
நாட்டில் ராணுவம் உடபட பலரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம், நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விவசாரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை அமைக்கும்படி கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், கடந்த மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியது.
இந்த ஒட்டு கேட்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு, இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டதாவது:
பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை.மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுகேட்புப் பாதிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்.
வழக்கு தொடர்ந்த மனுதாரர்களில் சிலர் செல்போன் ஒட்டுக்கேட்பால் நேரடியாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெகாசஸ் விவகாரத்தில் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுக்கவில்லை. எனவே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்க உத்தரவிடுகிறோம். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு இதுகுறித்த விசாரணை நடத்தும். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி, சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை 8 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடுகிறோம்.
–இவ்வாறு தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளிவைத்தனர்.