மூச்சு விடும் மூலவர்!

மூச்சு விடும் மூலவர்!
Published on

பொ.பாலாஜி

ருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது.

ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்தபோது வானில் அசரீரி ஒன்று ஒலித்தது. "அகத்தியரே! நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின் சிலை ஒன்று உள்ளது. அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத் தொடருங்கள்" என்றது. அதன்படி அகத்தியரும் அங்கே நரசிம்மர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே, சிலை மண்ணுக்குள் புதைந்தது. நான்காம் நூற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது. 1377ல் கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் தொடங்கியன.

சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்தபோது சுடர் அசைந்தது. அதேநேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது. இன்றும் விளக்குகள் இப்படி எரியும் அதிசயத்தை அனைவரும் காணலாம்.

ஆந்திராவிலுள்ள நல்கொண்டா, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தினர் இங்கு வழிபட்ட பிறகே மற்ற நரசிம்மர் தலங்களுக்குச் செல்கின்றனர்.

தனிச் சன்னிதியில் ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.

ஆன்மிக உபன்யாசகரான முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் இந்தக் கோயிலில் 1992ல் யாகம் ஒன்றை நடத்தினார். அதன்பிறகு இக்கோயில் பிரபலமானது.

பஞ்ச நரசிம்மத் தலங்களில் இதுவே முதல் கோயில். அளவில் சிறியது என்றாலும், உயிரோட்டமுள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில் மூழ்குகின்றனர்.

வாடபல்லி என்னும் இக்கிராமத்தில் கிருஷ்ணா, முசி நதிகள் இணைந்து எல் வடிவில் காட்சி தருகிறது.

அமைவிடம் : ஆந்திர மாநிலம், நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது இந்த ஆலயம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com