூகுள் பே இலையா? என்பதை சர்வ சாதாரணமாகச் சாமானியனைக் கேட்க வைத்திருக்கிறது. மணியார்டர்கள், செக்குகள், ட்ராஃப்டுகள் மொத்தமாய் வழக்கொழிந்துவிட்டது. RTGS, NEFT, IMPS, என்று பரிவர்த்தனைகள், ஆன்லைனில் அணிவகுக்கின்றன. உங்களுக்குத் தெரியுமா? டிஜிட்டல் பரிவர்த்தனையில் சீனா, இங்கிலாந்து சேர்த்து நடத்தும் பரிவர்த்தனைகளின் அளவை கடந்து நாம் உலகின் நம்பர் 1 நிலைக்கு வந்துவிட்டோம்.
? 'இந்தி' தேசிய மொழியா, ஆட்சி மொழியா, அலுவல் மொழியா?
-மங்கை கவுதம், நெல்லை
! பலமுறை விவாதிக்கப்பட்ட விஷயம் இது. சில அரசியல்வாதிகளால் 'இந்தி ஆட்சி மொழி' என்ற கருத்து பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. இந்தியாவுக்கென தேசிய கீதம் உண்டு, தேசிய விலங்கு உண்டு, தேசியப் பறவை உண்டு. ஆனால், தேசிய மொழி கிடையாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்ட விவாதம் தொடங்கியபோதிலிருந்தே 'தேசிய மொழி' என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.
ஆட்சிமொழிச் சட்டம் 1963ஐ நாடாளுமன்றம் இயற்றியது. அது 1965 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம், 'ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையே, ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையே எவ்வாறு செயல்பட வேண்டும்' என்று சொல்கிறது. அது மிகவும் விரிவானது. சுருக்கமாகச் சொன்னால், 15 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒன்றிய அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும், "இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றியத்துக்கும், இந்திமொழி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும்" என்றும், "இந்தி பேசும் மாநிலத்திலிருந்து இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டால், அவற்றுடன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு சேர்த்து அனுப்பப்பட வேண்டும்" என்றும் ஆட்சிமொழிச் சட்டம் 1963-ல் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தி, ஆங்கிலம் இரண்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகள்.
? அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு இரட்டைத் தலைமைதான் காரணமா?
– மனோகரன், மும்பை
! அ.தி.மு.க. இரட்டைத் தலைமையினால் தோல்வி கண்டது என்று சிலர் வாதிடுகிறார்கள். உண்மை அதுவல்ல… அ.இ.அ.தி.மு.க.வின் இரட்டை தலைமையில் ஒன்று ஒற்றைத் தலைமையாகச் செயல்படத் தொடங்கியதுதான் காரணம்.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா ஜெயித்தார், தோற்றார் , மீண்டும் ஜெயித்தார். ஆனால், அவருக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தோற்றிருக்கிறார். "துணை ஒருங்கிணைப்பாளர்" என்று கட்சிப்பதவி இருந்தாலும் பதவிப் பெயரை மீறிய செல்வாக்கும் தலைமையும் தமக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டுதான் எல்லோரையும் புறக்கணித்துவிட்டு, "தானே எல்லாம்" என்ற நிலையில் தேர்தலைச் சந்தித்தார். எம்.ஜி.ஆருக்கு வராத இருமாப்பு , ஜெயலலிதாவிடம் இருந்திராத
கர்வம் , எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்தது… இருக்கிறது… அதன் விலைதான் இந்தத் தோல்வி.
? எழுத்தாளர் ஆவது எளிதா? – மீ. யூசுப் ஜாகீர், வந்தவாசி
"மளிகைக்கடை வைக்கலாம் என்று பார்த்தேன், சில பொருள்களின் அளவையும் விலையையும் சொல்லி, மனக்கணக்காகக் கூட்டிச் சொல்லச் சொன்னார் மனைவி. விடை சொல்ல முடியாமல் விழித்தேன். 'உங்களுக்குத் துப்பு போதாது' என்று தீர்ப்புச் சொல்லிவிட்டார். அப்புறம் வேறு வழி… கதைகள் எழுத் தொடங்கிவிட்டேன். "
– இதைச் சொன்னவர், 'சரத் சந்திர சட்டோபாத்யாய' என்ற பிரபல வங்க எழுத்தாளர். கடந்த 60 ஆண்டுகளில் பல மொழிகளில் பல வடிவங்களில் திரைப்படமான 'தேவதாஸ்' கதை இவரது படைப்புகளில் ஒன்று.