மூக்குத்தி அம்மன் படத்தில் இசையமைக்க முழு சுதந்திரம் கிடைத்தது!

மூக்குத்தி அம்மன் படத்தில் இசையமைக்க முழு சுதந்திரம் கிடைத்தது!

நேர்காணல்: சாருலதா.

தமிழ்த் திரைத்துறையின் இளமையான, திறமையான, வெற்றிகரமான இசைமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷணன். இவர் ஒரு தேர்ந்த பாடகரும்கூட! மெரினா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளரான கிரிஷ் கோபாலகிருஷ்ணனுடன் கல்கி இணைய தளத்துக்காக ஒரு சந்திப்பு…

நீங்கள் இசைத்துறையை தேர்ந்தெடுத்தது எப்படி?

என் அம்மா வீணை வாசிப்பவர். ஆகையால், எனக்கு கர்நாடக சங்கீதம் முறையாக கற்றுக்கொடுத்துள்ளனர். வளர வளர இசையில் ஆர்வம் அதிகரித்தது. இதுவே வாழ்க்கை முறை வழியாக மாறும் என்பது 20 வயதிற்குப் பின் தான் எனக்கு புரிந்தது. என் விருப்பத்தை குடும்பம் புரிந்து கொண்டு ஆதரித்ததால் இன்று எனக்கான ஒரு இடத்திலிருக்கிறேன்.

எஞ்சினியரிங் படித்துவிட்டு பின் இசைத்துறைக்கு மாறியது கடினமா இல்லையா?

எஞ்சினியரிங் பிடித்துத்தான் படித்தேன் என்றாலும், அது டிகிரி வாங்கிய ஒரு கருவியே என்று தோன்றியது. தொழில் இசைத்துறைதான் என்று தேர்ந்தெடுத்தேன். ஆனால் என் எஞ்சினியரிங் படிப்பு என் இசையமைப்பில் பல விஷயங்களை இணைத்துக்கொள்ள உதவியது. கல்லூரியில் கிடைத்த வாய்ப்புகள் என் திறமையை எனக்கு வெளிப்படுத்தின என்றும் கூறலாம்.

போட்டிகள் நிறைந்தது திரைத்துறை என்கிறார்களே?

போட்டி என்று சொல்ல முடியாது. அவரவருக்கு அவரவர் பயணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுதான் செய்யப் போகிறோம் என முடிவெடுத்த பின் அதை ஈடுபாட்டுடன் ரசித்து செய்கிறோமா என்பதுதான் முக்கியம். ஒரு படத்தின் பாடல் பதிவிற்கு எடுத்துக்கொள்கிறேன் என்றால் அடுத்த 7 அல்லது 8 மாதத்திற்கு அந்தப் படத்தின் கதையுடனும், பாடல் அமைப்புடனும் மட்டுமே நான் வாழ வேண்டும். தை நான் ரசித்து செய்யும்போது, அப்போது வெளிப்படும் இசை மிகவும் தரமானதாக, திருப்தி நிறைந்த பாடல்களாக வெளிப்படும்.

கர்நாடக சங்கீத கச்சேரி செய்துள்ளீர்களா?

பதில் : பத்து வருடம் முன்பு செய்துள்ளேன். அதற்குப் பிறகு பாடல் தொகுப்பு, இசையமைப்பு என்று வந்து விட்டேன். என் படங்களில் எப்போதாவது பாடுகிறேன். மற்றபடி பாடல் கம்போசிங்கில் கவனம் செலுத்துவதால், அதிகம் பாடுவதில்லை. 20 வருடப் பாடகன்தான் நான்.

திரைத்துறையில் நுழைந்தது எப்படி?

கம்போசிங்கில் எனக்கு அதிகம் ஆர்வம் ஏற்பட்டபோது, அதற்கான வாய்ப்புகள் திரைத்துறையில் தான் இருபதை உணர்ந்தேன்நானால் இன்னும் என்னை இசையில் தயார் செய்துகொள்ள, பிரிட்டனில் படிக்கப் போனேன். யு.கே.யில் நான் கம்போசர் ஆவதற்கான படிப்பை முடித்தேன். பின் நேஷனல் யூத் ஆர்கெஸ்ட்ராக்களில் 2 வருடங்கள் எஜுகேஷன் லைனில் வேலை பார்த்தேன். இப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மிலாப் பெஸ்ட் (fest) என்ற ஆர்கனைசேஷனுடன் திரை இசை தவிர இணையான பாதையில் எஜுகேஷன் சம்பந்தமான செயலிலும் உள்ளேன். இது தவிர, தனிப்பட்ட முறையில் ஆல்பங்கள் செய்கிறேன். அப்புறம் இந்தியா திரும்பியதும்தான் இயக்குனர் பாண்டிராஜின் 'மெரினா' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு 'நெற்றிக்கண்', மூக்குத்தி அம்மன்' என்று படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மூக்குத்தி அம்மன் படத்தில் உங்களுக்கு ஏறபட்ட அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?

அந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். பாடகர்களை என் சாய்ஸ் படி தேர்ந்தெடுக்க உதவினார். நெற்றிக்கண் படத்தில், 'இதுவும் கடந்து போகும்' பாடலை நான்கு பேரை பாடவைத்து நான்கு முறை முயற்சி செய்தும் திருப்தி இல்லை. சித் ஸ்ரீராம் பாடியபின் மிகவும் திருப்தி ஏற்பட்டு அதையே வைத்துக் கொண்டோம். அதற்காக பிரபலமான பாடகர் பாடினால் தான் பாட்டு ரீச் ஆகும் என்று அர்த்தம் இல்லை, மூக்குத்தி அம்மன் படத்தில் அப்படித்தான் நடந்தது. அதில் 'பார்த்தேனே' என்ற பாட்டுக்கு பிரபலமான நான்கு பாடகர்களை பாடவைத்தோம். ஆனால் யார் குரலும் அப்படத்தின் காட்சிக்கு பொருந்தவில்லை. பின்னர் ஒரு புது பாடகரை முயற்சி செய்து பார்த்தபோது, அநத பாடல் அவ்வளவு அருமையாக அமைந்தது. படத்தின் இயக்குனர் திருப்தியாக உணர்ந்தார். எனவே, பாடகர், பாட்டினால்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என எனக்குத் தோன்றுகிறது. அதனால் புது குரல்களைக் கேட்கும்போது திறந்த மனதுடன் கேட்டுக் கொள்வேன். பிறகு சரியான தருணத்தில் பயன் படுத்துவதற்கு அது உதவுமே!.

சமீபத்திய ஆல்பம் எதுவும் செய்துள்ளீர்களா?

கடைசியாக 'காதலன் பாரதி' என்ற ஆல்பம் செய்தேன். பாரதியாரின் காதல் பாடல்களை அபிஷேக் ரகுராம், அனில் ஸ்ரீநிவாசன், பிரதிப் குமார் என்று என் மனமொத்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து, ஆல்பம் செய்துள்ளோம். அதைப் பற்றி எல்லோரும் எங்கு போனாலும் கேட்பார்கள்.

அடுத்து செய்ய இருக்கும் படம்?

ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம். (விரைவில் வரும்), விஜய் ஆண்டனியின் படம் 'கொலை' ஆகியவை கைவசம் உள்ளன.

பிரிட்டனில் நீங்கள் படித்த மியூசிக் எஜுகேஷன் பற்றி சொல்லுங்களேன்?

நம் ஊரில் அதற்கு இனையான வார்த்தை சொல்ல முடியாது. அதுபோன்ற ஆர்கெஸ்ட்ரா இந்தியாவில் கிடையாது. பிரிட்டனில் 18 வயதிற்குட்பட்ட திறமையான குழந்தைகளைத் தேர்வு செய்து ஆர்கெஸ்ட்ரா உருவாக்கி, பயிற்சி தந்து பிரபலமானவர்களுக்கு வாசிக்க, பாட தயார் செய்வார்கள். இதை, 'நேஷனல் யூத் ஆர்கெஸ்ட்ரா' என்ற அரசாங்க உதவி நிறுவனம் மூலம் செய்யப்படுகிறது. இதுபோன்ற 10 நிறுவனங்கள் அங்கே உள்ளன. அதில் ஒன்றில்தான் நான் வேலை செய்தேன். எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அடுத்த தலைமுறைக்கு ரசனை வளர வேண்டுமென்றால் எஜுகேஷன் முக்கியம்.

அது போல் இந்தியாவில் கொண்டுவர சாத்தியமுள்ளதா?

அது ஒரு பெரிய பயணம். நிறைய மனிதர்கள் அதற்காக அங்கே வேலை செய்கிறார்கள். இங்கே அரசாங்க உதவி மூலம் மட்டுமே இந்த விஷயங்களை நடத்த முடியும். இங்கே ஆல் இந்தியா ரேடியோ போல் ஒரு அரசாங்க உதவி கொண்டு மட்டுமே செய்யலாம். தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் சிலரது திறமைகள் வெளிவருகிறது எனினும் அனைத்து திறமைசாலிகளையும் வாழ்வில் மேம்பட்ட நிலைக்கு உயர்த்த இதுபோன்ற ஒரு எஜுகேஷன் அமைப்பு ஏற்பட்டால் நடத்த முடியும்.

சிந்தனையுடன் சொல்லி முடித்த கிரீஷ் கோபாலகிருஷ்ணனுக்கு, அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்தி விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com